நான் சிறுகவும், அவர் பெருகவும்…

யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அநேகரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட யோவான்ஸ்நானகனின் சீஷர்கள் அதை அவரிடம் சொன்னபோது, யோவான் அவர்களை நோக்கி நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் மட்டுமே, செய்கையிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் அவரே பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும் என்றார் (யோவா 3: 22-30). தங்கள் தாழ்மையைக் காட்டும் விதத்தில் அநேகர் இந்த வார்த்தையைச் சொல்ல நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

உண்மையில் நாம் சிறுகி, கிறிஸ்து நமக்குள் பெருகுவதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி. அந்த வளர்ச்சி கிறிஸ்து நமக்குள் பெருகி, நாம் அவருடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராவதில் நிறைவு பெறுகிறது (எபே 4:11). அது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நான் சிறுகவேண்டும் என்று யாரும் எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அந்த “நான்” என்பது யார்?

உடல் என்பது அந்த “நான்” அல்ல, அது நான் வாழும் வீடு. ஆவி என்பது உயிர், அது கர்த்தர் தந்த தீபம், அதுதான் அந்த “நான்”-ஐ உயிர்ப்புடன் வாழவைக்கிறது. அப்படியானால் அந்த “நான்” என்பது யார்?

“மனம்” என்னும் ஆத்துமாதான் “நான்” ஆகும்.

மனம் என்றால் என்ன? சிந்தனை, நோக்கம், சித்தம், உணர்ச்சி, அறிவு போன்றவைகளின் தொகுப்புதான் மனம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிந்தனை, நோக்கம், சித்தம், உணர்ச்சி, அறிவு போன்றவைகள் “உலகம்(world system)” ஏற்படுத்தும் தாக்கத்தினால்தான் வடிவமைக்கப்படுகின்றன. “எது முக்கியமானது, எது மதிப்பு மிக்கது, எது தேவையானது, எது அழகானது,…” போன்ற அனைத்து மதிப்பீடுகளையும் உலகமே(world system) தனது கல்விமுறை, மீடியாக்கள், அரசாங்கங்கள், கலைகள், வணிகம் போன்ற கருவிகள் மூலம் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அதை மனிதனுக்குள் திணிக்கிறது. ஆக, பிசாசு உருவாக்கிய world system எனப்படும் உலகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே ஒவ்வொரு மனிதனுடைய “நான்” என்பதும் உருவாக்கப்படுகிறது. அந்த “நான்” சிறுகித்தானே ஆகவேண்டும்?

சரி, அவர் பெருக வேண்டும் என்றால் “அவர்” என்பது யார்? அவர் “வார்த்தை”யானவர். அந்த வார்த்தை “எது முக்கியமானது, எது மதிப்பு மிக்கது, எது தேவையானது, எது அழகானது,…” என்பதில் முற்றிலும் மாறுபட்ட பரலோக ராஜ்ஜியத்தின் மதிப்பீடுகளை நமக்குத் தருகிறது. ஏற்கனவே உலகம் நமக்குள் செய்த பதிவுகளை நீக்கிவிட்டு “அவருடைய” வார்த்தைகளை நமக்குள் பதிவுசெய்துகொண்டே வரும்போது நமக்குள் “அவர்” பெருக ஆரம்பிக்கிறார், “நான்” சிறுக ஆரம்பிக்கிறது. நமது belief system முற்றிலும் புதியதாகி விடுகிறது.

ஆக, நான் சிறுகுவது என்பது நம்மைத் தாழ்மையாக்குவது அல்ல, நம்மை வெறுமையாக்குவது. அவர் பெருகுவது என்பது வெறும் வாயினால் அவரை உயர்த்துவது அல்ல, ஆவியானவரின் துணையுடன் வார்த்தையானவரைக் கற்றுக்கொள்வது. எனவேதான் நமக்கு சீஷன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சீஷன் என்றால் learner என்று அர்த்தம்.

Leave a Reply