துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

இக்கட்டுரையை MP3 ஆடியோ வடிவில் கேட்க:


(பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு WhatsApp-இல் பகிருங்கள். நன்றி)

ஒருபக்கம் வண்டி வண்டியாக ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் பரலோகம் இன்னொருபக்கம் பாடுகளைக் குறித்தும் பேசாமல் இல்லை. ஆனால் அது எந்தவிதமான பாடுகள், யாரிடமிருந்து வருகின்றன என்பதை நம்மவர்கள் பகுத்து அறியாததால் எளிதாக சாத்தானின் பொய்யினால் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள்.

இவ்வுலகில் துன்பங்கள் இருவிதமான மூலத்திலிருந்து வருகின்றன. ஒன்று சாபத்தினிமித்தம் வரும் துன்பங்கள், இன்னொன்று நீதியினிமித்தம் வரும் துன்பங்கள். சாபத்தினிமித்தம் வரும் துன்பங்கள் அனைத்தும் ஆதாமின் மீறுதலின் விளைவாக வந்தவை. பயம், துக்கம், சமாதானமின்மை, பற்றாக்குறை, வியாதிகள், தொடர் தோல்விகள் என்று இன்னும் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நீதியின்மித்தம் வரும் ஆசீர்வாதங்கள் கர்த்தரிடமிருந்து வருபவை. நீதியின் நிமித்தம் வரும் துன்பங்கள் தேவனிடமிருந்து அல்ல, மனிதரிடமிருந்து வருபவை. மனிதர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை நமக்குத் தருகிறார்கள் என்பதையும் இயேசுவே மத்தேயு 5: 10-13 வசனங்களில் தெளிவாக விளக்குகிறார்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.(மத்தேயு 5:10).

இரட்சகர் இயேசுவே நமக்கு எல்லாவற்றிலும் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவர் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீதியினிமித்தம் வந்தவையே! அவர் தமது சொந்த மக்களாலும், உலகத்தாராலும் புறக்கணிக்கப்பட்டார், அவர்களால் அவமானமும் காயங்களும் அடைந்தார். அதையே அப்போஸ்தலரும், ஆதி கிறிஸ்தவரும் அனுபவித்தார்கள்.

ஆனால் சாபத்தின் விளைவாக வந்த துன்பங்கள் எதையும் இயேசு அனுபவிக்கவில்லை, அதனால்தான் இயேசு வியாதிப்பட்டிருந்ததாக சுவிசேஷங்களில் எங்குமே குறிப்புகள் இல்லை. நம்மையும் அவற்றை அனுபவிக்கும்படி அவர் சொல்லவில்லை. மாறாக தாம் சிலுவையில் பட்ட பாடுகளினிமித்தம் நம்மை அவற்றிலிருந்து விடுவித்திருக்கிறார். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (கலாத்தியர் 3:13) சாபத்தினால் வரும் துன்பங்களுக்கு மூலமாக இருப்பது பாவம். இயேசு பாவத்தின் கொடுக்கை சிலுவையில் முறித்தபடியால் பாவமோ சாபமோ நம்மை ஆளுகை செய்ய முடியாது, ஆனால் நம்மில் பலர் அறியாமையால் அந்தப்பாடுகள் இன்றளவும் நம்மைத் துன்பப்படுத்த அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

நீதியின்நிமித்தம் வரும் துன்பங்கள் என்பவை மனிதர்களால் வரும் எதிர்ப்புகளும், போராட்டங்களுமே! நீங்கள் நீதியிமித்தம் வியாதிப்பட்டால், நீங்கள் நீதியினிமித்தம் தரித்திரமடைந்தால், நீங்கள் நீதியினிமித்தம் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு மனஅழுத்தமடைந்தால்…என்றெல்லாம் இயேசு சொல்லவில்லை. ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் அறியாமையின் நிமித்தமாக தங்கள் அனுமதித்த உலகத்தின் துன்பங்களை கிறிஸ்துவுக்காக அனுபவிப்பதாக எண்ணி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள்.

சரி, நீதியின் நிமித்தம் வரும் துன்பங்களைக்கூட நாம் அனுபவிக்கத்தான் வேண்டுமா?

நீங்களாக தேடிப்போய் நீதியின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கு உங்கள் கழுத்தைக் கொடுத்து அதன் மூலம் என்மீது வைத்த அன்பை நிரூபியுங்கள் என்று கர்த்தர் சொல்லவில்லை. எந்த ஒரு நல்ல தகப்பனும் தன் அன்புப் பிள்ளைகளிடம் அப்படி சொல்ல மாட்டான். மாறாக உங்கள் பாதையில் அப்படிப்பட்ட துன்பங்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் கலங்காதிருங்கள், நான் உங்களுக்கு அந்த துன்பத்திலும் துணை நிற்பேன் அதுமட்டுமல்ல அந்த துன்பங்களின் நிமித்தம் பரலோகத்தில் நீங்கள் அடையப்போகும் வெகுமதி மிகப்பெரியதாக இருக்கும் என்று தேற்றும் விதத்திலேயே அவற்றை எழுதியிருக்கிறார்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவான் 16:33)

ஒருவன் ‘கிறிஸ்தவனாயிருப்பதினால்’ பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன் (I பேதுரு 4:16)

நீதியின் நிமித்தம் பாடுகள் உங்கள் பாதையில் வந்தால் கலங்காதிருங்கள் என்று ஆறுதல் சொல்லும் கர்த்தர் அந்தப் பாடுகளை வரவிடாமல் தடுக்கவும் நமக்கு வழி சொல்லுகிறார்.

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று 1 தீமோ 2:2 மூலம் கர்த்தர் நமக்கு ஆலோசனையும் தருகிறார்.

ஆக நீதியின்நிமித்தம் வரும் துன்பங்கள்கூட கர்த்தர் நமக்கு தருவதில்லை. அவை பொல்லாத மனிதர்களிடமிருந்து நமக்கு வருகின்றன. அதையும் தவிர்த்து நாம் சமாதானமாகவும், பாதுகாப்புடனும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் கர்த்தர் விரும்புகிறார். எனவே கலகமில்லாத, அமைதலுள்ள ஜீவனத்தை விரும்புங்கள். அதை கர்த்தர் நமக்குத்தர விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

2 thoughts on “துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?”

Leave a Reply