இணை இயக்குநர்கள் தேவை

நான் வெறும் கருவிதான், கர்த்தர்தான் என்னைப் பயன்படுத்துகிறார் என்று சொல்லும்போது மகிமையை நாம் எடுத்துக்கொள்ளாமல் அவருக்கே செலுத்துகிறோம். ஆனால் இந்த ஒன்றைத் தவிர நம்மைக் கருவியாகக் கருதிக் கொள்வதில் வேறு எந்தப் பயனும் இல்லை. தேவனும்கூட நம்மை “பாத்திரங்கள்” என்று அழைத்தாலும் அவர் நம்மை உயிரற்ற பாத்திரங்கள் போல நடத்துவதில்லை.

ஒரு கருவி எஜமானின் வேலைக்குப் பயன்படும் ஆனால் அது எஜமானோடு தரிசனத்தைப் பகிர்ந்து கொள்ளாது, எஜமானின் mission-இல் விருப்பம் கொள்ளாது, எஜமான் வெற்றியடையும்போது மகிழாது. உணர்ச்சியுள்ள யாரும் யாருக்கும் கருவியாக இருக்கக்கூடாது. நிச்சயமாகவே கர்த்தருடைய நோக்கம் நம்மை விருப்பு, வெறுப்பற்ற, எந்த உணர்ச்சிகளுமற்ற கருவிகளாக வைத்து பயன்படுத்துவது அல்ல. அவர் நம்மை அப்படிப் படைக்கவும் இல்லை. பிசாசு மட்டுமே நம்மைக் கருவியாக பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறியும் மனநிலை உள்ளவன்.

நீங்கள் என்று “என் விருப்பம் அழியட்டும், உம் விருப்பமே நடக்கட்டும்” என்று நினைக்கிறீர்களோ அந்த நாளே அந்தக் காரியத்துக்காக ஜெபிக்கும் ஆர்வம்கூட உங்களுக்குக் குறைந்துவிடும். நீங்கள் அந்த விஷயத்தை இழக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். மாறாக “உம் விருப்பம் என் விருப்பமாகட்டும் (பிலி 2:13)” என்று ஜெபியுங்கள். தேவனுடைய சித்ததையும், அவரது மகத்துவமும், நன்மையுமான திட்டங்களையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அவற்றை தியானியுங்கள். அப்போது இயல்பாகவே உங்கள் மனுஷீக விருப்பங்களை புறந்தள்ளி அவரது சித்தத்தை நேசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.

ஒரு சினிமாவை எடுத்துக் கொண்டால் அதன் கதை, காட்சி அமைப்புகள் அனைத்தையும் இயக்குநர்தான் தீர்மானிக்கிறார். அவரோடு இணை இயக்குநர் என்று ஒருவர் இருப்பார். அவர் இயக்குநரின் கற்பனைகளையும், விருப்பங்களையும் அப்படியே உள்வாங்கி, அதை தன்னுடைய கற்பனையாகவும், விருப்பமாகவும் மாற்றிக்கொண்டு, இயக்குநர் என்ன விரும்புகிறாரோ அதை அப்படியே திரையில் கொண்டுவர தன்னுடைய பங்களிப்பைச் செய்வார். படம் வெற்றியடைந்தால் மகிமை முழுவதும் இயக்குநருக்கே சேரும். இணை இயக்குநருக்கு ஒப்பந்தத்தில் என்ன சம்பளம் வாக்களிக்கப்பட்டதோ அது கொடுக்கப்பட்டு அவர் பெயரும் வெள்ளித்திரையில் மின்னி அவருக்கு கனம் சேர்க்கும்.

எனவே கருவி மனப்பான்மையை துறந்துவிட்டு “பார்ட்னர்” மனப்பான்மையுடன் தேவனுக்கு பணி செய்யத் துவங்குங்கள். அப்போது உங்கள் ஜெபம்கூட உற்சாகமானதாக மாறிவிடும். நீங்கள் உலகப்பிரகாரமான வேலைகளில் இருந்தால்கூட, உங்கள் நிறுவனம் உங்களை வெறும் கருவியாக பயன்படுத்தினாலும் கூட, நீங்கள் உங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொண்டு, உங்கள் நிறுவனத்தின் தரிசனத்தில் பங்குதாரராக உங்களைக் கருதிக்கொண்டு வேலை செய்யுங்கள், உயர்வுகள் உங்களைத் தேடி வரும். ஏனெனில் இதுதான் வெற்றிக்கான ஃபார்முலா.

என்னோடே பாடுபட்டால் என்னோடு ஆளுகையும் செய்வீர்கள் (2 தீமோ 2:12) என்று எந்த எஜமானும் கருவிகளிடம் சொல்லமாட்டார். இது பார்ட்னர்களிடம் மட்டுமே சொல்லப்படும் வார்த்தை.

Leave a Reply