வேதத்தை தனது சொந்த ஆதாயத்துக்காக திரித்து போதிக்கும் ஊழியர்கள் அநேகர் உள்ளனர். கடைசி கால கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கும் என்று ஆண்டவரும் நமக்கு முன்னுரைத்திருக்கிறார்.
ஆனால் தேவனையும், சபையையும் உயிராக நேசிக்கும் நல்ல ஊழியர்கள்கூட சில சமயங்களில் தவறான போதனைகளை கொடுத்து விடுவதுண்டு. அவர்கள் செய்யும் தவறுகள் ஆத்துமாக்களை வழிகொடுக்கும் அளவுக்கு வஞ்சகமானவைகளாக நிச்சயம் இருக்காது. ஆனாலும் வேதத்தின் படி அது தவறாக இருக்கக்கூடும். அறியாமையால் அவர்கள் அதை பிரசங்கித்திருக்கலாம். அத்தகைய தவறை நானோ, நீங்களோ யார் வேண்டுமானாலும் இழைக்க வாய்ப்புக்கள் உண்டு. எல்லோருமே அறிவில் குறைந்த மனிதர்கள் என்ற பட்சத்தில் முதலில் தவறிழைப்பதும் பின்பு திருத்திக் கொள்வதும் இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்களைக் குறை சொல்வதும், குறைத்து மதிப்பிடுவதும் தவறாகும்.
ஆனால் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறான ஒரு உபதேசம் என்பது அதன் பாதிப்பை கேட்டவர்களுக்கு ஏற்படுத்தாமல் போகாது. எனவேதான் வேதம் பெரேயா கிறிஸ்தவர்களை நமக்கு உதாரணமாக முன்னிறுத்துகிறது. யாருடைய பிரசங்கத்தைக் கேட்டாலும் வேத வசனம் என்கிற ஒரு வடிகட்டியை நமது கையில் வைத்து அதன் ஊடாக ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேதத்தில் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள் என்ற வாக்குத்தத்தம் இல்லை. வஞ்சிக்கப்படாதிருங்கள் என்ற எச்சரிப்பே உள்ளது!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!