ராஜாக்களுக்கு ஆண்டவன்

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா கூடாதா என்கிற விவாதம் நெடுநாட்களாக நம் மத்தியில் நடந்து வருகிறது. நம்முடைய உரிமைகளைப் பேச நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்கிற நோக்கில் அநேகர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அது ஏற்புடையதுதான்..ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றி பேசவில்லை. அதாவது மதரீதியான கிறிஸ்தவர்கள் பற்றி பேசவில்லை.

மறுபடியும் பிறந்த, பாலை உண்ணத்தக்க “பிள்ளைகள்(child)” என்ற நிலையில் முழுக்க முழுக்க சார்பு நிலையில் இருக்கும் விசுவாசிகள் பற்றியும் இக்கட்டுரை பேசவில்லை. ஆனாலும் கிறிஸ்துவை அறிவிப்பதிலும், ஊழியத்திலும் பிள்ளைகள் ஆற்றும் பெரும்பங்கை யாரும் மறுக்கவியலாது. பிதா தமது சித்தத்தின் ஒருபாதியை பிள்ளைகளைக் கொண்டே நிறைவேற்றிவிட்டார்.

வார்த்தையை உண்டு ஓரளவு வளர்ந்த, கிறிஸ்துவுக்குள் தான் யார் என்பதை உணர்ந்த, பிதாவின் நன்மையும் பிரியமுமான சித்தம் இன்னதென்பதை பகுத்தறிந்த, விசுவாசத்தை அப்பியாசப்படுத்தி காரியங்களை நிறைவேற்றத் தெரிந்த, கிறிஸ்துவைப் போலவே செயல்படக் கற்றுக்கொண்டிருக்கும் “புத்திரர்(adult)” என்ற நிலையில் இருக்கும் விசுவாசிகள் பற்றியது இந்தக் கட்டுரை.

தேவபுத்திரர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? இது முழுக்க முழுக்க பக்தி, ஆன்மீகம் தொடர்பான வாழ்க்கையல்லவா என்றால், நிச்சயமாக அதுமட்டுமல்ல…இறை “அரசு”, பரலோக “ராஜ்ஜியம்” போன்ற வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். இங்கு ஆரம்பமே அரசியல்தான். அரசியலையும் நம்மையும் பிரிக்கவே முடியாது.

ஆனால் நம்முடைய அரசியல் தேச எல்லைகளுக்கு உட்பட்ட அரசியல் அல்ல. இனம், மொழி, மதம், கட்சி இவைகளுக்கு உட்பட்ட அரசியலும் அல்ல. அரசியல்களம் வானமண்டலங்கள் என்றாலும் அதன் பிரதிபலிப்பும், விளைவுகளும் முழுக்க முழுக்க பூமியில்தான். இங்கே நடக்கும் அரசியல் யுத்தம் “சபை(God’s Kingdom) vs பாபிலோன்(World System)” என்ற இரண்டுக்குமிடையில்தான்.

நம்முடைய எதிர்கட்சியின் தலைவி பொற்பாத்திரத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடை உடுத்தி ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்திருக்கும் மகா வேசிதான்(வெளி 17). அவள் கையிலிருக்கிற பொற்பாத்திரத்தில் உள்ள மதுவினால்(வஞ்சகம்) பூமியின் ஜனங்களையும், ராஜாக்களையும் மதிமயக்கி, போதையில் ஆழ்த்தி, மாயைக்குள் கட்டிவைத்திருப்பது அவளது வேலை. அவளால் மதிமயக்கப்பட்டவர்களின் கண்களை சத்தியத்தைக் கொண்டு தெளிவித்து அவர்களை விடுவித்து அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து இருக்க வேண்டிய நிலைக்கு உயர்த்துவது நம் வேலை. இங்கே நடக்கும் அரசியல் இதுதான்.

அவள் உட்காந்திருக்கும் ஏழு மலைகளை மதம், குடும்பம், கல்வி, அரசு, மீடியா, கலை மற்றும் வணிகம் என்று சில வேதாகம அறிஞர்கள் வகையறுக்கிறார்கள். இந்த ஏழு மலைகளும் அவளுடையது அல்ல, நம்முடையது..பரலோக ராஜ்ஜியத்துக்காக நாம் அந்த ஏழு மலைகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு நம்முடைய பரமபிதா கொடுத்திருக்கும் ஸ்தானமும், அதிகாரங்களும் அளப்பறியவை. இங்கே நாமும் எப்படியாவது ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டு ராஜாக்களுக்கு முன்பாக நின்று நம்முடைய கோரிக்கைகளை அவர்களிடம் வைக்க நமக்கு வாய்ப்பிருக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நம் பரமப்பிதா நமக்கு வைத்திருக்கும் ஸ்தானத்தைப் பாருங்கள்:

ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள் (ஏசாயா 49:23)

ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி…(ஏசா 41:2)

அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள். உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும் (ஏசா 60:10,12)

பிதாவின் நன்மையும், பிரியமுமான சித்தம் என்னவென்று தெரிகிறதா? அதை நிறைவேற்ற இயேசுவைப்போல ஆவியின் பட்டயத்தை எடுத்து நமக்கும் சுழற்றத் தெரிகிறதா? அது மட்டுமே முக்கியம். அது மட்டும் இருந்தால்…

மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும் (மீகா 4:8)

Leave a Reply