பாவம் ஒரு இரயில் இஞ்சின் என கொண்டால் அதைத் தொடர்ந்து வரும் குற்ற மனசாட்சி, துக்கம், தேவசமூகத்தை விட்டு விலகி ஓடும் எண்ணம் அதனால் ஏற்படும் ஆவிக்குரிய பலவீனம், தன் விளைவாக மீண்டும் பாவத்தினால் வீழ்த்தப்படும் நிலை ஆகியவை அந்த இஞ்சினோடு இணைக்கப்பட்ட டிரக்குகள் போல…
கிறிஸ்தவ உலகம் அந்த இஞ்சினை மட்டும்தான் தீமையாகப் பார்க்கிறதேயொழிய அதனோடு இணைக்கப்பட்ட முதல் இரு டிரக்குகளாகிய குற்ற மனசாட்சியையும், அதனால் ஏற்படும் துக்கத்தையும் கொஞ்சம் நல்ல விஷயமாகவே பார்க்கிறது. எப்படியெனில் குற்ற மனசாட்சியும் அதனால் ஏற்படும் துக்கமும் நம்மை மீண்டும் பாவம் செய்யக் கூடாதபடி நமக்கு எச்சரிப்பு உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்தும் என்று பலர் எண்ணுகிறார்கள். இதற்கு ஆதாரமாக அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வசனம் என்னவென்றால்…
2 கொரிந்தியர் 7: 10,11
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
இந்த வசனத்தை முன்பிருக்கும் வசனங்களோடு சேர்த்துப் படித்தால் எழுதப்பட்டிருப்பத்கு என்ன என்பது புரியும்.
வசனம் 8: “நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.”
பவுல் தனது நிருபத்தில் எழுதிய சில காரியங்களால் கொரிந்து சபை மக்களுக்கு தேவனுக்கேற்ற துக்கம் உண்டாகியிருக்கிறது. பின்னர் அது “பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை” உண்டாக்கியிருக்கிறது. இதையும் பாவம் செய்தபின் ஏற்படும் மனோதுக்கத்தையும் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். இந்த வேதபகுதி அதைக் குறித்து எழுதப்பட்டதல்ல.
இன்று பல கிறிஸ்தவர்கள் தாங்கள் பாவத்தை அனுபவித்ததைவிட பாவம் செய்தபின்னர் வருகிற துக்கத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள். அப்படி அனுபவித்து துக்கித்து சாம்பலில் உட்காந்து கிடப்பது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்றும், அது ஆவிக்குரியது என்று நம்புகிறார்கள். நிச்சயமாக இல்லை..இரயில் இஞ்சினோடு சேர்த்து அதன் அத்தனை டிரக்குகளும் புறக்கணிக்கப்பட வேண்டியவை. குற்றமனசாட்சி உங்களை தேவசமூகத்தைவிட்டு விலக வைக்கும், அப்படி விலகுவது உங்களை பலவீனப்படுத்தும், அந்த பலவீனம் மீண்டும் உங்களை அதே பாவத்தில் வீழ்த்தும். எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
நான் கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்பட்டேன் என்ற உணர்வு மட்டுமே நம்மை பாவத்தில் இருந்து விடுவிக்கும். உங்கள் தகுதியை மறந்து ஒருவேளை நீங்கள் பாவத்தில் விழுந்துவிட்டாலும் சாக்கடைக்குள் தவறி விழுந்த செம்மறி போல உடனடியாக சிலிர்ந்து எழுந்து, தேவனிடம் அறிக்கையிட்டு, கிறிஸ்துவுக்குள் நீதிமான் என்ற ஸ்தானத்தில் நீங்கள் நிலை நிறுத்தப்பட்டிருப்பதை உங்களுக்குள் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்னவே ஏற்றுக்கொள்ளப்பட்டாயிற்று. நீங்கள் இனி பழைய மனிதல்ல…