சீஷன் vs மதவாதி

இயேசுவை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறவன் மதவாதி, இயேசுவை வழிபடுவதோடு அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுபவன் சீஷன். உலகத்தார் பார்வையில் இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள். தேவன் பார்வையிலே இவர்கள் நேர் எதிரானவர்கள். மதவாதி காயீனின் வம்சத்தான், சீஷன் ஆபேலின் வம்சத்தான். இருவர் மார்க்கமும் எதிரெதிர் துருவங்கள்..நாம் இதில் யாராக இருக்கிறோம்???

Cain-Able

 • பல ஆயிரம்பேர் கூடிவந்தாலும் மதவாதிகளின் கூடுகை சபையல்ல, சிலர் கூடினாலும் சீஷர்களின் ஐக்கியமே சபை.
 • மதவாதிகளின் பிரசங்கம் புளித்தமாவு, அது இம்மைக்குரியவைகளைச் சுற்றியே இருக்கும். சீஷர்களின் பிரசங்கம் ஜீவவிருட்சம். அது இயேசுவைச் சுற்றியே இருக்கும்.
 • மதவாதி உலகத்தோடு ஒத்துப்போய் அதன் மேன்மைகளை அநுபவிக்கிறவன், சீஷனோ எல்லோராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உபத்திரவப்படுபவன்.
 • இருவர் சேர்ந்திருந்தால்கூட மதவாதிகளிடத்தில் அன்பும் ஐக்கியமும் இருக்காது, இருநூறுபேர் கூடிவாழ்ந்தாலும் சீஷர்களிடத்தில் போட்டிபொறாமையும் மாய்மாலமும் இருக்காது.
 • மதவாதி மற்றவர்களை கட்டுப்படுத்தி அவர்களை வழிநடத்த  முயல்வான், சீஷன் தன்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கி தொண்டு செய்வான்.
 • மதவாதி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வான், சொந்தக் குடும்பத்தில் சாட்சி இருக்காது, சீஷனோ தனது சாட்சியை குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறான்.
 • மதவாதி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட சபைப்பிரிவுகளுக்காக  வைராக்கியம் பாராட்டுவான். சீஷன் கிறிஸ்துவின்  மணவாட்டி சபைக்காக வைராக்கியம் பாராட்டுவான்.
 • மதவாதி தரித்திரரையும் திக்கற்றவர்களையும் தூரத்தில் நிறுத்திவைப்பான், சீஷன் திக்கற்றவர்களுக்கும் தரித்திரருக்கும் செய்யும் சேவையை தேவனுக்கே செய்யும் ஊழியம் என்பான்.
 • மதவாதி ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து கொடுப்பவன், சீஷன் கொடுப்பதையே ஆசீர்வாதமாக நினைப்பவன்.
 • மதவாதி தனது இச்சைக்கேற்றபடி தேவனை வளைக்க நினைப்பவன், சீஷனோ தேவசித்தத்துக்கு ஏற்றார்போல  தன்னை வளைத்துக் கொள்பவன்.
 • மதவாதி மனிதரிடம் கற்பவன், அவன் செய்யும் பிரசங்கங்களையும் பேச்சுகளையும் வைத்தே அவன் சபைப்பிரிவை கண்டுபிடித்துவிடலாம். சீஷனோ ஆவியானவரிடம் கற்பவன், அவன் பேசுவது எப்போதுமே புதிதாக இருக்கும்.
 • மதவாதி அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் இரட்டை வாழ்க்கை வாழ்பவன். சீஷனோ எலியாவைப்போல எப்போதும் தேவனுடைய முகத்துக்கு முன்பாக நிற்கிறவன்.
 • மதவாதி பாவத்தை நேசிப்பான் பாவிகளை வெறுப்பான், சீஷன் பாவத்தை வெறுப்பான் பாவிகளையோ கிறிஸ்துவைப்போல நேசிப்பான்.
 • மதவாதிகளுக்கு பக்தி என்பது நிகழ்ச்சிகள்  நடத்துவதும் அவற்றில் பங்கு பெறுவதும், சீஷனுக்கு பக்தி என்பது அனுதின வாழ்வு.
 • மதவாதியின் பக்தி அவனுக்கு மனமேட்டிமையை கொண்டுவரும், சீஷனின் ஞானம் அவனுக்கு மனத்தாழ்மையை கொண்டுவரும்.
 • மதவாதியின் தொழுகை சடங்கு, சீஷனின் தொழுகை ஜீவபலி.
 • மதவாதி தன் மார்க்கத்துக்காக கொலை செய்வான், சீஷன் தன் சகோதரருக்காக ஜீவனைக் கொடுப்பான்.
 • மதவாதி செய்யும் ஊழியம் மதமாற்றமே. இடுக்கமான வாசல் வழியாக நுழைந்த சீஷன் செய்யும் ஊழியமோ “சீஷராக்குதல்”.
 • மதவாதி சிலுவையை அணிகிறவன், சீஷன் சிலுவையை சுமக்கிறவன்.
 • மதவாதி இரண்டத்தனையான நரகத்தின் மகன், சீஷனோ இரட்டிப்பான நன்மைக்கு சொந்தக்காரன்.

இயேசுவின் சீஷர்களுக்கு இம்மையில் உலகத்தோடு பங்கில்லை, மதவாதிகளுக்கு மறுமையில் இயேசுவோடு பங்கில்லை. நீங்கள் மதவாதியா? சீஷரா?

 

3 thoughts on “சீஷன் vs மதவாதி”

 1. //மதவாதி அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் இரட்டை வாழ்க்கை வாழ்பவன். // – நன்றாய்ச் சொன்னீர்கள்.

  தான் வாழ்வது இரட்டைவாழ்கை என்று தெரியாத மதவாதி வாழ்வது இன்னமும் கேடான வாழ்வு. இதை உணராதவன் ஒருபோதும் சீஷனாகவே முடியாது.

  சுவிசேஷம் சொல்பவர்களுக்கு கூட, மத்தேயு 28:19ல் “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் ” சீஷராக்கி”!” என்றுதான் கிறிஸ்து சொன்னாரேயன்றி “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் கிறிஸ்தவனாக்கி” என்றோ “மதம்மாற்றி/” என்றோ சொல்லவில்லை.

  சீஷனாகாவிட்டில் பரத்தில் பங்கில்லை.

Leave a Reply