நீதிமானின் பழக்கம்

இன்று வேதம் வாசிக்கையில் எழுந்த சில சிந்தனைகள்: ஆதியாகமம் புத்தகம் பெருவெள்ளம் ஏற்ப்பட்ட காலங்களில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலம் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் இருந்தனர் என்று சொல்லுகிறது. தனது 600-வது வயதில் பேழைக்குள் போன நோவா (ஆதி 7:11) ஒரு ஆண்டு கிட்டத்தட்ட கழித்து தனது 601-வது வயதில் (ஆதி8:13) வெளியே வருகிறார்.

அந்த ஒரு ஆண்டில் பூமி முற்றிலும் புதிதாக்கப்பட்டிருக்கிறது. இப்போது பூமியில் வெறும் 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள் (1 பேதுரு 3:20). ஒரு கடினமான சூழலில் ஒரு வருடமாய் பேழைக்குள் அடைபட்டுக் கிடந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்! வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க எவ்வளாய் ஏங்கியிருப்பார்கள்! திருமணமான நோவாவின் குமாரர் மூவருக்கும் அதுவரை குழந்தை இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோரும் குழந்தைகளும் பேழைக்குள் பட்டிருக்க வேண்டிய கஷ்டத்தை தவிர்க்க எண்ணியோ என்னவோ கிருபையுள்ள தேவன் தாமதித்து ஜலப்பிரளயத்துக்கு பின்னரே அவர்களுக்கு குழந்தைப் பேறு அளித்தார்.

பேழையை விட்டு வெளியே வந்தவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்! நாமாயிருந்தால் என்னவெல்லாம் செய்திருப்போம்? சந்தோஷத்தில் கால் வலிக்குமட்டும் எங்கெங்கோ ஓடி ஆடி மகிழ்ந்திருந்திருப்போம்! அல்லது எங்கே கூடாரம் போடுவது? எங்கே பயிரிடுவது? எங்கே வீட்டு விலங்குகளை மேய்ப்பது? சேம், காம், யாப்பேத் யார் யார் எந்தெந்த இடங்களை சுதந்தரித்துக் கொள்வது? எந்தெந்த மிருகங்களை யார்யார் பங்குபிரித்துக் கொள்வது இப்படி பல விஷயங்களை குடும்பமாக ஆலோசித்து விவாதித்து தர்க்கித்து ஏன் சண்டைகூட போட்டிருந்திருப்போம்.

ஆனால் நோவா செய்த காரியத்தை வாசிக்கும்போது மெய் சிலிர்த்தது. பேழையில் இருந்து வெளியே வந்த முதல் வேலையாக…

நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான் (ஆதி 8:20)

தேவனோடு சஞ்சரிக்கும் ஒரு நீதிமானின் இருதயமும் அவன் பழக்கமும் இதுவாகத்தான் இருக்கும்! ஒருவேளை நோவாவும் அவர் குடும்பமும் இதைச் செய்யாமல் நான் மேலே சொன்னவைகளை செய்திருப்பாரென்றால் கீழ்கண்ட அத்தனை ஆசீர்வாதங்களையும் நோவாவும் நாமும் இழந்திருப்போம்.

1. நோவாவின் பலியை கர்த்தர் சுகந்தவாசனையாக முகர்ந்தார் (வச:21)
2. பூமியின்மீது கருணை கொண்டார் (வச 21)
3. இனி இன்னொரு ஜலப்பிரளயம் வராதென வாக்குப் பண்ணினார் (வச 21)
4. நாம் உண்ண விவசாயத்துக்கேற்ற காலநிலைகளை வாக்குப்பண்ணினார் (வச 22)
5. நமது பாட்டன் நோவாவையும் அவர் குடும்பத்தையும் அவர்கள் வித்தாகிய நம்மையும் ஆசீர்வதித்தார் (ஆதி 9:1)
6. மனுக்குலத்தோடு உடன்படிக்கை பண்ணினார்.(9:10-17)

கர்த்தரை முதலாவது வைத்து அவரை கனப்படுத்துவதில் இருந்தே அத்தனை ஆசீர்வாதங்களும் தொடங்குகிறது. ஆம், அவர் அந்த கனத்திற்கும் அதிலும் அதிகமான கனத்திற்கும் உரியவரே!

5 thoughts on “நீதிமானின் பழக்கம்”

 1. Thank you for sending your article after a long period. Please continually
  send this to my e mail.

  C.Victor

  2017-03-19 20:42 GMT+05:30 Bro.VIJAY :

  > சகோ.விஜய் posted: ” இன்று வேதம் வாசிக்கையில் எழுந்த சில சிந்தனைகள்:
  > ஆதியாகமம் புத்தகம் பெருவெள்ளம் ஏற்ப்பட்ட காலங்களில் கிட்டதட்ட ஒரு ஆண்டு
  > காலம் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் இருந்தனர் என்று
  > சொல்லுகிறது. தனது 600-வது வயதில் பேழைக்குள் போன நோவா (ஆதி 7:11) ஒர”
  >

Leave a Reply