வாழ்நாள் பற்றாக்குறையைக் குறித்த பயமே நமது இளைப்பாறுதலைக் கெடுத்து வாழ்நாளை சீக்கிரம் முடித்து வைக்கிறது என்ற சிந்தனையை கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதை வாசிக்காதவர்களுக்கு அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் பற்றாகுறையைக் குறித்த பயத்தைப் போலவே வளங்களின்(Resources) பற்றாக்குறையைக் குறித்த பயமும் நமது இளைப்பாறுதலை குலைத்துப் போடுகிறது. நாம் நன்றாக வாழ்வதற்குத் தேவையான வளங்கள் இந்த பூமியில் குறைவாயிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை சத்துருவானவன் உலகத்தில் உண்டாக்கி வைத்திருக்கிறான். அந்தப் பற்றாக்குறையின் பயத்தைக் கொண்டே மனிதர்களை இயக்குகிறான், நிறுவனங்களை இயக்குகிறான், அரசாங்கங்களை இயக்குகிறான். கலகங்களையும், போர்களையும் உண்டாக்குகிறான்.
இந்த உலகத்தில் வளங்களின் பற்றாக்குறை இருப்பது மெய்தானே என்று கேட்டால், ஒருவன் கருவூலத்தைப் பூட்டிவிட்டு கைகளில் காசு இல்லை என்று வெறுங்கையைக் காட்டினால் அது எப்படியிருக்கிறதோ அப்படித்தான். கைகளில் காசு இல்லை என்பது மெய்தான், ஆனால் கருவூலத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறதே. பூமியைப் போஷிக்கும் கருவூலம் பரலோகம். அந்தப் பரலோகம் மனிதனின் கண்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதுதான் பிரச்சனை.
ஏதேனில் இருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வளங்களின் பற்றாக்குறை குறித்த எண்ணமே இல்லை. தேவன் அவர்களது தேவைக்கும் மிகமிக அதிகமான வளங்களை முதலில் உருவாக்கி வைத்துவிட்டே பின்னர் அவர்களைப் படைத்தார். இன்றும்கூட இந்த பூமியில் ஆயிரம் கோடி மனிதர்கள் வாழ்ந்தாலும், அத்தனை பேரும் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் வருடங்கள் வாழ்ந்தாலும், அத்தனை பேருக்கும் ஒருவேளை கூட தவறாமல் வயிறு நிறைய உணவளித்து அவர்களை வாழ்விக்க தேவன் வல்லவராக இருக்கிறார். சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பதுபோல பூமி இந்த அறிவினால் நிரம்புவரை உலகில் போர்களும், கலகங்களும், குற்றங்களும் ஓயாது.
தனக்குக் கிடைக்க வேண்டிய ஏதோ ஒரு நன்மை இந்த உலகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது. அதைத் தான் எடுத்துக்கொள்ளாவிட்டால் வேறொருவன் எடுத்துக் கொள்வான் என்ற பயமே மனித மனங்களைத் தாறுமாறாக்குகிறது. தன் உடல்நலத்தைக்கூட தியாகம் செய்தாலும் பரவாயில்லை, போராடியே தீரவேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு மனிதன் தள்ளப்படுகிறான். எனக்கு ஒரு பிதா இருக்கிறார், அவரே எனக்கு தரவேண்டிய அத்தனையையும் தருகிறவர். எனக்கு வரவேண்டிய எதுவும் எனக்குக் கிடைக்காமல் போகாது என்கிற நிச்சயம் எப்பொழுது வருகிறதோ, அப்பொழுதே அந்த மனிதனின் மனம் இளைப்பாறுதல் அடைகிறது. அந்த இளைப்பாறுதல் அவனது வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.
பெட்ரோல் மற்றும் இயற்கை வளங்கள் தனக்கு தேவைக்கும் அதிகமாகவே இருக்கிறது என்ற நிச்சயம் ஒரு வல்லரசு நாட்டுக்கு இருக்குமானால் அது தனது உளவு அமைப்புகளை அந்த வளங்கள் அதிகமாக பூமியில் புதைந்திருக்கும் ஏழை நாடுகளுக்கு அனுப்பி அங்கே அமைதியைக் குலைத்து, தான் ஊடுறுவி அந்த மண்ணை வசப்படுத்திக் கொள்ளும் தந்திர முயற்சியில் இறங்காது. இன்று நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் பல விரும்பத்தகாத செய்திகள் இல்லாமலேயே போயிருக்கும்.
ஒரே தெருவில் இரண்டு சபைகள் இருந்தால் அந்த இரண்டு சபைகளின் பாஸ்டர்களாலும் ஏன் சில நேரங்களில் ஐக்கியமாக இருக்க முடியவில்லை. என் சபைக்கு வரும் ஆத்துமாக்களை இவர் இழுத்துக் கொண்டார், என் சபை மக்களை அவர் ஈர்த்துக்கொண்டார் என்ற பிரச்சனைகள் எதனால் உருவாகின்றன. இதுவும் ஒருவகையில் (மனித)வளங்களின் பற்றாக்குறையைக் குறித்த பயமே ஆகும். ஒரு தெருவில் பத்து சபைகள் இருந்தாலும் பத்து சபைகளையும் ஆத்துமாக்களால் நிரப்பி ஆசீர்வதிக்க கர்த்தர் வல்லவராக இருக்கிறார் அல்லவா? இந்த விசுவாசத்தை அனுபவமாக்கிக் கொண்டால் அந்த பத்து சபைகளுக்குள்ளும் ஒரு இனிமையான ஐக்கியம் நிலவுமல்லவா?
கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?(எண் 11:23) என்ற கேள்வியை மனிதர்களைப் பார்த்து தேவன் கேட்கிறார். வனாந்திரத்தில் மன்னாவையும் காடைகளையும் கொண்டு இலட்சக்கணக்கானோரை போஷித்தது, ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்து மீதியான துணிக்கைகளை பனிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தது, ஆகாயத்துப் பறவைகள், காட்டு புஷ்பங்கள் போன்றவற்றைக் குறித்த உவமைகள் ஆகிய இவைகளெல்லாம் நமது பற்றாக்குறையைக் குறித்த பயத்தை உடைக்கும் பாடங்கள்.
நரகத்தையும், நியாயத்தீர்ப்பையும் காட்டி பயமுறுத்தி மனிதனை பாவத்தை விட்டு விலக்க எடுக்கும் முயற்சிகள் வீண். நான் ஒரு செழிப்பான குடைக்குக் கீழ் வசிக்கிறேன். எனக்குக் கிடைக்க வேண்டியவையெல்லாம் எதுவும் குறைவின்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஒரு மனிதனுக்குள் உண்டாகிவிட்டால் அவனே பாவம் செய்திருப்பதைவிட்டு ஓய்ந்திருப்பான். இந்த பூமியில் யாரும் விருப்பப்பட்டு கொலையும், களவுகளும் செய்வதில்லை. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை (ஏசா 11:9) என்ற நிலை ஆயிரவருட அரசாட்சியில் இப்படித்தான் சாத்தியப்படும்.
தேவனையே உங்கள் ஆதாரமாகக் கொண்டு அவரைச் சார்ந்து வாழ்ந்து பாருங்கள். இந்த உலகத்திலுள்ள வளங்களின் இருப்பைக் குறித்து கவலை கொள்ளாதிருங்கள். இந்த உலகம் இல்லாமையில்தான் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் இவ்வுலகத்தின் வளங்களுக்காகப் போட்டியிடட்டும். ஆனால் நாம் இந்த உலகத்துக்குரியவர்கள் அல்ல. நாம் பரலோக ராஜ்ஜியத்தின் பிரஜைகள். நம்மை போஷிக்கும் பொக்கிஷசாலை பரலோகத்தில் இருக்கிறது. அதன் வளங்கள் அள்ள அள்ளக் குறையாது. நமக்குப் பற்றாக்குறை என்பதே இல்லை.
இளைப்பாறுதலும், சாவாமையும்: shorturl.at/rLX09