தவறுகளைச் சுட்டிக் காட்டலாமா?

என்னை (எசேக்கியேல்) கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி… (எசேக்கியேல் 8:14,15)

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் முதலாவது தேவ ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு தேவ சமூகத்திலிருந்து ஆவியானவரால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு அவர்களது அக்கிரமங்களை தேவனோடு நின்று பார்த்து, தேவனிடமிருந்து வார்த்தையைப் பெற்று எச்சரிப்பின் தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள். இங்கு தன் ஜனங்களைக் குறித்த தேவ வைராக்கியம் விளங்குகிறது.

எந்த தீர்க்கதரிசியும் தான் போகிற வழியின் மக்களின் அக்கிரமங்களைப் பார்த்துவிட்டு வைராக்கியமடைந்து சொந்தமாக அவர்களை எச்சரித்தோ அல்லது சபித்தோ பேசவில்லை அல்லது எழுதவில்லை.

தேவனுடைய ஜனங்கள் வழி விலகும்போது அவர்களை எச்சரிக்கும் உரிமை ஊழியக்காரருக்கு உண்டு, ஆனால் அது கத்தி மீது நடப்பதைப் போன்று வெகு ஜாக்கிரதையுடன் செய்யப்பட வேண்டியது. தேவனைப் பார்த்துவிட்டுத்தான் அவர் சொன்னதைப் பேசவோ எழுதவோ வேண்டுமே தவிர, ஜனங்களின் தவறுகளைப் பார்த்துவிட்டு மாம்சீக வைராக்கியத்தில் அதைச் செய்யக்கூடாது.

அப்படி செய்யும்போது அந்த முன்னுதாரணத்தை எடுத்துக் கொண்டு சபைக்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடாதவர்கள்கூட துணிகரமாக தங்கள் இஷ்டத்துக்கு பேசவும் எழுதவும் தொடங்கி விடுவார்கள். அவை பிசாசின் கையில் சபைக்கு எதிரான ஆயுதமாக மாறிவிடும். நாம் பேசிய, எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளுக்காகவும் தேவ சமூகத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டியது வரும்.

Leave a Reply