நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கிறேன்

ஒரு மருத்துவரிடம் ஒரு வியாதிக்காரன் வந்தால் அந்த மருத்துவர் அவனை பரிசோதித்துப் பார்த்து உங்களுக்கு இன்ன வியாதி இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லுவார். அதை அவர் ஒருதரம்தான் சொல்லுவாரேயன்றி ஒவ்வொருதரமும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். அந்த நபர் முற்றிலும் குணமடையும்வரை அடுத்தடுத்த சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் அவர் குணமடைவதற்கான காரியங்களைச் செய்வாரேயன்றி உனக்கு இன்னின்ன வியாதி இருக்கிறது என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு அதற்கு “கட்டணமும்” வசூலித்துக்கொண்டிருக்கமாட்டார்.

அந்த வியாதிக்காரனுக்கு தான் வியாதிக்காரன் என்று ஏற்கனவே நன்றாகத் தெரியும். அவனுக்குத் தேவை தீர்வுதான். ஒரு வியாதிக்காரனிடம் அவனுக்கான தீர்வைச் சொல்லாமல் அவன் வியாதியாயிருப்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை “காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்” என்று வேதம் அழைக்கிறது.

கடுமையான பிரச்சனைகளின் மத்தியில் தீர்வுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பக்தனாகிய யோபுவிடன் அவரது நண்பர்கள் வந்து அவருடைய பிரச்சனையைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு நன்மையையும் உண்டாக்க முடியாத விஷயங்களை அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். யோபு அவர்களை நோக்கி…

நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்… நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும் (யோபு 13:2-5) என்று சொல்லுகிறார்.

ஏற்கனவே ஜென்ம சுபாவத்தோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு விசுவாசியிடம் போய், “நீ குறைவுள்ளவனாக இருக்கிறாய், கிறிஸ்தவம் என்பது இதுவல்ல, உன்னிடம் விசுவாசிக்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. நீ உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும் இதுபோன்றதுதான். இதுபோன்ற ஆலோசனைகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பாக நிருபங்களில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கர்த்தராகிய இயேசுவும் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளிடம் பேசும்போது அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்கிறார். ஆனால் அது ஒரு வியாதிக்காரனிடம் மருத்துவர் அவனுடைய வியாதி என்ன என்பதை ஒருதரம் சுட்டிக்காட்டுவது போன்றதுதான்.

ஒரு வியாதிக்காரனிடம் “நீ சாகப்போகிறாய்” என்று சொல்வதற்கு ஒரு வைத்தியன் தேவையில்லை. “நான் ஜென்மசுபாவத்தோடு போராடிக்கொண்டிருக்கிறேன், என்னால் கனிகொடுக்க முடியவில்லை” என்ற வேதனையில் இருக்கும் விசுவாசியிடம் “கனிகொடுக்காத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்” என்று சொல்ல ஒரு ஊழியக்காரன் தேவையில்லை. தேவன் கொடுத்த அழைப்பும் அபிஷேகமும் அதற்காக அல்ல.

புதிய சிருஷ்ட்டி என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொடுங்கள். மனம் புதிதாகிறதினால் மறுரூபம் ஆவது எப்படி என்பதை போதியுங்கள். கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறவனை பாவம் எப்படி மேற்கொள்ள முடியாது என்பதைப் பேசுங்கள். தேவனால் பிறந்தவனால் எப்படி பாவம் செய்ய முடியாது என்பதை அறிவியுங்கள். அவனுக்குள் இருக்கும் பிதாவின் வித்து எப்படிப்பட்டது என்பதை திரும்பத் திரும்ப நினைவுபடுத்துங்கள். அதுதான் தீர்வு..அது மட்டுமே தீர்வு!!

Leave a Reply