பாவம் இந்த உலகத்துக்குள் நுழைந்தபோது கூடவே வந்த இன்னொரு விஷயம் மாயை. அதை வஞ்சகம் அல்லது போலித்தோற்றம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். பாவம், மாயை என்ற இரண்டுமே நமது ஐம்புலன்களைப் பயன்படுத்தித்தான் நம்மை ஆளுகின்றன.
இருளானது பொருட்களை மறைக்கிறது. ஆனால் அந்தப் பொருட்களை மறைப்பது இருளாகிய தாம்தான் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். நம்மால் இருளைப் பார்க்க முடியுமல்லவா? ஆனால் மாயை என்பதோ பொருளையும் மறைத்து அதை மறைப்பது தாம்தான் என்பதையும் மறைத்துவிடும். எனவேதான் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாமே அதிகமாக பிரசங்கிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான் (பிரசங்கி 1:2 )
நீங்கள் கர்த்தருடைய ஆலயம், கர்த்தர் உங்களுக்குள் வசிக்கிறார் அவர் உங்களைச் சூழ்ந்திருக்கிறார் என்பது ஆணித்தரமான உண்மை. ஆனால் நமது ஐம்புலன்கள் நமக்கு எதைக் காட்டுகின்றன? இன்று இரகசிய பாவங்களுக்கு விரோதமாக பிரசங்கிக்கும்போது கர்த்தர் உன்னுடன் அந்த அறையில் இருக்கிறார் என்றால் நீ அந்த பாவத்தை செய்வாயா? கர்த்தர் உன்னுடன் இருக்கிறார், அவர் கூடவே வருகிறார் என்று கற்பனை செய்துகொள் அப்போது பாவம் செய்ய மாட்டாய் என்று போதிக்கும் அளவுக்கு வந்து விட்டோம்.
ஆனால் அதைக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இல்லாத ஒன்றைத்தான் நாம் கற்பனை செய்ய வேண்டும். கர்த்தர் நமக்குள்ளும் நம்மைச் சூழ்ந்தும் இருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆனால் நாம்தான் நமது ஐம்புலன்களை நம்பி “அவர் இங்கே இல்லை” என்று கற்பனை செய்துகொண்டு மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் (யோனா 2:8)
ஆவிக்குரிய வாழ்க்கையில் உச்சநிலை என்றால் நமது ஐம்புலன்கள் வழியாக தேவனை உணரும் நிலைக்கு வளர்வது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் ஐம்புலன்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாது. நமக்குத் தேவை விசுவாசக் கண்கள். அந்தக் கண்களைக் கொண்டு மட்டுமே நாம் உன்னதத் தளங்களுக்குள் ஏறிச்செல்ல முடியும்.
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (II கொரிந்தியர் 5:6)