இதுதான் பரலோக கெத்து!

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2)

இது ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இன்னும் பல நூறாண்டுகள் கழித்து நடக்கப்போகும் ஒரு விஷயத்தை ஏற்கனவே நடந்து முடிந்தது போல டிக்ளேர் செய்திருக்கிறது பரலோகம்! இது எப்படி சாத்தியம்!!

ஒருவேளை மனுஷகுமாரன் பிறப்பதற்கு சரியான சூழல் பூமியில் அமையுமா? அப்படிப் பிறந்தாலும் இந்த கோணலும் மாறுபாடுமான உலகத்தில், அதுவும் நன்மையே வராத நாசரேத்தில் அவரால் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியாக வாழ்ந்து காட்ட முடியுமா? சிலுவையின் கோரப் பாடுகளை அவரால் சமாளிக்க முடியுமா? அவர் சமாளித்து வென்றாலும் இந்த பலவீனமான மனிதர்களை நம்பி மார்க்கத்தை அவர்கள் கையில் கொடுக்க இயலுமா என்றெல்லாம் பரலோகம் சந்தேகத்துடன் ஆராய்ந்து கொண்டு இருந்திருக்குமானால் பெத்லகேமில் இயேசுவின் பிறப்பு எதிரிக்குக் தெரியாமல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கும்.

ஆனால் இயேசு பிறந்தபோது பரலோகமோ நடுவானில் ஒரு நட்சத்திரத்தைத் தொங்கவிட்டு தூதர்களின் இசைக்கச்சேரியோடு ஒரு திருவிழாவையே நடத்திவிட்டுச் சென்றுவிட்டது. இருளின் அதிபதியோடு நடக்கவிருக்கும் யுத்தத்தில் தனது வெற்றியை மட்டுமல்ல, “நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று அவனது எல்லை என்ன என்று அவனுக்கே சொன்னவர்தான் கர்த்தர். அதுவரை அவனுக்கே இந்த விஷயம் தெரியாது. இதுதான் பரலோக கெத்து! சொல்லாமல் தந்திரமாய் சூழ்ச்சி செய்து கவிழ்ப்பது பிசாசின் பாணி. முகத்துக்கு நேரே சொல்லி அடிப்பது பிதாவின் பாணி!

இன்றும் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் ஊழியத்தை நம்பி அல்ல, நம்மையும் நமது ஊழியத்தையும் இயக்கும் பரம குயவனின் கரத்தை நம்பி.

என்னால் என் ஓட்டத்தை சிறப்பாக முடிக்க முடியுமா? கிரீடத்தைப் பெறுவேனா என்ற பயமும் பதட்டமும் யாருக்கெல்லாம் வருமென்றால் யாரெல்லாம் கர்த்தருடைய கரத்தை தான் பிடித்திருப்பதாக எண்ணுகிறார்களோ அவர்களுக்கே வரும். இதே போல பரலோகமும் சிந்திக்குமானால் நாம் போய் சேரும்வரை அங்கும் பயமும் பதட்டமுமே நிலைகொண்டிருக்கும். ஆனால் பரலோகத்திலோ மகிழ்ச்சிக்கும், பாடலுக்கும், துதிக்கும், ஆராதனைக்கும் எப்பொழுதுமே குறைவில்லை. பூமியில் நீங்கள் விழுந்துவிட்டதாக கருதும் அந்த கணத்தில் கூட பரலோகம் அதிர்ச்சியில் தனது ஆராதனையை நிறுத்தாது.

யாரெல்லாம் தன்னைக் கர்த்தருடைய கரம் பிடித்திருப்பதாக எண்ணுகிறார்களோ அவர்களால் இந்த பூமியிலேயே பரலோகக் கொண்டாட்டங்களை அனுபவிக்க இயலும். ஒருவனும் என்னை அவரது கைகளிலிருந்து பறித்துக் கொள்ள இயலாது என்று விசுவாசத்தோடு உரக்கச் சொல்ல முடியும் (யோவா 10:28,29).

உங்கள் வித்தைகளை நம்பாதீர்கள், உங்களுக்குள் இருக்கும் வித்தை நம்புங்கள். அப்பொழுதுதான் பிசாசுக்கும் உலகத்துக்கும் முன்பாக நெஞ்சை நிமிர்த்தி பரலோக கெத்தோடு சொல்ல முடியும். “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் (2 தீமோ 1:12)”.

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply