பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4)
இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி பல ஊழியக்காரர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது என்று எச்சரிக்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு இந்த வசனத்தை சொன்ன சில ஆண்டுகளுக்குள் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தர் சொன்னதற்கு அப்படியே எதிர்மறையான இன்னொரு வசனத்தைச் சொல்லுகிறார்.
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம் (ரோமர் 13:12)
இயேசு இரவு வருகிறது என்கிறார், பவுல் பகல் வருகிறது என்கிறார். இருவருமே சரியாகத்தான் இருக்கமுடியும். ஆனால் நாம் வாழும் காலத்துக்கான தீர்க்கதரிசனமாய் இவ்விரு வசனங்களில் எதை எடுத்துக்கொள்வது?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூமியில் தான் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார் என்று பார்க்கிறோம். இந்த வசனத்தைச் சொல்வதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன் ஒரு பார்வையற்ற மனிதனை குணப்படுத்தியிருந்தார். அந்த மனிதனைக் குறித்து சீஷர்களுடன் நடந்த உரையாடலின்போதுதான் இந்த வசனத்தை அவர் சொல்லுகிறார். இங்கு அவர் குறிப்பிடும் பகற்காலம் என்பது அவர் ஊழியம் செய்த மூன்றரை ஆண்டுகள். அவர் வரப்போவதாகச் சொல்லும் ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் அவர் மரணிக்கப்போகும் தருணம். அந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்த்தால் உங்களுக்கு இது விளங்கும்.
ஆனால் பவுல் குறிப்பிடும் பகற்காலம் என்பது இந்த கிருபையின் காலத்தைத்தான். எனவேதான் பகலில் நடக்கிறவர்களைப் போல அசுத்ததைக் களைந்துபோட்டு, பரிசுத்தராக நடவுங்கள் என்று கூடவே நமக்கு ஒரு கட்டளையையும் கொடுக்கிறார். நீங்கள் நீதியைப் பிரசங்கிக்க விரும்பினால் இது பகல் என்று பிரசங்கியுங்கள். சரி இது பகல்தான், ஆனால் பகல் என்று ஒன்று இருந்தால் இரவு வரத்தானே செய்யும் வரப்போகும் அந்திகிறிஸ்துவின் ஆட்சியை இரவு என்று எடுத்துக்கொள்ளலாமா?
பிரியமானவர்களே! நீங்கள் ஏற்கனவே நீதிமான் ஆகிவிட்டாயிற்று. இனி நாம் இரவைச் சந்திக்க எந்த நியாயமான காரணமும் இல்லை. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும் (நீதி 4:18) என்று வேதம் சொல்லுகிறது. அந்திகிறிஸ்துவின் ஆட்சி என்பது அச்சூரியப் பிரகாசத்தின்போது தற்காலிகமாக சில மணித்துளிகள் மட்டும் வந்து கடந்து செல்லும் கிரகணம் போலத்தான். அது வீட்டுக்குள் இருப்பவர்களை எவ்விதத்திலும் பாதிக்காது.
உங்கள் வீடு தடபுடலாகத் தயாராகிறது என்றால் யாரோ ஒரு விருப்பத்துக்குரியவர் வரப்போகிறார் என்றுதான் அர்த்தம். எதிரியின் வருகையை ஆவலாய் எதிர்பார்த்து எந்த வீடும் தயாராகாது. சர்வ சிருஷ்டியும் வரவேற்கத் தயாராவது இயேசுகிறிஸ்துவைத்தானே தவிர அந்திகிறிஸ்துவை அல்ல. ஏனென்றால் அவர்தான் அனைத்துக்கும் சொந்தக்காரர்.