பொங்கி வழியும் பரிபூரணம்

ஏதேன் தோட்டத்தில் தேவன் ஏன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை வைத்தார் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ஏன் தேவன் அங்கு ஜீவ விருட்சத்தை வைத்தார் என்று யாரும் கேட்பதில்லை. ஆதாமும் ஏவாளும் மரணிப்பவர்களாகப் படைக்கப்படவில்லையே! அவர்கள் நித்தியமாக ஜீவிக்கிறவர்களாகத்தானே படைக்கப்பட்டார்கள் பின்பு ஜீவ விருட்சத்துக்கான அவசியம் அங்கு ஏன் வந்தது?

ஜீவன் என்பது மரணம் அற்ற நிலை என்பது நமது பூமிக்கேற்ற சிற்றறிவின் புரிதல். ஆனால் இறையரசில் ஜீவன் என்பது பெருகிக் கொண்டே இருக்கும் ஒரு உன்னத ஆசீர்வாதம். ஜீவ விருட்சத்தின் கனி நம்மில் ஜீவனைப் பெருகச் செய்கிறது. எனவேதான் கர்த்தராகிய இயேசு நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது “பரிபூரணப்படவும்” வந்தேன் (யோவான் 10:10) என்றார்.

நித்திய இராஜ்ஜியத்தின் புதிய எருசலேமில் பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருப்பதாகவும், அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள் என்றும் வெளி 22:2 சொல்லுகிறது. நோயே இல்லாத இடத்தில் ஆரோக்கியத்தைத் தரும் இலைகள் எதற்கு? நோயால் தாக்கப்படாத நிலைதான் ஆரோக்கியம் என்பது நமது பூமிக்கேற்ற சிற்றறிவின் புரிதல். ஆனால் இறையரசில் ஆரோக்கியம் என்பது பரலோகவாசிகளின் இயல்பான, ஆனால் உன்னத தெய்வீக ஆசீர்வாத நிலை.. இந்த ஆசீர்வாதம் எல்லையில்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

பாவமே செய்ய முடியாத, பாவமே அண்டாத ஒரு இடத்தில் ஏன் கர்த்தரை பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஆராதிக்கிறார்கள்? பாவத்தை விட்டு விலகி ஜீவிப்பதுதான் பரிசுத்தம் என்பது நமது பூமிக்கேற்ற சிற்றறிவின் புரிதல். பரிசுத்தமும் பெருகக்கூடியது…எனவேதான் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று வெளி 22:11 சொல்லுகிறது. “கர்த்தருடைய பரிசுத்தம்” என்பதோ மொழிகளால் விவரிக்கப்பட முடியாத உச்சபட்ச தெய்வீக நிலை! எனவேதான் இந்நிலை பயபக்தியுடன் ஆராதிக்கப்படுகிறது!

சபிக்கப்பட்டு, மாயைக்குள் கட்டுண்டு கிடக்கும் பூமியில் வசிக்கும் நாம் எப்படி பரிசுத்தம் என்றால் பாவம் அற்ற நிலை என்று எப்படி பாவத்தை வைத்து பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளுகிறோமோ அப்படித்தான் பரலோகவாசிகள் பாவம் என்றால் பரிசுத்தமற்ற நிலை என்பறு பரிசுத்தத்தை வைத்து பாவத்தைப் புரிந்துகொள்வார்கள் போலும்..

வெறும் ஜீவனல்ல பரிபூரண ஜீவன்…வெறும் மகிமையல்ல
மகிமையின்மேல் மகிமை… எங்கும் எதிலும் பொங்கி வழியும் பரிபூரணம்…இதுதான் நம் அப்பாவின் இராஜ்ஜியம்!

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply