(கள்ள தீர்க்கதரிசிகளுக்கு கட்டுரை மூலம் “அக்கினி” அபிஷேகம்)
யாரங்கே?…
அழகான அங்கி, அலங்கார பிரசங்கி, நீண்ட ஜெபவீரன், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் சிங்கம், யாரோடும் ஒட்டாத தங்கம், ஜெபாலயங்களில் தலைமை, ஆளும் ரோமரிடம் தோழமை…மொத்தத்தில் ஒட்டுமொத்த யூதகுலத்தின் முத்திரை…இவ்வளவு மதிப்புக்குரிய இவர்கள் யார் ???
பரிசேயர்கள் வேதபாரகர்கள்…
இயேசு, யோவான் ஸ்நானகன், பவுல், பேதுரு ஸ்தேவான் போன்ற உண்மை சாட்சிகள் எழும்பும்வரை இந்த பரிசேயரும் வேதபாரகரும்தான் உலகத்தின் பார்வைக்கு இறைதூதர்கள். உண்மை சாட்சிகள் களமிறங்கியபோதோ “கோதுமைக்கு முன் பதர் எம்மாத்திரம் என்று எரேமியா 23:28 சொல்லுவதுப்போல பதரின் பக்திவேஷம் பாதியில் கலைந்தது, கொலைகார முகம் வெளிப்பட்டது, மணியான கோதுமைகள் இரத்த சாட்சியாக நிலத்தில் விழுந்தன. ஆனால் பதர் எது பயிர் எது என்ற உண்மை உலகுக்கு வெட்ட வெளிச்சமாகியது. உன் பரிசேயபக்தி பகல் வேஷமென்று நிரூபணமானது.
இனி பரிசேயரும் வேதபாரகரும் அருவருப்பின் அடையாளங்கள். உன் நீண்ட அங்கிகளும், தாரை தப்பட்டைகளும், சந்தைவெளி ஜெபங்களும் இனி உன்னிலுள்ள பரிசுத்தர்களின் இரத்தக்கறையை மறைக்க முடியுமோ? இனி உன் அலங்காரப் பிரசங்கத்துக்குப் பெயர் புளித்த மாவு! அன்று உன் பெயருக்கு முன்னால் என்னெவெல்லாம் அடைமொழிகள் வைத்துக் அலப்பிக் கொண்டு திரிந்தாயோ அவையெல்லாம் மறைந்து மண்ணோடு போனது, உனக்கு இயேசு வைத்த புதுப்பெயர் “மாயக்காரன்” அதுவே இன்றும் இனியும் உன் பெயருக்கு முன்னால் அடைமொழி! “வெள்ளையடிக்கபட்ட கல்லறையே” என்று யாராவது சத்தமிட்டுக் கூப்பிட்டால் இனி அத்தனை பரிசேயனும் திரும்பிப் பார்க்க வேண்டும்.
அடுத்தது யார்?…
அது என்ன மணியடிக்கும் சத்தம், வாத்தியங்களின் இன்னிசை, தூபவாசனை, படோபடப ஆலயங்கள், அங்கிகள், அதிகாரங்கள்….
அடடே.. அரச மதமாகிப்போன கான்ஸ்டாண்டைனின் கிறிஸ்தவம்!
விக்ளிஃப், டிண்டேல், ஜான் ஹஸ், லூத்தர், அனபாப்டிஸ்டுகள், பியூரிட்டன்கள் போன்ற சாட்சிகள் களம் புகும்வரை இந்த பாபிலோனிய சபைதான் உலகத்தின் பார்வைக்கு கிறிஸ்துவின் மணவாட்டி. ஆனால் உண்மை சாட்சிகள் வேதத்தை வெளிக்கொணர்ந்து சத்திய வெளிச்சத்தை பாய்ச்ச அந்த பேரொளியில் பாபிலோனின் பக்திவேஷம் கலைந்தது.
“ஐய்ய்ய்யோ…இவள் மணவாட்டியல்ல …வேசி!”
வேஷம் கலைந்தவுடன் எடுத்தாள் கொலைவாளை, உருண்டது ஆயிரமாயிரம் பரிசுத்தவான்களின் தலை, ஓடியது குருதி ஆறு… ஆனால் இன்று ஒவ்வொரு விசுவாசியின் கையிலும் அவரவர் மொழியில் வேதம். இனி நீ என்ன தம்படி வித்தை காட்டினாலும் உன் அங்கிகளில் ஒட்டியுள்ள கணக்கற்ற சாட்சிகளின் இரத்தக்கறையை மறைக்க முடியுமோ? நீ எத்தனை பிரம்மாண்ட கண்டங்களைக் கட்டி ஆண்டென்ன? ஒருசில பலவீனமான மனிதர்களைக் கொண்டு என் தேவன் உன் அத்தனை சாம்ராஜ்ஜியங்களையும் ஊதித்தள்ளியதைப் பார்த்தாயா! போய் பத்தோடு ஒன்று பதினொன்றாக உட்காந்துகொள்! உன் கிறிஸ்து அந்தி கிறிஸ்தென்பதை உலகம் உணர்ந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டது. இனி உன் பழைய அலங்காரச் சரக்குகள் ஆன்மீகச் சந்தையில் விலைபோகாது.
இன்று…
அது யார்? வெறும் ஸ்டண்டு…புரட்டுஸ்டண்டு..
எது கிறிஸ்தவம்? எது ஆலயம்? யார் ஊழியன்? எது சபை? எது ஆராதனை? யார் விசுவாசி?
- கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு உலகப்பொருளுக்கு பின்னால் மயங்கித்திரிவதும், முழுக்க முழுக்க மதமாகிப்போனதும் கிறிஸ்தவமாம்,
- உன் சரீரமே ஆலயம் என்ற புதிய ஏற்பாட்டு சத்தியத்தை மறந்து, மறுதலித்து கைகளால் கட்டப்பட்ட கோபுரங்களும், கட்டிடங்களும் ஆலயமாம்,
- வேதத்தை சுயமகிமைக்காகவும், சுய லாபத்துக்காகவும், திரித்து ஜனங்களை தன்னண்டை இழுத்து தனக்கு ஊழியம் கொள்ளுபவனுக்குப் பெயர் ஊழியனாம்.
- சரீரத்தின் அவயவங்களை பலிபீடத்தில் வைக்காமல் ஆராதனை கிளப்புகளில்(!) இசை வெள்ளத்தில் நீந்தியபடி கொடிகளையும் கைகளையும் அசைத்து மேடைப்பாடகனின் தாலந்தை ஆராதிப்பதற்குப் பெயர் ஆராதனையாம்.
- பைபிள் பாத்திரங்களின் பெயரையோ, மேற்கத்திய பெயரையோ வைத்துக்கொண்டு, பண்டிகை நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாத்திரம் ஜீவனோடிருப்பவனுக்குப் பெயர் விசுவாசியாம்!
அடச்சே… இது இருளின் ஆதிக்கம், கள்ள நோட்டுக்களின் ராஜ்ஜியம்! அன்று பரிசேயரும் , பாபிலோனும் கோலோச்சியது போன்ற காலம்! ஆனாலும் இது நிரந்தரமல்ல…
ஏ போலி கிறிஸ்தவமே! வேதப்புரட்டர்களே! கள்ள தீர்க்கர்களே! கிறிஸ்தவ (மதத்)தலைவர்களே! இது கேளுங்கள்…
தேவன் விதித்த விதிகளை இயற்கையும் மீறியதில்லை, வரலாறும் மீறியதில்லை…இருளுக்குப் பின்னே வெளிச்சம்… இது நியதி! இஸ்ரவேலை இருள் கவ்வியபோதெல்லாம் ஒரு இறைவாக்கினனை தேவன் அனுப்பிய வரலாறு உங்களுக்கு தெரியாதா?
உங்கள் ஆட்டங்களை கொஞ்ச காலம் ஆடுங்கள், ஜெபகோபுரங்களைக் கட்டுங்கள், தொலைக்காட்சிகளை நடத்துங்கள், கூட்டங்களைக் கூட்டுங்கள், கச்சேரிகளை நடத்துங்கள், கோடிகோடியாய் பொருள் சேருங்கள், விமானங்களில் சுற்றுங்கள், காணிக்கை தசமபாகம் என்ற பெயரில் எளியவனை கொள்ளையிடுங்கள்… நேபுகாத்நேச்சார் தான் கட்டிய பாபிலோனை பார்த்து மகிழ்ந்ததுபோல நீங்கள் சத்தியத்தை உருட்டி புரட்டி சம்பாதித்துக் கட்டிய உங்கள் சொந்த சாம்ராஜ்ஜியங்களை கடைசியாக ஒருமுறை பார்த்து புளங்காகிதப்பட்டுக்கொள்ளுங்கள். “நீங்கள்தான் கிறிஸ்தவம்” என்ற நிலை இனி வெகுகாலம் நீடிக்காது.
தேவன் உண்மை சாட்சிகளை எழுப்புவார். சபைக்கு ஒருத்தனையாவது ஒருத்தியையாவது எழுப்புவார். அவர்கள் வேதத்தை தேடி ஆராய்வார்கள், சாட்சிகளின் வரலாறுகளை வாசிப்பார்கள், உண்மை கிறிஸ்தவத்தின் இரத்தந்தோய்ந்த வீரவரலாறை அறிந்து கொள்ளுவார்கள், இன்றைய சோரம்போன சபையையும் கண்ணோக்கிப் பார்ப்பார்கள். அவர்கள் இதயம் பதைக்கும், விழிகள் சிவக்கும், சுயத்தை கொன்று சிலுவையண்டை விதைகளாய் விழுவார்கள், தேவபலன் வென்று செருக்களத்தில் புலிகளாய் எழுவார்கள்.
முகநூலிலும் சரி, முச்சந்திகளிலும் சரி…ஒருபக்கம் போலி கிறிஸ்தவத்தை தோலுரிப்போம், இன்னொருபக்கம் சிலுவையில் அறையப்பட்ட உண்மை கிறிஸ்துவை பிரசங்கிப்போம். உலகின் கடைசி மனிதன்வரை இந்தக் கள்ளத்தீர்க்கதரிசிகள் மதி மயக்கி வைத்திருந்தாலும் சரி, “மனுபுத்திரனே இந்த உலர்ந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று மறுமுறை கேட்கப்பட்டால் “ஆம், ஆண்டவரே! உயிரடையும்” என்று உரக்கச்சொல்லுவோம். மூச்சுக்காற்று அவருடையதல்லவா?
ஏ போலி கிறிஸ்தவமே! கள்ள மார்க்கமே! காயீன் மார்க்கமே!…இது கேள்
இன்னும் கொஞ்சகாலம் உன் ஆட்டமெல்லாம் ஆடிக்கொள், எவ்வளவு பொருள் தேடமுடியுமோ தேடிக்கொள். கோதுமைகள் களம் புகுந்து உன் அக்கிரமத்தை வெளிப்படுத்தும் நாளில் நீ கட்டிய கோபுரங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்!
நீ கர்த்தருக்கு எதிரணியில் இருப்பதால் உலகின் ஒட்டுமொத்த இராணுவங்களோடு நீ களத்தில் நின்றாலும் உன்மீது எங்களுக்கு துளி பயமுமில்லை. எல்லா ஆவிக்குரிய கபட நாடகமும் ஆடிப்பார்த்து சத்திய வெளிச்சத்தின் முன்னால் உன் நிர்வாணம் வெளிப்படும் நாளில் அன்றைய பரிசேயரும் பாபிலோனும் தேடிப்போன அதே கொலைவாளைத் தேடி ஓடுவாய் என்பது எமக்குத் தெரியும். ஆஹா! எழுப்புதல் வந்துவிட்டது என்பதற்கு எமக்கு அதுவே அடையாளம்.
இனி வா! உன் கொலைவாளுக்கு எங்கள் கழுத்தைத் தருகிறோம். அது பாக்கியம்! தேவபெலத்தால் கள்ள மார்க்கத்தின், காயீன் மார்க்கத்தின் தலையை நசுக்கியபின் இனி வாழ்ந்தென்ன மரித்தென்ன, நீ வா! எங்கள் குதிகாலை நசுக்கிவிட்டுப்போ!
ஆனால் இனி கொள்ளையடிக்கும் ஜெப கோபுரங்கள் இருக்காது, பங்காளர் திட்டங்கள் இருக்காது, பகட்டு ஆராதனைகள் இருக்காது, கள்ள தீர்க்கனின் தொலைக்காட்சி ஓடாது, சபைப் பாகுபாடு, சாதிப்பாகுபாடு இருக்காது, புரட்டு உபதேசங்கள் இருக்காது, சுயநீதி இருக்காது, பழையவைகள் ஒழிந்தே போகும்…
ஆதித்திருச்சபை அனுபவங்கள் திரும்பும், பரலோக ராஜ்ஜியம் நிலைபெறும், தேவநீதி கோலோச்சும், வர்க்க வேற்றுமைகள் உடைக்கப்படும், சபை பரிசுத்தமாகும், சபை மணவாட்டியாய் கிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தமாகும்…எமது பெலத்தால் அல்ல, அவர் பெலத்தால் கிருபையால் இது சாத்தியமாகும்.
கொஞ்சகாலம் காத்திரு பதரே! அவர் கோதுமைகளை களத்திற்குள் அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை…
Well written and a timely article.
“அது என்ன மணியடிக்கும் சத்தம், வாத்தியங்களின் இன்னிசை, தூபவாசனை, படோபடப ஆலயங்கள், அங்கிகள், அதிகாரங்கள்….
அடடே.. அரச மதமாகிப்போன கான்ஸ்டாண்டைனின் கிறிஸ்தவம்!”
“உங்கள் ஆட்டங்களை கொஞ்ச காலம் ஆடுங்கள், ஜெபகோபுரங்களைக் கட்டுங்கள், தொலைக்காட்சிகளை நடத்துங்கள், கூட்டங்களைக் கூட்டுங்கள், கச்சேரிகளை நடத்துங்கள், கோடிகோடியாய் பொருள் சேருங்கள், விமானங்களில் சுற்றுங்கள், காணிக்கை தசமபாகம் என்ற பெயரில் எளியவனை கொள்ளையிடுங்கள்…”
“முகநூலிலும் சரி, முச்சந்திகளிலும் சரி…ஒருபக்கம் போலி கிறிஸ்தவத்தை தோலுரிப்போம், இன்னொருபக்கம் சிலுவையில் அறையப்பட்ட உண்மை கிறிஸ்துவை பிரசங்கிப்போம். “
“போலி கிறிஸ்தவத்தை தோலுரிப்போம், இன்னொருபக்கம் சிலுவையில் அறையப்பட்ட உண்மை கிறிஸ்துவை பிரசங்கிப்போம். “ Good.
GOD Bless you Brother for speaking the Truth in HIS Light. Lets be like the Church of Berea (Acts17:11) May i have a English Translation of this message?
Samuel from Kw
நான் இரட்சிக்கப்பட்டு சில காலத்தில் ஜாதி பார்பது என்னை விட்டு விலகியது.ஆனால் பல வருடமாய் அந்நிய பாசைகள் பேசி,பரிசுத்தம் பற்றி அதிகமாய் பேசி ஊழியம் செய்யும் ஊழியர்கள் 99% பேர் ஜாதி பார்பது பாவம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாததை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது
சூப்பர் பிரதர்!
Nevertheless when the Son of man cometh, shall he find faith on the earth? Lu 18: 8.
Really true . write some more. GOD bless u bro.
good faith comes form God