சிஸ்டம் சரியில்ல…

இந்த வார்த்தைகள் தற்சமயம் அதிகம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதை அதிகம் விவாதிக்க வேண்டியதும், பிரசங்கிக்க வேண்டியதும் நாம்தான். ஆனால் நாமோ இந்த சிஸ்டத்துக்குள் (world system) ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்பதையே பேசிக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருக்கிறோம்.

சிஸ்டம் என்பது என்ன?
இது மனிதர்கள் தனியாகவும், சமூகமாகவும் ஒன்றிணைந்து வாழும்படியும், ஒரு வளர்ச்சியை நோக்கி முன்னேறும்படியும் உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான உலகளாவிய ஒழுங்குமுறை. அந்த பொதுவான ஒழுங்கு முறைக்குள் இனம், மொழி, சமய நம்பிக்கை, இடம் மற்றும் சூழலுக்கேற்றவாறு மனித இனம் சிற்சில மாற்றங்களை செய்துகொண்டு வாழ்ந்து வருகிறது. இந்த சிஸ்டம் குறித்து வேதாகம வெளிச்சத்தில் நாம் சில காரியங்களை தியானிக்கலாம்.

இந்த சிஸ்டம் யாரால், யாருக்காக உருவாக்கப்பட்டது?
இது ஏழைகளுக்கும், உழைக்கும் வர்கத்துக்கும், எளிய பாமர மக்களுக்கும் எதிராக அவர்களை சுரண்டும்படி பணக்கார மற்றும் அதிகார வர்க்கதினரால் உண்டாக்கப்பட்டது என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த சிஸ்டம் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதே அல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இது வேதாகமத்தின்படி முதல் மனிதனான ஆதாமிடமிருந்து அதிகாரத்தை பிடுங்கிய தள்ளப்பட்ட தூதர்கள் தங்களுக்காக, தங்கள் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும்படி உருவாக்கிய பொது ஒழுங்குமுறையே இது!

பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.(லூக்கா 4:5-7)

இறைமகன் இயேசுவிடமே இப்படிப்பட்ட டீலை முன்வைத்தவன்தான் தள்ளப்பட்ட தூதர்களின் தலைவனாகிய சாத்தான். அவனது இந்த டீலுக்கு ஒத்துக்கொண்டு அவனுக்கு ஒத்துழைக்கும் எவருக்கும் அதிகாரத்தையும், ஐசுவரியத்தையும், புகழையும் வாரி வழங்குகிறான். நமது மாம்ச கண்களுக்கு அந்த மனிதர்கள்தான் தெரிகிறார்களேயொழிய பின்னே இருந்து செயல்படுத்தும் அந்தகார சக்திகள் தெரிவதில்லை.

சற்று சிந்தித்துப் பாருங்கள்! இந்த சிஸ்டமானது என்னதான் சுயநல மனிதர்களால் ஒருவேளை உருவாக்கப்பட்டிருந்தாலும் அது மனித இனத்தையே அழிக்கும் விதத்தில் நிச்சயம் உருவாக்கப்பட்டிருந்திருக்காது. ஏனெனில் மனித இனம் அழியும்போது அவர்களும் அவர்கள் சந்ததியும் சேர்ந்துதான் அழியும் என்பது அவர்களுக்கு தெரியாதா? பூமியையே பொசுக்கும் அணு ஆயுதங்களும், மருந்து மற்றும் உணவு வடிவில் விற்கப்படும் விஷங்களும், அரசியல் இனப்படுகொலைகளும், நாசகாரத் திட்டங்களும் மனித இனத்தையே கருவறுக்கும் வன்மமுள்ள ஒருகூட்டத்தால்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம் அல்லவா? அந்தக் கூட்டத்தைத்தான் பரிசுத்த வேதாகமம் இனம் காட்டுகிறது.

இந்த சிஸ்டம் எதை நோக்கி போகிறது? ஓருலக அரசாங்கம், அதற்கு ஒரே தலைவன், ஒரே ராணுவம், ஒரே வணிகம், ஒரே மதம் என்ற நோக்கில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இது இன்று, நேற்று போடப்பட்ட திட்டமல்ல 6000 ஆண்டுகால காய் நகர்த்தல். எனவே இது சாதாரண மனிதர்களையும் தாண்டி, பூமிக்கு சம்பந்தமில்லாத ஆனால் பூமியை கைப்பற்றத் துடிக்கும் ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறதல்லவா?

இன்று இவற்றைப் பற்றி பேசாமல் சபை தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உலகத்தார் ஆராயவும், பேசவும் தொடங்கிவிட்டார்கள். வேதம் தள்ளப்பட்ட தூதர்கள் என்று சொல்லியிருக்க, அவர்களோ ஏலியன்கள் என்று ரெப்டீலியன்கள் என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ சாத்தான் இந்த பூமியை சாராதவன் என்ற பட்சத்தில் அவனை ஏலியன் என்றும், அவனை வேதம் “சர்ப்பம், வலுசர்ப்பம்” என்று அழைப்பதால் அவனை ரெப்டீலியன் என்று அழைப்பதும் ஒரு விதத்தில் சரியே! அந்த நாகம் உண்டாக்கிய “நாக”ரீகம்தான் இன்று மனித இனத்தையே ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அப்படி ஆராய்பவர்களையும் வேதாகம உண்மையிலிருந்து திசைதிருப்பும் விதத்தில் பல ஏலியன் மற்றும் பறக்கும்தட்டு கதைகள் மீடியாக்களால் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த சிஸ்டத்தையும் அதை உருவாக்கியவனையும் தோலுரிக்க வேண்டிய கடமை சபைகளுக்கே உரியது. இந்த சிஸ்டத்துக்கு எதிரான ஒன்று இருக்குமானால் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிறுவிய “இறையரசு” மட்டுமே! அதைக் குறித்து நாம் எவ்வளவு பிரசங்கித்திருக்கிறோம் அல்லது அறிந்து வைத்திருக்கிறோம்? நமது ஆவிக்குரிய தேடல் எதை நோக்கியிருக்கிறது என்பதை இந்த வேளையில் நாம் சிந்திக்க வேண்டிய அவசியத்திலிருக்கிறோம்.

இந்த சிஸ்டம் நமக்கு நெருடலாகவும், uncomfortable- ஆகவும் இருந்தால் அதுதான் நீங்களும் நானும் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அடையாளம். இந்த சிஸ்டத்திலும் நம்மை பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு இந்த சிஸ்டத்துக்குள்ளேயே இருக்க விரும்புவது ஆபத்தான அறிகுறி. நமது இருதயம் பரலோக ராஜ்ஜியம் அதன் நீதி இவைகளை நோக்கியே இருக்க வேண்டும். அதற்காக ஏங்க வேண்டும். கிறிஸ்துவின் நீதியுள்ள அரசாட்சியின் நாளைக் காண ஏங்க வேண்டும். அந்த ஏக்கம் நமக்கு இருக்கிறதா அல்லது அந்த ஏக்கத்தை மக்களின் மனதில் உருவாக்கும் விதத்தில் நமது ஊழியம் இருக்கிறதா என்பதை ஆராயக்கடவோம்.

2 thoughts on “சிஸ்டம் சரியில்ல…”

Leave a Reply