நம்பிக்கை துரோகம்

நம்முடைய விசுவாசத் தகப்பனாகிய ஆபிரகாமின் சொந்த ஊர், “ஊர் (Ur)” எனும் நகரம் என்பது நமக்குத் தெரியும். ஆபிரகாமின் மூதாதையர் வழிபட்டு வந்த கடவுளுக்குப் பெயர் “சின்(Sin)” அல்லது நன்னா(Nanna) ஆகும். இது நிலவுக் கடவுள். இதில் நன்னா முழுநிலவையும், சின் பிறை நிலவையும் குறிக்கும். இந்த நிலவு வழிபாட்டு மதம் ஊர் நகரத்தில் மட்டுமல்ல, மெசபடோமியா முழுவதும் பின்பற்றப்பட்டு வந்த மதம்.

சின் கடவுளின் அடையாளம் நிலாப்பிறை ஆகும். காளை மாடும், படகும் இவர்களின் புனிதச் சின்னங்கள். காளைமாட்டின் கொம்புகளின் வடிவமும், படகும் நிலாப்பிறை வடிவில் இருப்பதே அதற்குக் காரணம். மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதும் தங்கத்தினால் செய்யப்பட்ட கன்றுகுட்டி நிலவு வழிபாட்டின் அடையாளம் ஆகும்.

1 இராஜாக்கள் 12-இல் யெரோபெயாம் பெத்தேல் மற்றும் தாணில் பொன் கன்றுக்குட்டிகளை நிறுவி, நிலவு வழிபாட்டை தேசிய மதமாக அறிவித்ததையும் நம்மால் வாசிக்க முடியும். யாத்திராகமம் 32-ஆம் அதிகாரத்தில் எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் பொன்கன்றுக்குட்டி செய்து வணங்கி கர்த்தரின் கோபத்துக்கு ஆளானதைக் காண்கிறோம்.

அவர்களுக்கு மோசே கொடுத்த தண்டனை சற்று வித்தியாசமானது, “அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்” என்று யாத் 32:20-இல் வாசிக்கிறோம்.

சரி, மோசே ஏன் அவ்வாறு செய்தார் அதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தால். புருஷனுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் உறவு கொண்ட ஒரு பெண்ணை அவளது நம்பிக்கை துரோகத்தை உணர்த்தும் விதமாக ஒரு மண்பாண்டத்தில் பரிசுத்த நீரை ஊற்றி அதில் தரையிலிருக்கும் புழுதியை கொஞ்சம் எடுத்து அந்தத் தண்ணீரில் கலந்து அந்தப் பெண்ணுக்கு குடிக்கக் கொடுக்கும் பரீட்சை குறித்து எண்ணாகமம் 5: 11-27-இல் வாசிக்கலாம். அவள் தவறு செய்திருந்தால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜனங்களுக்குள் அடையாளமாக இருப்பாள்.

இங்கு அதையே ஒரு அடையாளமாக மோசே செய்வதைக் காணலாம். இஸ்ரவேலர் பிதாவாகிய தேவனை விட்டு விலகி அந்நிய தேவர்களைப் பின்பற்றிய போதெல்லாம் கணவனுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் உறவு கொள்ளும் பாவத்தையே கர்த்தர் சுட்டிக்காட்டி மக்களை எச்சரிப்பதை பழைய ஏற்பாட்டு புத்தகம் முழுவதிலும் அதிலும் விசேஷமாக ஓசியா புத்தகத்தில் காணலாம். இப்பொழுது மோசே ஏன் அப்படிச் செய்தார் என்பதன் பொருள் உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

தியானத்துக்கு: எரேமியா:2

Leave a Reply