அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் இரண்டிலேயுமே ஆண்டவர் இயேசுவின் பெயரைத் தவிர வேறு இரண்டே இரண்டு மனிதர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் இயேசுவின் தாயாகிய மரியாள், இன்னொருவர் பொந்தியு பிலாத்து. இருவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த இரு இன்றியமையாத தன்மைகளைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள்.
“அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்…” புருஷனை அறியாத ஒரு கன்னியிடம் பரிசுத்த ஆவியால் உற்பவித்துப் பிறந்ததால் அவரது தெய்வத் தன்மை இங்கே நிரூபிக்கப்படுகிறது. இயேசு மனிதனாய் பிறந்தாலும் 100% தெய்வம் என்பதற்கு மரியாள் சாட்சி பகர்கிறார்.
“பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு…” இயேசு தெய்வமாய் இருந்தாலும் அவர் ஒரு சரித்திரபுருஷன் என்பதற்கு “பொந்தியுபிலாத்துவின் காலத்தில்” என்ற வார்த்தை ஆணித்தரமான சாட்சியாக இருக்கிறது. பிலாத்து கிபி 26-36 வரை ரோமப் பேரரசனாகிய டைபீரியஸின் காலத்தில் யூதேயா பிரதேசத்தின் ஆளுனராக பணியாற்றியவர் என்பது வரலாறு. பிலாத்துவைக் குறித்த கல்வெட்டு 1961-ஆம் ஆண்டு இஸ்ரேலில் உள்ள செசெரியா பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அந்தக் கல்வெட்டு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் மியூஸியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம், அவர் தெய்வமாய் இருந்தாலும் 100% மனிதன் என்பதற்கு பிலாத்து சாட்சியாக இருக்கிறார்.
வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்
(யோவான் 1:14)
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com