சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று யோவான் 8:32 சொல்லுகிறது. ஆனால் ஜனங்கள் விடுதலையடையும்படிக்கு இன்று சத்தியம் சத்தியமாக போதிக்கப்படுகிறதா? ஏன் போதிக்கப் படுவதில்லை? சத்தியத்தை சத்தியமாக போதிக்க முடியாதபடி இன்றைய பிரசங்கியார்களை கட்டிவைத்திருக்கும் கட்டுகள் எவையெவை?
1. தான் நம்புவதையும், பிரசங்கிப்பதையும் அனுதின வாழ்க்கையில் பயிற்சி செய்யாதவர்களால் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்க முடியாது. இவர்களுக்கு ஆவிக்குரிய சத்தியங்களை பயிற்சிசெய்வது குறித்த நடைமுறை தெளிவு இல்லாதபடியால் காலப்போக்கில் உபதேசம் என்ற பெயரில் சுமக்கமுடியாத சுமைகளையெல்லாம் ஜனங்களின் தோளில் சுமத்த தொடங்கிவிடுவார்கள், தாங்களோ தனது கைகளினாலும் அவைகளை தொடமாட்டார்கள்.
2. சத்தியத்தை குறித்து ஆவியானவரிடம் வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்ளாமல் வெறும் இண்டர்நெட்டையும், வேதாகம விளக்கவுரைகளையும், பிரசங்க கையேடுகளையும் சார்ந்துகொண்டு பிரசங்கிப்பவர்களால் சத்தியத்தை சத்தியமாக போதிக்க முடியாது. இவர்கள் பிரசங்கங்களில் அறிவு பெருக்கெடுத்து ஓடினாலும் ஆவியின் வறட்சி அப்பட்டமாகத் தெரியும்.
3. சிலர் இரட்சிக்கபட்டு சில நாட்களில் இவர்கள் ஜெபத்தின் மூலம் சில அற்புதங்கள் நடந்து பிசாசுகள் ஓடியதன் விளைவாக ஜனங்கள் இவரைத் தேடிவரத் துவங்கியிருப்பார்கள். உடனெ இவர் தானும் தன்னை பாஸ்டர் என்று அறிவித்துவிட்டு ஆராதனைகளை நடத்தவும் பிரசங்கிக்கவும் தொடங்கிவிடுவார். பாஸ்டர்களுக்கு வேதாகமக் கல்லூரி சான்றிதழ் தேவை என்று நாங்கள் சொல்லவில்லை. ஒரு புதிய விசுவாசி தனது சாட்சியை சொல்லி சுவிசேஷம் அறிவிப்பது வேறு, சபைக்கு மேய்ப்பனாக பொறுப்பேற்பது வேறு. அடிப்படை சத்தியம்கூட தெரியாதவரால் ஆடுகளை பரலோக ராஜ்ஜியத்தின் நெருக்கமான வழிக்குள் நடத்திச்செல்ல முடியாது. அதற்கு அழைப்பும் அனுபவமும் தேவை.
4. இரகசிய பாவங்களில் சிக்குண்டிருக்கும் சில பிரசங்கியார்கள் மனசாட்சியால் குத்தப்படுவதன் விளைவாக சில விஷயங்களை விடுதலையோடு பிரசங்கிக்க முடியாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது. இவர்கள் தான் பாவம் செய்வதோடல்லாமல், பிறர் செய்யும் பாவங்களையும் பிரசங்கத்தில் கண்டிக்காமல் கண்சாடையாய் விட்டுவிடுவார்கள்.
5. பொய்யர்களும், மாய்மாலக்காரர்களும் தேவனுடைய சத்தியத்தை பேச முடியாது, இவர்கள் சிறந்த மேடைநடிகர்கள். பிரசங்க பீடத்தில் நிற்கும் தன்னை ஆவியானவர் முழுவதும் ஆட்கொண்டிருப்பது போல நடிப்பார்கள். “ஆவியானவரின் வல்லமை தாங்கமுடியவில்லை, பாரம் அழுத்துகிறது, இந்தப் பிரசங்க பீடத்தை மாத்திரம் பிடித்துக்கொண்டு நிற்காவிட்டால் விழுந்துவிடுவேன்” என்பார்கள். கண்களை மூடிக்கொண்டும் கைகள் நடுங்குவதுபோல பாவனை செய்துகொண்டும் இருப்பார்கள். ஆவியானவரின் உஷ்ணம் தாங்க முடியாதவர்கள் போல அவ்வப்போது “உஸ்ஸ்ஸ்ஸ்” என்று சத்தமிட்டுக்கொள்வார்கள். இவர்களது நடிப்பின் நோக்கம் “ஊழியக்காரர் பேசவில்லை,ஒவ்வொரு வார்த்தையையும் ஆவியானவரே பேசுகிறார்” என்று கூட்டத்தில் உட்காந்திருக்கும் ஜனங்களை நம்ப வைப்பதே ஆகும். இவர்களின் நடிப்புக்கு உயிரூட்டும் விதமாக பிண்ணனியில் ஒலிக்கும் கீபோர்ட் இசையும் இருக்கும். ஆனால் இவர்கள் பிரசங்கமோ சற்றும் சாரமற்று இருக்கும். எந்த அலட்டலும் இல்லாமல் சக அப்போஸ்தலரோடு எழும்பி நின்று பேதுரு செய்த பிரசங்கம் அன்று 3000 பேரை இரட்சித்தது. ஆனால் பரலோகமே வந்து தனது தோளில் இறங்கியிருப்பதுபொல அலட்டிக்கொண்டு இவர்கள் செய்யும் பிரசங்கத்தில் தற்காலிக பரவசம் இருக்கும் ஆனால் நிரந்தர பலனொன்றும் இருக்காது.
6. ஞாயிற்றுக்கிழமையானால் சபையில் பிரசங்கம் செய்தாக வேண்டுமே என்பதை கடைமைக்காக செய்கிறவர்களை கர்த்தர் பயன்படுத்தவே முடியாது. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்ற வேதவார்த்தை இவர்களுக்கு சாலவும் பொருந்தும். பிரசங்கத்தை கேட்கப்போகும் ஜனங்களின் ஆத்துமாக்கள் மீது பாரத்தோடு ஜெபத்திலும் வேத தியானத்திலும் மணிக்கணக்காக பிரசங்கத்துக்கான ஆயத்தங்கள் செய்யும் பொறுப்புள்ள ஊழியக்காரர்கள் மூலமே கர்த்தர் பேசுவார்.
7. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சபைபிரிவின் அல்லது கிறிஸ்தவ நிறுவனத்தில் பிரதிநிதியாக பிரசங்கபீடத்தில் நிற்கும்போது தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் கருத்துக்களும் செயல்பாடுகளும் வேத சத்தியத்துக்கு புறம்பாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக போதிக்க முடியாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது. இது ஒருவிதமான கட்டுண்ட நிலை. இப்படிப்பட்டவர்களுக்கு தங்கள் வயிற்றுப்பிழைப்பே பிரதானம்!
8. ஒரு பிரசங்கியார் தனது ஆவிக்குரிய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அந்த அனுபவங்கள் வேத சத்தியத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். வேத வார்த்தையின்படி போதிக்காமல் தங்கள் சொந்த அனுபவங்களை மாத்திரம் சார்ந்து போதிக்கிறவர்கள் ஜனங்களை குழப்பிவிடுகிறார்கள். பரலோகத்துக்கும் நரகத்துக்கும் அடிக்கடி பயணம் செய்வதாகவும் தேவதூதர்களை தரிசித்ததாகவும் ஜனங்களை நம்பவைத்து கதை சொல்லும் பிரசங்கியார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்கு காலப்போக்கில் தனது அனுபவங்களுக்கு ஏற்றார்போல வேத வாக்கியத்தை வளைக்கவும் பல கட்டுக்கதைகளை புனைந்து நடக்காததை நடந்ததாக சொல்லி பிரசங்கிக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
9. பொருளாதாரத்துக்காக தனிப்பட்ட சில பெரிய மனிதர்களை சார்ந்திருக்கும் பிரசங்கியார்கள் தங்களை போஷிப்பவர்களின் கருத்துக்களுக்கு எதிராக பிரசங்கிக்க முடியாமல் ஒருவேளை சிக்குண்டு கிடக்கலாம். மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள் என்ற வேதவார்த்தை இவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.
10. புதிய ஏற்பாட்டு பிரசங்கம் என்பது முழுக்க முழுக்க பரலோக ராஜ்ஜியம் பற்றியது. இயேசுவின் உவமைகள், பிரசங்கங்கள் போன்றவை பரலோக இராஜ்ஜியத்தைப் பற்றியே இருந்தது. அப்போஸ்தலர்களின் நிருபங்களின் சாரமும் பரலோக இராஜ்ஜியத்தை குறித்ததாகவே இருந்தது. எனவே புதிய உடன்படிக்கை பிரசங்கத்தின் ஒட்டுமொத்த Focus பரலோக இராஜ்ஜியமாகத்தான் இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேறு காரியங்களில் Focus-ஐ திருப்பி பிரசங்கிக்கும்போது விசுவாசி அறிந்துகொள்ளவேண்டிய மேன்மையான காரியங்கள் மறைக்கப்பட்டுப் போகின்றன. ஜனங்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் பிரசங்கிக்காமல் அவர்களுக்கு எது தேவையோ அதைப் பிரசங்கிக்க வேண்டும்.
11. பல லட்சம் லோன் போட்டு சபைக்கும் ஊழியத்துக்கும் கட்டிடங்கள் கட்டி அந்த லோனுக்கு வட்டி கட்டி வரும் மேய்ப்பர்கள் சபைமக்களுடைய பாவத்துக்கு எதிராக கண்டணம் செய்து பிரசங்கிக்க முடியாமல் போகலாம். ஏனென்றால் இத்தகைய கடின பிரசங்கத்தால் குத்தப்படும் ஜனங்கள் சபையைவிட்டு வெளியேறி அதன் விளைவாக சபைக்கு வரும் வருமானம் குறைந்து வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சத்தியத்தை காம்ப்ரமைஸ் செய்து ஜனங்களின் செவித்தினவுக்கு தீனிபோடும் பிரசங்கியாராக மாறிவிடும் அபாயச் சூழல் காணப்படுகிறது.
12. தனது சாட்சியற்ற பாவ வாழ்க்கை வெளியே தெரிந்து அதனால் மக்கள் மத்தியில் அவமானப்பட்ட பிரசங்கியார்கள் குற்ற மனசாட்சியால் வாதிக்கப்பட்டு தைரியமாக சத்தியத்தை சொல்லமுடியாத சூழ்நிலையில் சிக்குண்டிருக்கலாம். அந்தரங்கத்தில் ஒழுக்கக்கேடான வாழ்க்கை, பண விஷயங்களில் நேர்மையின்மை போன்ற விஷயங்களில் சிக்கி பெயரைக் கெடுத்துக்கொண்டவர்களால் யோவான் ஸ்நானகனைப் போல தலைநிமிர்ந்து பிரசங்கிக்க முடியாது. ஏதோ பெயருக்காக வழவழா கொழகொழா என்று நேரத்தை கடத்துவதற்காக ஏதாவது பேசிவிட்டு பிரசங்கத்தை முடித்துவிடுவார்கள். இவர்களை மறுபடியும் கட்டி எழுப்புவது மிகவும் சிரமமாக காரியம். ஆனாலும் மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்.
13. ஆசாரியன் ஏலியால் பிள்ளை வளர்ப்பு பற்றி போதிக்க முடியாது; அதுபோல தனது சொந்த குடும்பத்தார் அடங்காமல் எல்லோருக்கும் முன்பாக சாட்சியற்ற வாழ்க்கை வாழுந்து கொண்டிருக்கும்போது அப்படிப்பட்ட பிரசங்கியார்களால் விடுதலையோடு பிரசங்கிக்க முடியாத வெட்ககேடான சூழல் இருக்கலாம்.
14. மனிதர்களின் கோபத்துக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் பயப்படும் தொடைநடுங்கிகள் நமக்கேன் வம்பு என்று சில காரியங்களை பூசி மழுப்பி பிரசங்கிக்கிறார்கள். மனுஷருக்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். பயத்தால் ஆளப்படுகிறவர்களால் சத்தியத்தை சத்தியமாக பேச முடியாது.
15. புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கும் சில நட்சத்திர பிரசங்கியார்களால் ஈர்க்கப்பட்ட சிலர், அவர்களைப்போல புகழ்பெற வேண்டுமென்ற ஆசையில் சத்தியத்தைப் பற்றி கவலைப்படாமல் தனது அபிமான நட்சத்திரங்களின் பிரசங்கங்களையும் பிரசங்கிக்கும் முறைகளையும் காப்பியடிப்பவர்களாக மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இந்த புகழ் விரும்பிகள் கடினப் பிரசங்கங்கங்களை சாய்சில் விட்டுவிடுவார்கள்.
16. வெறுமனே ஜனங்களை சிரிக்கவைக்க வேண்டும், தனது பாடல் தாலந்தை காட்டவேண்டும், மக்களிடம் பாராட்டு பெறவேண்டும், மறுபடி பிரசங்கிக்கும் வாய்ப்பு பெறவேண்டும், தனக்கு இரசிகர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களால் சத்தியத்தை போதிக்கவே முடியாது.
17. தனது சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், ஜனங்களை தன் இஷ்டத்துக்கு திருப்பவும், சபையில் தனக்கு எதிராக செயல்படுபவர்களை பயமுறுத்தவும் பிரசங்க பீடத்தை பயன்படுத்துபவர்களால் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்கவே முடியாது. இவர்கள் பண்ணுவது பிரசங்கமே அல்ல அது பிரசஙகம் என்ற பெயரில் செய்யப்படும் “ஆவிக்குரிய பிளாக்மெயில்”.
18. தன் செய்யும் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டி அவற்றை நியாயப்படுத்தி தன் வாழ்க்கையில் ஏற்றுகொண்டவர்கள் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்க முடியாது. உதாணத்துக்கு சபையார் வாங்கும் வரதட்சணையிலிருந்து தசமபாகம் வாங்கும் பாஸ்டர்களும், ஜாதி உணர்வுடைய பாஸ்டர்களும் வரதட்சணைக்கும், ஜாதிக்கும் விரோதமாக பிரசங்கிக்கவே மாட்டார்கள்.
19. தன் ஊழியத்தில் வியாபாரத்தை கலக்க அனுமதித்தவர்கள் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்க முடியாது. உதாரணத்துக்கு Amway வியாபாரிகளாகவும், ஜெருசலேம் பயண ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளாக மாறிப்போன பாஸ்டர்கள் தங்கள் தொழிலுக்கு லாபம் ஏற்படும் விதமான பிரசங்கங்களையே செய்துகொண்டிருப்பார்கள். பாடல் ஆல்பம், புத்தகம் போன்றவற்றை பணத்துக்கு விற்கும் பிரசங்கியார்களால் சபைக்குள் வியாபாரம் தவறு என்று விடுதலையோடு போதிக்க இயலாது.
20. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களால் ஜனங்களை சத்தியத்துக்குள் நடத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட சத்தியத்தை போதித்து அதை பயிற்சி செய்யும்படி ஜனங்களை உற்சாகப்படுத்தும்போது. பிரசங்க பீடத்திலிருந்து இறங்கிய பின்னரும் ஜனங்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்புவார்கள், வாரநாட்களில் அந்த சத்தியத்தை பயிற்சி செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களில் தெளிவுபெற நேரங்காலமில்லாமல் போன் செய்வார்கள். அப்படித்தான் ஜனங்களை நடத்த வேண்டியதாயிருக்கிறது. வேறு ஊழிய காரியங்களுக்கு பிரதான முக்கியத்துவம் தரும் மேய்ப்பர்கள் இந்த ரிஸ்கை எடுக்க விரும்பாமல் அப்படிப்பட்ட பிரசங்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. அங்கு ஜனங்களால் சத்தியத்தை நடைமுறைப்படுத்தி ஆவிக்குரிய வாழ்வில் வளரும் அனுபவத்துக்குள்ளாக வரமுடியாமல் போய்விடுகிறது.
21. தன் நாவைக் கட்டுப்படுத்தாமல் ஓட்டைப் பானையில் நண்டை விட்டது மாதிரி லொடலொட-வெனெ தேவையற்றவைகளை பேசிக்கொண்டே இருப்பவர்களும், புறங்கூறுபவர்களும் , அவதூறு செய்பவர்களும், கெட்ட வார்த்தை பேசுபவர்களும் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்க முடியாது. நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய் (எரேமியா 15:19)
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான் (I தீமோத்தேயு 3:1) என்று உற்சாகப்படுத்தும் அதே வேதம் அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்கோபு 3:1) என்றும் எச்சரிக்கிறது. சீஷர்களை உருவாக்கவும் பரிசுத்தவான்களை சீர்பொருந்தப்பண்ணவும் பிரசங்கம் அவசியம். பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? என்று ரோமர் 10:14 வினவுகிறது. பிரசங்கம் திசைமாறினால் பாதையும் திசைமாறும். மேற்கண்ட 21 காரணங்களைத் தாண்டி மேலும் பல காரணங்கள் இருக்கலாம். எந்தக் கண்ணியிலும் சிக்காமல் யாருக்கும் அடிமையாகாமல் தேவனுக்கு மட்டும் வாயாக இருந்து சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கும் உத்தம பிரசங்கிகள் இன்று தேவை!
– வாட்ச்மென் பிரதர்ஸ்
Dear Brother Vijay, Praise The Lord.
‘Drive the Caste Demon OR close the God’s Sermon’, a thought provoking topic. Humanity will be saved and the name of the Saviour will be proclaimed with whole heartedly. All the Best for your service to the downtrodden society. Sure, our Lord will Bless you and your family abundantly. Keep it up.
with best regards
Mrs & Mr. Selvaraj, BHEL, Ranipet.
Thank you for your encouraging words uncle!
Dear Brother,
Well written, meaningful and truthful advice to the people who use the pulpit. The 21 rules should be read by both Preachers and believers to identify clay from pearls.
“பிரசங்கம் திசைமாறினால் பாதையும் திசைமாறும். மேற்கண்ட 21 காரணங்களைத் தாண்டி மேலும் பல காரணங்கள் இருக்கலாம். எந்தக் கண்ணியிலும் சிக்காமல் யாருக்கும் அடிமையாகாமல் தேவனுக்கு மட்டும் வாயாக இருந்து சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கும் உத்தம பிரசங்கிகள் இன்று தேவை!”
Well said.
Prabhakar
Well said Brother. God bless you and your ministry.