பாபிலோனும் எருசலேமும் ஜெபிக்கின்றன!

பார்வையற்ற கண்களைத் திறக்கும் பரிசுத்தரின் நாமத்துக்கு மகிமை உண்டாகட்டும்! இன்றைய கிறிஸ்தவத்தில் நூற்றுக்கணக்கான சபைப் பிரிவுகள் இருந்தாலும் கர்த்தரின் பார்வையில் இரண்டே இரண்டு பிரிவு மாத்திரமே உண்டு. ஒன்று மெஜாரிட்டி பாபிலோன் மற்றொன்று மைனாரிட்டி எருசலேம். பாபிலோன் திருச்சபை ”உலகப்பொருள்” எனும் கடவுளை(!) மையமாகக் கொண்டது. எருசலேம் திருச்சபை “இயேசு கிறிஸ்து” எனும் உண்மைக் கடவுளை மையமாகக் கொண்டது.  நான் போகும் “——————” சபை இதில் எந்தப் பிரிவு என்ற கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்! இக்கட்டுரையின் முடிவில் நீங்களே அதை அறிந்து கொள்வீர்கள்.

ஒரு விசுவாசியின் குடும்பத்துக்கு ஒரு ஊழியக்காரர் ஜெபிக்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். பாபிலோனின் ஊழியர் வந்தால் எப்படி ஜெபிப்பார் எருசலேமின் ஊழியர் வந்தால் எப்படி ஜெபிப்பார் என்பதைக் கற்பனையாக இங்கு வடித்திருக்கிறேன். இருவருமே வசனத்தை வைத்துத்தான் ஜெபிக்கிறார்கள்,  இருவருமே ஆசீர்வாதத்துக்குத்தான் ஜெபிக்கிறார்கள் ஆனால் இருவர் ஜெபத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமுண்டு.

பாபிலோனை (ஜெப)மேடைக்கு அழைக்கும் முன் ஒரு முக்கியமான காரியத்தைச் சொல்லிவிட்டுச் செல்ல விரும்புகிறேன். விசுவாசிகளின் உலகப் பிரகாரமான தேவைகளுக்காக ஜெபிப்பதே தவறு என்று நான் சொல்ல வரவில்லை. கஷ்டத்திலும் நெருக்கத்திலும் உள்ள ஒரு விசுவாசிக்கு அந்தத் கஷ்டங்கள் தீர ஜெபிக்கத்தான் வேண்டும். ஆனால் ஜெபத்தின் ஆரம்பமுதல் கடைசி வரை பூமிக்குரிய காரியங்களே முன்னிலைப் படுத்தப்படுவதுதான் பிரச்சனையே. கீழே உள்ள எருசலேம் ஊழியரின் ஜெபத்தைக் கவனித்துப் பாருங்கள். முழுக்க முழுக்க ஆதித் திருச்சபைக்காக அப்போஸ்தலர் ஜெபித்த ஜெபங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறேன். வாசித்துப் பாருங்கள் இந்த ஜெபத்தைப் படித்தால் உங்கள் தலை சுற்றிவிடும், காரணம் எருசலேம் ஊழியரின் ஜெபத்தைப் போல் உங்கள் வீட்டுக்கு வந்த யாரும் ஜெபித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள். இதுதான் நமது துர்பாக்கிய நிலை!

சரி! இப்போது பாபிலோன் ஊழியரை முதலில் ஜெபிக்க அழைப்போம்.

பாபிலோன் ஜெபிக்கிறது:

பாபிலோன் ஊழியக்காரர் வீட்டுக்கார அம்மாவிடம் ஒரு செம்பு தண்ணீரை வாங்கி அதை இயேசுவின் இரத்தமாக மாறும்படி கட்டளையிட்டு(!) ஜெபித்து காத்து கருப்பு அண்டாதிருக்க வீட்டின் நிலைக்கால்களிலெல்லாம் தெளிக்கிறார் (காட்டப்படும் ஆதாரம் யாத்திராகமம் 12)

கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! மீண்டும் ஒருமுறை ஐயாவின் குடும்பத்தைக் காணச் செய்த கிருபைக்காக நன்றி! இதோ குடும்பத்தின் ஒவ்வொரு நபரையும் உமது ஆசீர்வதிக்கும் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் கர்த்தாவே! ஒவ்வொருவரையும் பேர்பேராக ஆசீர்வதியும்.

குடும்பத்தின் தலைவரான ஐயாவை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். ஊழியக் காரியங்களுக்கு உற்சாகமாய்க் கொடுக்கிற மகன் கர்த்தாவே! இன்னும் அதிகதிகமாய்க் கொடுக்கும்படி அவருடைய கரங்களை பலப்படுத்தும். ஐயாவுடைய தொழிலை ஆசீர்வதியும்!(உபா 28:8), கையின் பிரயாசங்களை வாய்க்கப் பண்ணும் (சங் 128:2), வியாபாரத்தின் எல்லைகளை விரிவாக்கும் (1 நாளா 4:10), மேலும் புதிய புதிய ஆர்டர்களைத் தாரும் ஸ்வாமி.

சிறிது நேர நிசப்தம்… (ஊழியர் தரிசனம் காண்கிறார்)

மகனே! இதோ! கர்த்தர் உங்களுக்கு தொழிலில் உள்ள பிரச்சனைகளை எனக்கு தரிசனத்தில் காட்டுகிறார்! ஆம்! உங்கள் வியாபாரத்துக்கு எதிராக பில்லிசூனியம் வைக்கப்பட்டிருக்கிறது. ”பா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பேரையுடைய ஒரு நபர் இதைச் செய்திருக்கிறார். இதனிமித்தம் உங்கள் கல்லாவின் மீது ஒரு சர்ப்பம் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்!

(உரத்த சத்தமாக) இயேசுவின் நாமத்தினாலே போ! பிசாசே! உன்னைக் கடிந்து, கட்டி, சபித்து, நரகத்திலே தூக்கி எறிகிறேன்!!! (வீட்டார் அனைவரும் நடுங்குகிறார்கள்)

கர்த்தருடைய ஸ்தானாதிபதியாக அந்தகார வல்லமைகளை நோக்கி இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன். இது தசமபாகத்தில் சத்தியத்துக்குக் கீழ்ப்படியும் குடும்பம். தசமபாகத்தில் கீழ்ப்படிவதால் சத்துருவாகிய நீ இவர்கள் பொருளாதாரத்தில் கைவைக்க முடியாது. இவர்கள் 10 சதவிகிதத்தில் கீழ்ப்படிந்ததால் மீதமுள்ள 90% சதவிகிதமும் என்னுடைய காவலுக்குக் கீழ் உள்ளது என கர்த்தர் சொல்லுகிறார்.

ஆ…….மேன்! இதோ! சத்துரு அலறி ஓடுகிறதைக் காண்கிறேன்! மகனே! உனக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேள்! உனக்கு விரோதமான ஆயுதம் வாய்க்காது (ஏசா 54:17), உனக்கு விரோதமான மந்திரவாதமுமில்லை குறி சொல்லுதலும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் (எண் 23:23). கர்த்தரை கனப்படுத்து, அவருடைய ஊழியக்காரரை கனப்படுத்து உன் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆண்டவரே! இவர்கள் சத்துருக்கள் கண்களுக்கு முன்பாக இவர்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி இவர்கள் தலையை எண்ணையால் அபிஷேகியும் (சங் 23:5). இவர்களுக்கு எதிராக எழும்பின சத்துருக்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக! உம் பிள்ளைகளுடைய களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பியிருக்கட்டும், ஆலைகளில் திராட்சைரசம் புரண்டு ஓடட்டும் (நீதி 3:10) இவர்களது அம்பாரம் மீந்திருக்கட்டும் (2 நாளா 31:10)

ஆண்டவரே! அடுத்தவாரம் ஐயாவுடைய கடைக்கு அரசு அதிகாரிகள் பரிசோதனையிட வருவதாக அவர் கூறியதை நீர் அறிந்திருக்கிறீர். சோதோம் பட்டணத்து மக்களைக் குருட்டாட்டம் பிடிக்கச் செய்தவரே! இயேசுவின் நாமத்தினாலே அந்த அதிகாரிகளின் கண்களைக் கட்டி ஜெபிக்கிறேன்.(ஆதி 19:11) அவர்களால் எந்தப் பிரச்சனைகளும் உண்டாகாதபடி காத்துக் கொள்ளும்.

ஜெபத்தை கேட்டு கர்த்தர் பதிலளித்தபடியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!

ஆண்டவரே! அம்மாவுக்காக வருகிறேன். வீட்டுக் காரியங்களைக் கூட கிடப்பின் போட்டுவிட்டு உம்முடைய ஆலயமே கதியாகக் கிடக்கின்ற மகள் ஆண்டவரே! பலமுறை வீட்டில் கணவனாருக்கும் பிள்ளைகளுக்கும் சமைக்காமல் கூட விட்டுவிட்டு தவறாமல் வந்து ஆலயத்தின் காரியத்தில் ஜாக்கிரதையாய் பங்கு கொண்ட தியாகத்தை அறிந்திருக்கிறீர். உம்முடைய அடியேன் வீட்டுக்குவரும் பொழுதெல்லாம் நல்ல உணவளித்து உபசரிக்கிற மகள் கர்த்தாவே! இதோ! சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று சொன்னீரே (மத் 10:42)

ஆண்டவரே! அம்மாவுக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கடந்தவாரம் ஏற்பட்ட பிரச்சனையை அறிவீர். கர்த்தாவே! உனக்கு விரோதமானவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் என்று வாக்குத்தத்தம் சொல்லுகிறது.(ஏசா 54:15). அதின்படியே அம்மாவுக்கு விரோதமானவர்கள் அம்மாவின் பட்சத்தில் வலிய வருவார்களாக! உம்முடைய மகளை வெட்கப்பட விடாதேயும் ஆண்டவரே! (சங் 31:17)

ஆண்டவரே! அம்மாவுக்கு கால் எலும்பில் உள்ள பிரச்சனையை அறிந்திருக்கிறீர். ஆண்டவரே அம்மாவின் கால்களில் கிலேயாத்தின் பிசின் தைலமாகிய இயேசுவின் இரத்தம் பூசப்படுவதாக! என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள் என்று சொன்னவரே! (ஏசா 46:13). இதோ! அம்மாவுடைய கால் கூட உம்முடைய கரத்தின் கிரியைதானே சுவாமி! உம்முடைய வார்த்தையின்படியே உம்முடைய கரத்தின் கிரியை குறித்து உமக்குக் கட்டளையிடுகிறேன்.

உம்முடைய ஜீவன் அம்மாவின் கால்களில் இப்பொழுதே இர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றங்குவதாக! கால்களும் கரடுகளும் பெலன் கொள்ளட்டும் (அப் 3:7), மான் கால்களைப் போலாக்கும் ஸ்வாமி! (சங் 18:33)

இதோ! ஜெபத்தை கேட்டு அம்மாவுக்கு சுகங்கொடுத்த படியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!

அன்பான பாட்டியம்மாவுக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே! சுகம், பெலன் நீடிய ஆயுள் தாரும். கண்கள் முன்பு போல தெரியவில்லை டி.வி கூட பார்க்க முடியவில்லை என்று சொல்லி வருத்தப் பட்டார்கள் ஆண்டவரே!

இதோ!…பர்திமேயுவின் கண்களைத் தொட்ட ஆண்டவர் பாட்டியம்மாவின் கண்களைத் தொட்டு சுகமாக்கும்படியாய் ஜெபிக்கிறேன்.

பிள்ளைகளுக்காக வருகிறோம் கர்த்தாவே! இதோ, கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சொன்னீரே! இம்மட்டும் பிள்ளைகளை ஆசீர்வதித்து வந்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். படிப்பில் நல்ல ஞானத்தைத் தாரும். அடுத்தவாரம் நடக்கவிருக்கிற தேர்வுகளுக்காக வருகிறோம். நல்லபடியாக எழுத கிருபைதாரும். பேப்பர் திருத்துகிறவர்களின் கண்களில் தயவைத் தாரும், நல்ல மதிப்பெண்களை வழங்கக் கட்டளையிடும். பிள்ளைகள் மருத்துவராக இஞ்சினியராக வாழ்க்கையில் உயரட்டும் ஆண்டவரே!

ஆண்டவரே! இப்பொழுதும் கூட ஐயாவின் கரங்களில் இருக்கும் காணிக்கையை உம்முடைய கரத்தில் ஒப்புவிக்கிறேன். ஒன்று பத்து முப்பது நூறாகப் பெருகச் செய்து தரவேண்டுமாய் ஜெபிக்கிறேன். அடியேன் மீண்டும் அடுத்தமாதம் முதல் வாரத்தில் வரும்வரை குடும்பத்தார் அனைவரையும் கண்ணின் மணி போல காத்தருளும்.

இதோ! ஜெபத்தையெல்லாம் கேட்டு கர்த்தர் பதிலளித்துவிட்டபடியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமேன். ஆமேன் ஆமேன்.

பிரியமானவர்களே! இதை இன்றைய ஊழியர்களைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு எழுதவில்லை. தேவமனிதர் கிறிஸ்துவை ஆராதிப்பதை விட்டுவிட்டு தங்கள் வயிற்றை ஆராதிக்கத் துவங்கியதேலேயே! மிகுந்த துக்கத்தோடு இவைகளை எழுதுகிறேன். ஒருவரைப் பார்த்து ஒருவர் கெட்டுப் போகும் மோசமான வியாதி இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படுகிறது.

இவர் இக்குடும்பத்தாருக்காக ஜெபிப்பதாகத் தோன்றினாலும் இவரது ஜெபம் தன்னைச் சுற்றியே இருப்பதைப் பாருங்கள்! முழுக்க முழுக்க உலக ஆசீர்வாதங்கள்! நித்தியத்தைக் குறித்த அறிவும் இவருக்கு இல்லை வாஞ்சையும் இல்லை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து பவுல் எச்சரிக்கிறார்

அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். (பிலி 3:18,19)

…..அடுத்ததாக எருசலேமை ஜெபிக்க அழைக்கலாம்

எருசலேம் ஜெபிக்கிறது:

கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக! உமது சித்தம் எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்பத்திலும் சபையிலும் செய்யப்படுவதாக! மீண்டும் ஒருமுறை ஐயாவின் குடும்பத்தைக் காணச் செய்த கிருபைக்காக நன்றி!

ஆண்டவரே! இந்தக் குடும்பத்தாரின் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள இவர்கள் அன்பையுங்குறித்து அறிந்திருக்கிறபடியினாலே இவர்களுக்காக உம்மைத் துதிக்கிறோம்.

”ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.(லூக்கா 10:5,6) என்று சொன்னீர். ஆண்டவரே! உம்முடைய வார்த்தைப்படியே இந்த வீட்டின் மேல் சமாதானத்தைக் கூறுகிறோம்!

அப்பா! பிரதானமாக இந்த வீட்டார் உம்மை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று (எபே 1:17) கருத்தாய் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம், மாத்திரமல்ல இவர்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் உம்முடைய சித்தத்தை அறிகிற அறிவினாலும் நிரப்பப்படுவார்களாக! (கொலோ 1:9)

இவர்கள் சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, உம்மை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, உமக்குப் பிரியமுண்டாகவும் கிறிஸ்துவுக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் இவர்களைப் பழக்குவியும். (கொலோ 1:10)

ஆண்டவரே! நீர் விரும்பும் சந்தோஷமும் சந்தோஷத்தோடு கூடிய பொறுமையும் நீடிய சாந்தமும் இவர்களில் பெருகும்படிக்கு உம்முடைய வல்லமையால் இவர்களை பெலப்படுத்தும். (கொலோ 1:11)

ஆண்டவரே! இவர்களை நீர் அழைத்த அழைப்பினாலே இவர்களுக்கு உண்டான மகத்தான நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் நீர் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும், கல்லறையில் இருந்த கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி அவரிடத்தில் காட்டிய உமது வல்லமைப்படியே விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய இவர்களிடத்தில் நீர் காண்பிக்கும் வல்லமை எப்படிப்பட்டதென்றும் இவர்கள் அறியும்படி இவர்களுக்குப் பிரகாசமான மனக் கண்களைக் கொடுத்தருளும். (எபே 1:18,19)

சோதனைகளை சகிக்கவும், பாவத்தை ஜெயிக்கவும் இவர்களுக்கு பெலன் தாரும். உம்மைத்தவிர வேறு ஒன்றும் இந்தப் பூமியில் இவர்களைக் கவர்ச்சிக்கக் கூடாதப்பா! விசேஷமாக பிள்ளைகள் பள்ளியிலிருந்து நல்லவைகளை மட்டும் கற்றுக் கொள்ளவும், இவர்கள் உலகத்தால் பாதிக்கப் படாமல் உலகத்தை பாதிக்கிறவர்களாக இவர்களை மாற்றும். படிப்பில் நல்ல ஞானம் தாரும்! கடினமாய் உழைத்துப் படிக்கும் இவர்களது முயற்சியை ஆசீர்வதியும்.

ஐயாவுக்காக வருகிறோம்! குடும்பத்தின் தலைவராக உம்மைப் பிரதிபலிக்கிறவராக இருக்க கிருபைதாரும். குடும்பத்தையும் பிள்ளைகளையும் செவ்வனே நடத்த கிருபை தாரும். தொழிலில் உமக்கு சாட்சியாக இருக்க உதவி செய்யும். சுமத்திரையான நிறைக்கல்லே உமக்குப் பிரியம் கள்ளத் தராசு உமக்கு அருவருப்பு என்று வார்த்தை சொல்லுகிறது. இவரது உண்மையைப் பார்த்து இவரது வாடிக்கையாளர் உம்மை மகிமைப்படுத்த கிருபை தாரும்.

அன்பான ஐயா அவர்களே! வேதத்திலுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாம் நிபந்தனைக்குட்பட்டவை நீங்கள் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படியும்போது மாத்திரமே அதில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் தங்கும்.

இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும் என்று வேதம் சொல்லுகிறது (உபா 11:26-28) ஆகவே தேவனுடைய வார்த்தைக்கு கருத்தாய் கீழ்ப்படிய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக!

அன்பான அம்மாவுக்காக ஜெபிக்கிறோம்! புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் என்று வார்த்தை சொல்லுகிறது.(நீதி 14:1) அம்மாவுக்கு வீட்டை ஞானமாய் ஜாக்கிரதையாய்க் கட்ட கிருபை தாரும். அவர்களது கால் பிரச்சனையை கிருபையாய் சுகமாக்கும்படியாய் ஜெபிக்கிறோம். இவர்களது பக்கத்து வீட்டாரோடு இருக்கும் பிரச்சனையைப் பகிர்ந்து கொண்டார்கள் ஆண்டவரே! அது நீங்கி சமாதானமுண்டாக கிருபை தாரும்! அம்மா! நீங்கள் உடனடியாக அவர்களோடு வலிய சென்று ஒப்புரவாகுங்கள்! அதுவே சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை! கர்த்தர் உங்களுக்கு பெலன் தருவாராக!

பாட்டியம்மா மீது உம்முடைய இரக்கம் இருக்கட்டும். அவர்களது கண்களை சுகமாக்கும். அதே வேளையில் உண்மையான சந்தோஷத்தை உம்மிடத்தில் கண்டுகொள்ள அவர்களுக்கு உதவி செய்யும்.

ஆண்டவரே! சகோதர சிநேகத்தில் எங்களை ஊன்றக் கட்டும். நாங்கள் எங்களுக்குரியவைகளை அல்ல பிறரது நன்மைகளையே தேட எங்களுக்கு உதவி செய்யும். உமக்கு சாட்சிகளாய் வாழ எங்களுக்கு அருள் புரியும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்!

அன்பானவர்களே! உண்மை ஊழியரின் ஜெபம் எப்படி இருக்கும் என்பதன் மாதிரிதான் இது. இவர் கர்த்தரை எவ்வளவாய் ருசித்திருக்கிறார் என்பது விளங்குகிறது. மனிதரை திருப்திப்படுத்த ஜெபிக்கவில்லை. இது தேவனை, நித்தியத்தை மையமாகக் கொண்ட ஜெபம். இப்படிப்பட்ட ஊழியர்களை கனம் பண்ணுங்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்களுக்காக கருத்தாய் ஜெபியுங்கள். இவர்கள் தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறார்கள்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறார்கள் இதனாலே இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே இப்படிப்பட்ட தகப்பன்மாரைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டி கர்த்தரை மகிமைப் படுத்துங்கள். (2 கொரி 5:11,12)

கர்த்தர் உங்கள் கண்களைத் திறப்பாராக! அவருக்கே சதாகாலங்களிலும் மகிமையுண்டாகட்டும்!

13 thoughts on “பாபிலோனும் எருசலேமும் ஜெபிக்கின்றன!”

 1. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை வெளியிடுங்கள். அநேகர் படிக்கும்படியான வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

 2. ” கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான் ”

  தங்கள் வேலைப் பளுவை கர்த்தர் தாமே மாற்றி உங்கள் அலுவலகத்தில் உங்களை மென்மேலும் உயர்த்தி எகிப்திலிருந்த யோசேப்பைப் போலவும் பாபிலோனிலிருந்த தானியேலைப் போலவும் மாற்றுவாராக‌..! (சிறைச்சாலையும் சிங்க கெபியும் உண்டு..!)

  God Bless You..!

  1. அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் வரவுக்கும் பதிவுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!

   உண்மைதான் சகோதரரே! தங்கள் வஸ்திரத்தை அசுசிப்படுத்தாத சிலர் பாபிலோன் திருச்சபைகளிலும் உண்டு என்பதே நமக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாகும். ஆனால் அவர்கள் அநீதிகளைப் பார்த்து தன் நீதியுள்ள இருதயத்தில் வாதிக்கப்பட்டு ஆனால் வேறு ஒன்றும் செய்ய இயலாத நீதிமானாகிய லோத்துபோல இருந்துவிடக் கூடாது என்பதுதான் அடிமையின் பாரம். அநீதியை எதிர்த்துப் போரிடும் கடமையும் அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் ஏனையோரை தட்டி எழுப்பிவிடும் கடமையும் தங்களுக்கிருப்பதை அவர்கள் அறிதல் வேண்டும். லோத்தின் முடிவு சோதோமில் வசிக்கும் நீதிமான்களுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடம்.

 3. கிறிஸ்துவுக்குள் அருமை நண்பர் விஜய் அவர்களுக்கு உங்களை பற்றி முன்பே சகோதரர் அற்புதம் அவர்கள் மூலம் அறிந்துள்ளேன்.

  இந்த பதிவை படித்த பொழுது உள்ளத்தின் அடி நாதத்தில் இருக்கும் குமுறலை அழகாக நகைச்சுவையாக வெளிகொண்ந்த உங்கள் தாலந்துக்காக கர்த்தரை துதிக்கிறேன்.

  இன்னும் ஆயிரங்களுக்கு கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக

  1. அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!

 4. உண்மை ஊழியரின் ஜெபம் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

  பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நீங்கள் கூறின முதல் மாதிரியின்படியே ஜெபிக்கப்பட விரும்புகிறார்கள். வசனத்தின் அடிப்படையில், ஜெபத்தில் தேவனை நெருங்கிச் சேர்வதற்குப் பதிலாக ஊழியர் நம்மைப் பற்றி ஏதாவது வெளிப்பாடு சொல்ல மாட்டாரா என்பதே அனேகரின் எதிர்பார்ப்பாக இருக்கிற்து.

  என்னைப் பொறுத்தவரையில் ஜெபத்தில் தேவனுக்கும் அவருடைய சித்தத்துக்கும் முதலிடம் கொடுக்காத வரையில் , அது ஜெபமே அல்ல

 5. பாபிலோனிய ஊழியருக்கு இருக்கும் வசனத் தெளிவு கூட எருசலேம் ஊழியருக்கு இல்லையே என்று வருந்துகிறீர்களா,அற்புதம்?

  ஆம், பல சமயங்களில் இப்படியே ஆகிறது;
  அவர் ஞானத்துடன் தந்திரமாக எதையோ சாதிக்கிறார்;
  இவரோ ஞானமிருந்தும் பேதையாக இருக்கிறார்.

  பாபிலோன் ஊழியரைப் பார்த்து பொங்குவதா,
  எருசலேம் ஊழியருக்காக பரிதபிப்பதா என்று தெரியவில்லை;

  இவர் சரியாக இருந்தால் அவருக்கு இங்கே என்ன வேலை?

  இதற்கு தான் எளிமையாக ஒரு சொல் வழக்கில் இப்படி சொல்லுவார்கள்,”ஆடு கசாப்புக் கடைக்காரனையே நம்பும் ” என்று.

  (பின்குறிப்பு: நான் யாரையும் தாக்கவில்லை.)

 6. கர்த்தர் உங்க​ளையும் உங்களின் ஊழியத்​தையும் ​மேன்​மேலும் விருத்தி அ​டைய ​செய்வாராக

 7. (ஜெபிக்கும்) கிறிஸ்தவர்களுக்கு தெளிவை உண்டாக்கும் உணர்வை கொடுக்கும் உள்ளத்தை மாற்றும் ஒர் நல்ல ஜெப ஓப்பிடு. நல்லபதிவு. (வெற்றியுள்ள) கிறிஸ்த வாழ்க்கைக்கு உதவுக் இதுபோன்ற இன்னும் அதிக பதிவுகள் வ(ள)ர வாழ்த்தி வரவேற்கிறேன்

 8. சகோதரரே, எப்படி இவ்வளவு துல்லியமாக கூறியிருக்கிறீர்கள்? அருமையான கட்டுரை.அனேகரின் கண்களை திறக்கும் என்பதில் சந்தேகமில்லை

 9. சகரியா 2:7 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்

  வெளி 18 அதிகாரம்

  1. இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

  2. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

  3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

  4. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

Leave a Reply