யாரோடு போராட?

உலகத்தில் கொள்ளைநோய்கள் மூலமோ, இயற்கைச் சீற்றங்கள் மூலமோ பேரழிவுகள் நேரும்போது அந்த அழிவைத் தடுக்க ஒரு ஆவிக்குரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு சபைக்கு வருகிறது. ஆனால் யாரோடு போராடுவது என்றுதான் சபைக்கு தெரியவில்லை. ஏனெனில் அழிவை அனுப்பியது தேவனா, சாத்தானா என்ற அடிப்படைக் குழப்பம் இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது.

கையில் ஒரு பட்டயம் இருக்கிறது அந்தப் பட்டயத்தை யாருக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் ஒரு போர்வீரன் குழப்பத்தில் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பானானால், அந்த வீரனாலும், அவன் கையில் இருக்கும் ஆயுதத்தாலும் யாருக்கு லாபம்?

சிலர் ஜனங்களின் அக்கிரமத்தைக் கண்டு தேவன்தான் வாதையை அனுப்புகிறார். எனவே சபை திறப்பிலே நின்று தேவனிடம் இரக்கத்துக்காக அழுது மன்றாட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து பல சம்பவங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

திறப்பிலே நின்று அழிவை நிறுத்தச் சொல்லி ஆத்துமாக்களுக்காக மன்றாடும் மனநிலையை நான் மிகவும் மதிக்கிறேன். அது அன்பு, அக்கறை மற்றும் ஆத்துமபாரத்தின் வெளிப்பாடு. இந்தக் கட்டுரை அதற்கு எதிரானதல்ல, ஆனால் கர்த்தர்தான் இந்த அழிவை அனுப்பினார் அல்லது அனுமதித்தார் என்று நம்புவதில் அல்லது பிரசங்கிப்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

சில பண்டைய நகரங்களில் ஜனங்களின் அக்கிரமம் பெருகியபோது தேவன் அந்தப் பட்டணங்களை அழித்த வரலாற்றை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் சோதோம் கொமாராவின் அழிவு. அந்த நகரங்களின் அழிவு குறித்து தேவன் ஆபிரகாமிடம் உரையாடும்போது ஒரு நகரத்தில் பத்து நீதிமான்கள் இருந்தால் அவர்கள் நிமித்தம் அந்தப் பட்டணத்தை அழிக்கமாட்டேன் என்று சொல்லுகிறார் (ஆதி 18:32).

தேவன் பார்வையில் “நீதிமான்” என்பவன் யார் என்பது புதிய ஏற்பாடு படித்த அனைவருக்கும் புரிந்திருக்கும். கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக்கொண்ட பல்லாயிரம் நீதிமான்கள் பட்டிணங்கள்தோறும் இருக்கும் இக்காலகட்டத்தில், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த சுவிசேஷ ஊழியங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குறுதியையும், பரிந்து பேசும் இயேசுவின் இரத்தத்தின் மன்றாட்டையும் மீறி அவசரப்பட்டு பேரழிவுகளை அனுப்பி கூட்டம் கூட்டமாக ஜனங்களை சாகடித்து நரகத்துக்கு அனுப்பும் வேலையை கர்த்தர் செய்வாரா? அப்படிச் செய்வதால் அவருக்கு லாபம் என்ன? தேவன் நீடிய பொறுமையுள்ளவர் என்றல்லவா வேதம் சொல்லுகிறது?

…ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.(II பேதுரு 3:9 )

நோய்க்கு மருந்து இல்லாத காலங்களில் அதிதீவிரமாகப் பரவும் மோசமான நோய்களைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் நோயால் பீடிக்கப்பட்டவர்களைக் கொல்லும் வழக்கம் இருந்திருக்கலாம் (வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்ததுபோல…). ஆனால் நோய்க்கான அருமருந்து இலவசமாக எங்கும் கிடைத்துவிட்ட பின்னர் நோயாளிகளைக் கொல்ல வேண்டிய அவசியமில்லையே! அந்த மருந்தும் தடுப்பூசியும் அத்தனை பேரையும் சீக்கிரம் சென்றடைய வகை செய்தாலே போதும்.

மேற்சொன்னது அக்கிரமங்களின் நிமித்தம் தேவன்தான் பேரழிவுகளை அனுப்பி ஜனங்களை அழிக்கிறார் என்று வாதிடுகிறவர்களுக்கான பதில்தான். நோய்க்கான அருமருந்து (இயேசு) இலவசமாக அளிக்கப்பட்ட பின்னர் நோயாளிகளை அழிக்க வேண்டிய அவசியம் இல்லையே! அந்த மருந்து சீக்கிரம் எல்லோரையும் சென்றடையும் வேலையைத்தான் தேவன் செய்வாரேயொழிய மருந்தையும் கொடுத்து, அந்த மருந்து சென்றடையுமுன்னரே நோயாளியைக் கொல்லும் ஞானமற்ற செயலை தேவன் செய்வாரா?

அப்படியானால் அழிவுகள் எங்கிருந்து வருகின்றன?…

பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று சங்கீதம் 115:16 சொல்லுகிறது. பிசாசின் வஞ்சகமும், மனிதனின் அடிமைத்தனமுமே தேவனுடைய சித்தத்துக்கு எதிராக அழிவுகளை பூமியில் கொண்டு வருகின்றன. அண்ட சராசரங்களும் அவரது ஆளுகைக்குக் கீழ் இருந்தாலும், பூமியை மனுபுத்திரருக்குக் கொடுத்தபடியால் சபையின் மூலமாக மட்டுமே கிரியை செய்யும் கண்ணியமுள்ள ராஜா அவர். அழிகிறவர்களை அம்போ என கைவிடுவதும், ஓடிப்போய் காப்பாற்றுவதும் சபையின் கையிலேயே இருக்கிறது. நாம் மீட்பின் பணியில் ஈடுபட வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

அக்கிரமக்காரர்களானாலும் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத நினிவே ஜனங்கள் அழிந்துவிடக்கூடாது என்று பரிதபிக்கிற தேவனையே பழைய ஏற்பாடும் காட்டுகிறது. Context-ஐ மீறி வேதத்திலிருந்தே ஆயிரம் பேர், ஆயிரம் போதித்தாலும் தன் அப்பா எப்படிப்பட்டவர் என்பதை புத்திரன் அறிவான்.

Leave a Reply