மொத்தமா வாங்கலே…

ஆவிக்குரிய கணக்கு எப்போதும் உலகத்தின் கணக்குக்கு நேர்மாறாகத்தான் இருக்கும். ஒருவனுக்கு அதுவரை அவ்வப்போது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த வெவ்வேறு எதிரிகள் ஒரே நேரத்தில் மொத்தமாகக் கூடினால் உலகத்தின் கணக்கைப் பொறுத்தவரை அவர்கள் யாருக்கு எதிராக கூடினார்களோ அவனுக்கு “சோலி முடிஞ்ச்” என்று அர்த்தம்..ஆனால் ஆவிக்குரிய கணக்கின்படி யாருக்கு எதிராகக் கூடினார்களோ அந்த மனிதன் “தேவனுடைய மனுஷனாக” இருந்தால் சோலிமுடியப்போவது அவனுக்கல்ல எதிரிகளுக்கு என்பது “எழுதப்பட்ட” விதி.

“மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” என்று கர்த்தராகிய இயேசு தங்களை ஆன்மீகவாதிகள் என்று கருதிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்பதை மத்தேயு 16:2,3-இல் நாம் வாசிக்கலாம். மார்க்கக் கடமைகளையும், சடங்குகளையும் செய்துவிட்டு “நான் ஆவிக்குரியவன்” என்று மார்தட்டி பிரயோஜனமில்லை. உங்கள் வாழ்க்கையில் நிலவும் ஆவிக்குரிய climate-ஐ வைத்து, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நிதானிக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

கடல் கடும் புயலால் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது கர்த்தராகிய இயேசுவால் படகில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க முடிந்தது, அடித்து நார்நாராக கிழித்துப் போடப்பட்டிருந்த நிலையிலும் பவுலாலும் சீலாவாலும் கர்த்தரை உற்சாகமாகப் பாடித் துதிக்க முடிந்தது, அத்தனை எதிரிகளும் மொத்தமாக சூழ்ந்துகொண்ட வேளையிலும் யோசபாத்தின் ராணுவத்தால் worship service நடத்த முடிந்தது. ஆவிக்குரிய சூழலை நிதானிக்க முடிந்த மனிதர்களால் மட்டுமே இதுபோன்ற மிகக் கடினமான சூழ்நிலைகளில் உலகத்தார் வழக்கமாக ஆற்றும் எதிர்வினைகள்போல அல்லாமல் அவர்களால் கிரகிக்கவே முடியாத முற்றிலும் மாறான, விநோதமான எதிர்வினைகளை ஆற்ற முடியும்.

யூத மார்க்கமும், ரோம வல்லரசும் இயேசுவுக்கு எதிராகக் கைகோர்த்துக்கொண்டது. கூடவே இருந்த சீஷன் துரோகியாய் மாறிப்போனான், பொதுமக்கள் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று தீர்ப்பே எழுதிவிட்டார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, காலம்கூட அவருக்கு எதிராக மாறிப்போனது. இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்று அவரே சொன்னதாக லூக்கா 22:53 சொல்லுகிறது. யுகாயுகங்களாக ஸ்திரீயின் வித்தை அழிக்க நல்ல தருணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த பாதாள சேனையும் மொத்தமாய் அவர்மீது பாய்ந்தது..

அவரோ எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. “மொத்தமா வாங்கலே..சுத்தமா முடிக்கிறேன்..” என்பது போல துணிச்சலுடன் ஒத்தையாகப் போய் அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டார். என்ன நடக்கப்போகிறது, என்னமாய் அது முடியப்போகிறது என்பதைப் பற்றிய முழுநிச்சயமுடையவராக அவர் இருந்தார். பல ஆயிரமாண்டுகளாக நமக்கு எதிராக இருந்த கணக்கை சுத்தமாக முடித்துவைத்தார்.

நமக்கு எதிராக உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு எதிராகப் போராடும் ஆவிகள், பிரச்சனைகளுக்குக்கூட இது பொருந்தும். சினிமாவில் அத்தனை வில்லன்களும் ஹீரோவுக்கு எதிராக மொத்தமாக சேர்ந்தால் அது climax fight என்று அர்த்தம். அது எப்போதுமே ஹீரோவுக்கு சாதகமானதுதான். அதையே வேதாகம ரீதியில் சொல்லப்போனால் இது போன்ற சூழலை நீங்கள் சந்திக்கிறீர்களென்றால் “உன் துக்க நாட்கள் முடிந்து போனது. இனி எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது” என்று பொருள்.

Leave a Reply