இராயனுக்கு அபயம்

இராயனுக்கு அபயம்

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விரோதமாக யூதர்கள் ரோம அரசிடன் புகார் செய்து விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்து, கொலை செய்யும் நோக்கத்தில் இருந்தார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த பவுல் விசாரணையின் போது மிக ஞானமாக தனது வாயைத் திறந்து சொன்ன ஒரு வார்த்தை ஒட்டு மொத்த சூழலையும் புரட்டிப் போட்டது. அவர் சொன்ன வார்த்தை “இராயனுக்கு அபயமிடுகிறேன் (அப்: 25:11)”

அந்த வார்த்தை விசாரணையின் போக்கையே மாற்றியது, எதிராய் குரலெழுப்பியவர்கள் அடங்கிப் போனார்கள். பவுல் ரோமக் குடியுரிமை பெற்றவர், அந்த நாட்டின் சட்டதிட்டங்களை அறிந்தவர். “இராயனுக்கு அபயம்” என்ற வார்த்தை எவ்வளவு வலிமையுள்ளது என்பதை அறிந்து வைத்திருந்தார். அதைப் போலவே தாவீதும் நெருக்கடியான சூழலில் “தேவனிடத்தில் அபயமிடுதலின்” வலிமையை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். அப்படியொரு சூழலில் தான் தேவனிடத்தில் அபயமிட்டபோது என்ன நடந்தது என்பதை அழகாக எழுதிவைத்திருக்கிறார்.

எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. (சங்கீதம் 18: 6,7)

தொடர்ந்து நடக்கும் காரியங்கள் அந்த அதிகாரம் முழுவதிலும் எழுதப்பட்டிருக்கிறது. வாசித்துப் பாருங்கள், தனது பிள்ளைக்கு ஒரு பிரச்சனையென்றால் ஊரையே அல்லோகலப் படுத்திவிடும் ஒரு பாசக்காரத் தகப்பனைப் போல களமிறங்கிய கர்த்தருடைய வைராக்கியத்தைக் கண்டு தேவதூதர்கள்கூட நடுங்கியிருப்பார்கள். கர்த்தருடைய கோபத்தில் பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கியதாக வேதம் சொல்லுகிறது.

இன்றும் நமக்கு கஷ்டமான சூழல்கள் வரும்போது நாமும் தேவனை நோக்கி அபயமிடுகிறோம். ஆனாலும் அந்த அபயக் குரலுக்கு பரலோகத்தில் இருக்கும் மரியாதையும், அதன் அதிகாரமும் வலிமையும் நமக்கு தெரிவதில்லை. அழுது, புலம்பி, கத்தி, கதறி மனதில் ஒரு ஆறுதல் வந்த பின்னர்தான் நமது ஜெபம் கேட்கப்பட்டதாக ஒரு உறுதி நமக்கு வருகிறது. தேவனிடம் அழுது புலம்புவது தவறல்ல, வேறு யாரிடம் போய் நமது உள்ளக் குமுறல்களைக் கொட்ட முடியும்? ஆனால் அழுது புலம்பியதால்தான் ஜெபம் கேட்கப்பட்டது என்ற எண்ணம்தான் தவறு.

அந்த ஆறுதல் ஜெபம் கேட்கப்பட்டதனால் வந்த ஆறுதல் அல்ல, அதிகமாக அழுது புலம்பியதால் மூளையில் feel-good hormone என்றழைக்கப்படும் எண்டோர்ஃபின் சுரந்ததால் வந்த ஆறுதல். ஆனால் உண்மையில் நீங்கள் ஜெபிக்கும் முன்னரே தேவனிடமிருந்து தீர்வு வெளிப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

தேவகுமாரன் தன்னை தாவீதின் குமாரன் என்று அழைத்துக் கொண்டார், ஆனால் தாவீது தன்னை தேவகுமாரன் என்று அழைத்துக் கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் அவர் பழைய ஏற்பாட்டு தேவனுடைய தாசன்தான். ஆனால் நானும் நீங்களும் தேவனுடைய சுவீகார குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை மறவாதிருங்கள். தாசனாகிய தாவீதின் அபயக் குரலுக்கே அவ்வளவு மரியாதையிருக்குமானால்…பிள்ளைகளாகிய நீங்களும் நானும் அபயமிடும்போது….?

2 Comments
  1. //ஆனால் தாவீது தன்னை தேவகுமாரன் என்று அழைத்துக் கொள்ள முடியாது.//

    இஸ்ரவேலர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று இஸ்ரவேலர்களே கூறுகிறார்களே!
    அதாவது கடவுளை ‘பிதா’ என்று அழைக்கிறார்களே! யோவான் 8:41.

      • Jayaraj Vijaykumar
      • January 24, 2019
      • Reply

      நல்வரவு சகோதரரே! இஸ்ரவேலர் அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திரசுவீகார ஆவியைப் பெற்றிருந்தார்களா சகோ? அப்படியிருந்தால் கிறிஸ்து வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே. பழைய உடன்படிக்கை புதிய உடன்படிக்கையின் நிழலாட்டம் என்ற விதத்தில் இஸ்ரவேலர் பிள்ளைகள் என்று கருதப்பட்டாலும், நிழலும் நிஜமும் ஒன்றல்ல. வாசித்தமைக்கும், பின்னூட்டம் எழுதியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Leave a Reply to Jayaraj Vijaykumar Cancel reply