எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு, காரணமின்றி நம்மைக் காய்காமாரமாக பார்க்கும் ஒரு அதிகாரிக்குக் கீழே வேலை செய்வது எவ்வளவு கஷ்டம்! நம்மைச் சுற்றி அதேபோல 1000 பேர் இருந்து அவர்கள் நடுவில் வேலைசெய்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்! உடையிலிருந்து, உடல்மொழி வரை அத்தனையும் ஈவு இரக்கமின்றி விமர்ச்சிக்கப்படும்.
எந்த நிபந்தனையுமில்லாமல் நம்மை உயிராக நேசிக்கும் ஒரு நண்பனுடன் இணைந்து செயல்படுவது எத்தனை இனிமையானது! அதே போல நம்மை நேசிக்கும் 1000 பேர் இருந்து அவர்கள் நடுவில் பணியாற்றுவது எவ்வளவு உற்சாகமாக இருக்கும்! இவர்களுடனே இப்படியே காலெமெல்லாம் இருந்து விடமாட்டோமா என்று தோன்றுமல்லவா!
இந்த இரண்டு அனுபவங்களையும் மாறி மாறிப் பெறுவதுதான் ஒரு ஊழியக்காரனின் அனுபவம். நம்மை தம்முடைய குமாரனின் சாயலில் வளர்க்கும்படி கர்த்தரே இந்த இரு அனுபவங்களையும் வைத்திருக்கிறார். அடிப்பவரும் காயங்கட்டுபவரும் அவரே!
நான் இன்னும் குறையுள்ளவர்களாக இருக்கிறபடியால் நம்மை பண்படுத்தும்படி நமக்கு முதல் அனுபவம் தேவையாக இருக்கிறது. இல்லாவிட்டால் “இது தேவசப்தம்” என்று ஆர்ப்பரிக்கும் ஒரு கூட்டத்தை தன்னை சுற்றி வைத்துக்கொண்டு தேவதூதனால் அடிக்கப்பட்டு புழுபுழுத்து செத்த ஏரோதின் கதை போல நம் கதையும் ஆகிவிடும்.
குறையுள்ள நமக்கு சரி, குறையற்ற இயேசு ஏன் இந்த வழியாக கடந்து செல்ல வேண்டும்? அவர் மட்டும் இந்தப் பாதை செல்லாவிட்டால் நமக்கு முன்மாதிரி ஏது? உமக்கென்ன ஆண்டவரே, நீர் ஊழியம் செய்தபோது உமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என் நிலைமை உமக்கு என்ன தெரியும்? என்று நாம் அவரையே குறைத்து மதிப்பிட்டு விடுவோம்.
குறைகள் நம்மில் இருந்தாலும் நாம் தேவனால் மிகவும் நேசிக்கப்படுபவர்களாக இருக்கிறபடியால்தான் இந்த இரண்டாவது அனுபவத்தை கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். நம்மை உயிரென நேசித்து ஊழியத்தில் உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகள் இல்லாவிடில் நாம் மனக்கிலேசத்தில் நொறுங்கியே போய் விடுவோம். தேவன் தமது அன்பை கிறிஸ்துவுக்குள்ளான நமது சகோதர சகோதரிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்த இரு தரப்பாருமே நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நன்மை செய்பவர்களே! இருவரையும் நாம் நேசிக்கத்தான் வேண்டும். முதல் தரப்பார் இரண்டாம் தரப்புக்கு மாறுவதும், இரண்டாம் தரப்பார் முதல் தரப்புக்கு மாறுவதும் சாத்தியமே!
பின்னவர்கள் இனிப்பான உணவென்றால், முன்னவர்கள் கசப்பான மருந்து. மருந்து, உணவு இரண்டுமே நமக்கு அவசியம்! இரண்டையும் நமக்குக் கொடுக்கும் நமது தகப்பன் நம்மை வளர்த்தெடுப்பதில் அத்தனை அக்கறையுள்ளவர்!