சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 1

நடனம் என்பது மனிதனின் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வடிகால். கோபம் ஏற்பட்டால் தாக்க முற்படுவது எப்படியோ, பயம் ஏற்பட்டால் ஒளிந்து கொள்வது எப்படியோ, துக்கம் ஏற்பட்டால் அழுது தீர்ப்பது எப்படியோ, அப்படியே மகிழ்ச்சியின் மிகுதியை நடனமாடித் தீர்ப்பது மனித இனத்தில் இயல்பு. நடனம் ஆதியிலிருந்தே மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தது.
தேவசமுகத்தில் நடனமாடுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதற்கு 2 சாமுவேல் 6-ஆம் அதிகாரம் சாட்சியாக இருக்கிறது. தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள் (2 சாமு 6:5).
பெண்கள் தேவசமுகத்தில் நடனமாடினார்கள் என்று யாத்திராகமம் 15:20 பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள் (யாத் 15:20). தேவன் இருக்குமிடம்தான் தேவசமுகம். ஒரு கட்டிடத்தில்தான் தேவசமுகம் இருக்கிறது என்று நம்புவீர்களானால் தங்களை மறுபடியும் ஆவிக்குரிய நர்சரியில்தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். சமீபகாலங்களில் “ஆராதனையில் நடனமாடலாமா?” என்கிற கேள்வி கிறிஸ்தவத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில இளைய தலைமுறைப் போதகர்கள் சபைக்குள் நடனத்தை trend ஆக்கி விட்டுவிட்டார்கள். இதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் நடனம் என்கிற ஒரு இயல்பான மனித உணர்வின் வெளிப்பாட்டையே ‘அசுத்தம்’ அல்லது ‘பாவம்’ என்று முத்திரை குத்தத் துணிந்துவிட்டார்கள்.
கொஞ்சம் அவர்கள் பக்கம் இருந்து சிந்திப்போம். உண்மையில் அவர்கள் சொல்ல முனைவது என்னவென்றால் “இந்தத் தலைமுறைக்கு தேவபயம் அற்றுப்போய் விட்டது” என்பதைத்தான். தேவனிடத்தில் பயபக்தி அற்றுப்போய்விட்டதன் காரணமாகத்தான் அவர்கள் தேவசமுகத்தில் துணிகரமாக நடனமாடுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறதா என்றால், ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. ஆனால் அது நடனமாடுகிற அந்த தனிப்பட்ட மனிதனின் இருதயத்தைப் பொறுத்தது. இன்று ஆராதனைகளில் தேவபயமில்லாமல் களியாட்டம் போல நடனமாடுகிறவர்கள் உண்டு, அதை ஊக்குவிக்கும் worship leader-களும் உண்டு.
அப்படியானால் இங்கு பிரச்சனை நடனம் அல்ல, தேவபயமின்மைதான் அல்லவா? சரியான தீர்வை எட்ட வேண்டுமானால் நீங்கள் தேவபயமின்மையைத்தானே டீல் பண்ண வேண்டும்? உங்கள் பிரசங்கத்தினால் ஒருவேளை அவர்கள் மனம் குத்தப்பட்டு, அவர்களுக்கு தேவபயம் மீண்டும் வந்துவிட்டதானால் அவர்களே நடனமாடுவதை நிறுத்திக்கொள்வார்கள் அல்லவா?
அதே நேரத்தில் ‘நடன எதிர்ப்பாளர்களிடம்’ கேட்க வேண்டிய ஒரு கேள்வியும் நமக்கு இருக்கிறது. நடனத்துக்குள் மட்டும்தான் தேவபயமின்மை உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? சபைக்குள் காணப்படும் அரசியல், ஜாதி, பொருளாசை, பகை, பரிசேயத்தனம் இதிலெல்லாம் இருக்கும் தேவபயமின்மை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அல்லது அமைதியாக சிலைபோல நின்று ஆராதிப்பவர்களெல்லாம் தேவபயத்தோடுதான் ஆராதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
இதில் இன்னொரு விஷயம், நடனத்தை எதிர்ப்பவர்கள் அதை சினிமாவின் எச்சமாகப் பார்க்கிறார்கள். ஆதியில் சினிமா இல்லை, ஆனால் ஆதியிலிருந்தே நடனம் இருக்கிறது. அது ஒரு அற்புதமான உணர்வின் வெளிப்பாடு, மேன்மையான கலைவடிவம். அதை சரியாக அறிந்துகொண்டுதான் சினிமா அதை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. அதன் நிமித்தம் அது மக்களால் விரும்பவும்படுகிறது.
ஒரு மனிதன் தாவீதைப் போல தனக்கு தேவன் மீதிருக்கும் நன்றியுணர்வின் மிகுதியாலும் சந்தோஷத்தின் மிகுதியாலும் குதித்து நடனமாடுகிறான் என்று சொன்னால் அவனை தடுக்கவோ அல்லது விமர்ச்சிக்கவோ எந்த மீகாளுக்கும் உரிமை இல்லை. நடனமாடாதே என்று தடுப்பது “தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே ..(கொலோ 2:21)” என்பதற்கு ஒப்பான மனுஷீகமான மதவாத போதகம்தான்.
இங்குதான் நமக்கு ஆவிக்குரிய பகுத்தறியும் திறனும் மிகவும் அவசியமாக இருக்கிறது. நடனம் என்பதும் தேவபயமின்மை என்பதும் இருவேறு விஷயங்கள். நடனம் நல்லது, தேவபயமின்மை மோசமானது. நீங்கள் தேவபயமின்மையோடு போராடி தேவபயத்தை(reverence) கொண்டுவருவீர்களானால் அது சபைக்கு மிகவும் நல்லது. சபையின் அங்கமாக அதற்கான அத்தனை உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் நடனம் வேண்டாம் என்று நீங்கள் போராடுவீர்களானால் உங்களை இந்த தலைமுறை “பூமர் அங்கிள்” என்று சொல்லி கடந்து போய்விடும்.