செயற்கை நுண்ணறிவு சபைகள்

இந்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் போப் வாட்டிகனில் மற்ற மதங்களின் தலைமை குருக்களோடு ஒரு சந்திப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல். சந்திப்புக்கான காரணம் Artificial Inteligence(AI) அதாவது செயற்கை நுண்ணறிவு உலக மதங்களின் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைக் குறித்து விவாதிக்கத்தான். உண்மையில் மதத் தலைவர்கள் மிரண்டுதான் போயிருக்கிறார்கள். கிறிஸ்தவம் AI மயமாகப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுதே AI பல சபைகளில் பயன்பாட்டில் இருக்கிறது. கிறிஸ்தவம் முற்றிலும் AI மயமானால் எப்படி இருக்கும் என்ற சிறிய கற்பனையே இக்கட்டுரை.

நிறுவனமயமாக்கப்பட்ட சபைகளில் இதுவரை பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்காமல் மனிதன் பிடித்து வைத்துக்கொண்டிருந்த இடத்தை இப்போது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக AI பிடுங்கிக் கொள்ளப்போகிறது. இதற்கு மாற்று மனிதன் ஒன்று தனது சுயத்தை முற்றிலுமாகக் கொன்று சிங்காசனத்தை மறுபடி ஆவியானவரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது தனது இடத்தை AI-யிடம் ஒப்படைத்துவிட்டு அதனிடம் சரணாகதி ஆகவேண்டும். பெரும்பாலும் பிந்தினதே நிகழும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

கிறிஸ்தவம் மட்டுமல்ல, மற்ற மதங்களின் நிலையும் இதுதான். AI-ஐ ஏற்றுக்கொள்ளும் அத்தனை மதங்களும் அசுர வளர்ச்சியடையும். AI-யின் ஆளுகைக்குள் மதங்கள் வந்துவிட்ட பின்னர் அறிவியலுக்கும், மதங்களுக்குமான மோதல் முற்றுப்பெற்றுவிடும். மற்ற மதங்களின் வளர்ச்சி கிறிஸ்தவத்தின்மீது ஒரு நிர்பந்தத்தைத் திணிக்கும். AI-யை முழுமையாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்தான் அது.

நம்முடைய தலைவர்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது, ஒரு தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்போது அது 666, அந்திகிறிஸ்து, பிசாசு என்பார்கள். அந்த தொழில்நுட்பத்தை தவிர்க்கவே முடியாது என்ற நிலை வரும்பொழுது “கர்த்தர் கொடுத்த தொழில்நுட்பத்தை நாமும் பயன்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்” என்பார்கள். AI என்பது வேறு ஒன்றுமல்ல வெளி 13:15-இல் சொல்லப்பட்ட பேசும் மிருகம் இதுதான் என்பார்கள். சில காலம் கழித்து “அந்த பேசும் மிருகம்” “கர்த்தர் தந்த தொழில்நுட்பம்” ஆக மதம் மாறி ஞானஸ்நானமும் பெற்றுவிடும்.

சபை மக்களைப் பொருத்தவரை இரண்டுக்குமே தலையாட்டுவார்கள். ஒரு விஷயத்துக்குப் பின்பாக இருப்பது பரிசுத்த ஆவியானவரா இல்லையா என்பது அவர்களுக்குப் பிரச்சனையே இல்லை. அதை அவர்கள் ஆராயப்போவதும் இல்லை. ஏனெனில் இதுவரை அவர்கள் அப்படி ஆராய்ந்ததில்லை. எனவேதான் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் இங்கு பெருகியிருக்கிறார்கள். எனவெ பல சபைகள் AI-யை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும். அப்படி ஏற்றுக்கொள்ளும் சபைகள் துரிதமாக வளரும். எனவே மற்ற சபைகளும் அதை ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்துக்குள் தள்ளப்படும்.

சரி ஒரு செயற்கை நுண்ணறிவு சபையில் என்னதான் நடக்கும்!

எவ்வளவு பெரிய பிரசங்கியாராக இருந்தாலும் அவரது அறிவு என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். ஆனால் செயற்கை நுண்ணறிவிடம் உள்ள தகவலோ கடல் போன்றது. கிறிஸ்தவம் மட்டுமன்றி சுமேரியர் காலத்திலிருந்து தோன்றிய மதங்கள் அத்தனையும், அவைகளின் வரலாறும், போதனைகளும், நம்பிக்கைகளும் அதற்கு அத்துப்படியாக இருக்கும். “ChatGPT, விசுவாசம் என்ற தலைப்பில் ஒரு மணி நேர செய்தி ஒன்றை ஆயத்தம் செய்து கொடு” என்று கேட்டால், அது பதிலுக்கு “செய்தி தகவல்கள் நிறைந்ததாக வேண்டுமா? நகைச்சுவையோடு வேண்டுமா? சீரியஸான செய்தியாக வேண்டுமா?” என கேட்கும். அதற்கான பதிலை நீங்கள் கொடுத்தால் விசுவாசம் சம்பந்தப்பட்ட அற்புதமான செய்தி ஒன்றை சில நொடிகளில் உங்களுக்குத் தந்துவிடும், எவ்வளவு நேர மிச்சம்!!!

சபையில் ஒரு கணவன் மனைவிக்கு இடையில் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்ளுங்கள், மேய்ப்பரிடம் வந்தால் இரண்டு பக்க வாதங்களையும் கேட்டுவிட்டு பெரும்பாலும் டெம்பிளேட்டாக சொல்லும் ஒரே ஆலோசனை “கணவன் மனைவி இருவரும் தினமும் காலையும், இரவும் முழங்காற்படியிட்டு கைகோர்த்து ஜெபம் பண்ணுங்கள்” என்பதே. ஏனெனில் ஜெபம் என்பது சர்வரோக நிவாரணி, அதைச் செய்தாலே பிரச்சனையில் பெரும்பகுதி தீர்ந்துவிடும் என்ற புரிதல் நமக்கு இருக்கிறது.

ஆனால் AI அப்படிப் பண்ணாது, கணவன், மனைவி இருவரின் அந்தரங்கங்கள், மருத்துவத் தகவல்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள் அத்தனையையும் வேவுபார்த்து இருவரது ஜாதகத்தையும் தனது விரல்நுனியில் வைத்திருக்கும். அதனிடமிருந்து தப்பவே முடியாது. இருவருக்குமிடையே இருக்கும் பிரச்சனையின் ஆணிவேரை ஆராய்ந்து அதற்கேற்ற வேதவசனங்களைச் சேர்த்து ஒரு அற்புதமான தீர்வை அவர்களுக்குத் தந்துவிடும்.

இனி போதகர் தேர்வு, சபை நிர்வாகிகள் தேர்வு, பாடகர்குழு தேர்வு அத்தனையையும் AI-யே பார்த்துக்கொள்ளும். எனவே நீதிமன்றம் வரை செல்லும் தேர்தல் தகறாறுகள் இனி இருக்காது. கணக்கு வழக்குகளிலும் பிரச்சனைகள் இருக்காது. அத்தனையும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும். AI உதவியுடன் choir-கள் கூட மேம்பட்டதாக மாறிவிடும். எபிரேய, கிரேக்க, அரமேய மூல மொழிகளை புரிந்துகொள்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எல்லாம் இருக்கும் ஆனால் இயேசு…..

அட அத விடுங்க… இப்ப மட்டும் அவர் இருக்கார், இல்லை என்று கவலைப்பட்டோமா என்ன?

நான் நிறுவனமயமாக்கப்பட்ட சபைகளைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். எக்ளீஷியா, மணவாட்டி, கண்ணுக்குப் புலப்படாத அந்த சர்வாங்க சபை தனது பரிசுத்தப் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அது களங்கமடைவெதே இல்லை…

அது சரி, ஆனால் அந்த மணவாட்டி இப்போது நிறுவனமயமாக்கப்பட்ட சபைக்குள்தானே முள்ளுகளுக்குள் லீலிபுஷ்பம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறது? அது இந்த புதிய சவாலை எப்படி சந்திக்கப்போகிறது? நிச்சயம் தேவன் அதற்கு ஒரு தீர்வு வைத்திருப்பார், தேவையான நேரத்தில் அதை செயல்படுத்தவும் செய்வார். அந்த தீர்வு என்ன என்று என்னிடம் கேட்காதீர்கள். அவர் வைத்திருக்கும் தீர்வு என்ன என்று AI-க்கே தெரியாது. எனவேதான் அவர் தேவனாக இருக்கிறார்.

Leave a Reply