பரலோகம் அறிவித்த Demonetization

சீனாய் மலையில் மோசேக்கு தேவன் தந்த நியாயப்பிரமாணம் முழுக்க முழுக்க கிரியைகளை மையப்படுத்துகிறது. சரீரபிரகாரமான கிரியைகளுக்கு பொருளாதார செழிப்பு, சரீர ஆரோக்கியம். எதிரிகள் மேல் வெற்றி போன்ற பல ஆசீர்வாதங்களையும் அது அள்ளித்தருகிறது.

இன்று கிறிஸ்தவர்களில் பலர் முழுக்க முழுக்க கிரியைகளையே சார்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருளாதாரச் செழிப்பையும், சரீர சுகத்தையும் பார்த்து “இதெல்லாம் பழைய ஏற்பாட்டு சீனாய் மலையின் ஆசீர்வாதங்கள், எங்களுக்கு புதிய ஏற்பாட்டு சீயோன் மலையின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்தான் வேண்டும்” என்கிறார்கள். நீங்கள் சீனாய் மலையில் வேலை செய்துவிட்டு, சீயோன் மலைக்கு வந்து சம்பளம் கேட்டால் எப்படி கிடைக்கும்?

ஆனால் அதற்கும் இப்போது சாத்தியமில்லை, ஏனென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பரலோகம் அறிவித்த demonetization-இல் சீனாய் மலையின் “கிரியை” கரன்சி இனி செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முன்னரே சீனாய் மலை மற்றும் சீயோன் மலை இரண்டையும் உள்ளடக்கிய அத்தனை ஆசீர்வாதங்களையும் கர்த்தராகிய இயேசு எனும் இரட்சகர் தாம் சிலுவையில் முடித்த “கிரியை” மூலம் ஏற்கனவே நமக்காக ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துவிட்டார்.

சீயோன் மலையின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் விலைமதிப்பற்றது, அதை நீங்கள் சம்பாதிக்கவும் முடியாது, இங்கே உங்கள் பழைய ஏற்பாட்டு கரன்சி செல்லவும் செல்லாது.

உங்களுக்கு புதிய ஏற்பாட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதம் வேண்டுமானால் இயேசுவே நமக்கு அருளின “விசுவாசம்” எனும் இலவசக் கூப்பனைக் கொடுத்து அத்தனையையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதுவே இலவசம்தான், அந்தக் கூப்பனுடன் பழைய ஏற்பாட்டு பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் இலவசத்துக்கு இலவசமாக சேர்த்துத் தரப்படுகிறது. ஆம், சீனாய் மலையின் “கிரியை” கரன்சி சீயோனில் செல்லாது, இங்கே “விசுவாசம்” எனும் இலவச கூப்பன் மட்டுமே செல்லுபடியாகும்.

Leave a Reply