சத்யன்:
நீங்க வெறும் கிருபையை மட்டுமே பேசிக்கிட்டிருக்க கூடாதுண்ணே, ஒருபக்கம் கிருபையை பேசினால் இன்னொரு பக்கம் சத்தியத்தையும் பேசணும்
ஜான்:
அப்படியா? அப்படினா கிருபையும், சத்தியமும் ஒண்ணுக்கொண்ணு எதிரானதா? கிருபையைப் பேசுவதுதானே சத்தியம்! சரி நீ சொல்லும் சத்தியம்தான் என்னன்னு சொல்லேன்.
சத்யன்:
தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார், அவர் பாவத்தைப் பாராத சுத்தக்கண்ணர் அப்டீங்கிறதையும் சொல்லணும்
ஜான்:
ஆமா, வேதம் அப்படித்தான் சொல்லுகிறது. ஆனா அது கிருபைக்கு எந்தவிதத்தில முரண்படுது?
சத்யன்:
நீங்க வெறும் கிருபையை மட்டும் பேசினால் அதை மக்கள் பாவம் செய்வதற்கான லைசன்ஸா எடுத்துக்கிட்டு இஷ்டத்துக்கு ஆட ஆரம்பிச்சிருவாங்க. அதுனால நீங்க சத்தியத்தையும் சொல்லணும். அதாவது பாவத்துக்கு எதிரான தேவனுடைய கட்டளைகளையும் சமரசமில்லாம சொல்லிக் கொடுக்கணும்.
ஜான்:
அப்டீன்னா கிருபை பாவத்தை தூண்டுதுன்னு சொல்றியா?
சத்யன்:
அப்படிச் சொல்லலண்ணே… வெறும் கிருபைய மட்டும் பேசிக்கிட்டு இருந்தா ஜனங்களுக்கு குளிர் விட்டுப்போகும்ணு சொல்ல வர்றேன்.
ஜான்:
அப்படி இல்ல தம்பி, கட்டளைய பேசினா பாவம் குறையும்ணும், கிருபைய பேசினா பாவம் பெருகும்ணும் நீ சொல்றது வேதம் சொல்றதுக்கு அப்படியே opposite-ஆ இருக்கு. நியாயப்பிரமாணம் வந்தபோது பாவம் பெருகினதாகவும், பாவம் பெருகினதால் (அந்த பாவத்தை அழிக்க) கிருபை பெருகினதாகவும் அல்லவா ரோமர் 5:20 சொல்லுது!
சத்யன்:
அப்ப நியாயப்பிரமாணம் தீமையானதுன்னு சொல்றீங்களா?
ஜான்:
இல்ல தம்பி ரோமர் 7-ஆம் அதிகாரத்தை நல்லா வாசிச்சுப்பாரு, பாவம் மனிதனுக்குள் உயிர் கொண்டதும், கிரியை செய்ய வாய்ப்பு பெற்றதும் கட்டளையால்தான் அப்டீன்னு பவுல் சொல்றாரு. அதுக்காக கட்டளை தீமையானதுன்னு அர்த்தம் இல்ல, பாவம்தான் தீமையானது, கட்டளை நன்மையானது, பரிசுத்தமானது, நீதியானதுன்னு அதே அதிகாரம் சொல்லுது.
ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ, எங்கே பிரமாணம் வருதோ அங்கதான் மீறுதலும் வருது…கிருபை பெருகுனா பாவம் பெருகும்னு நீ சொல்ற, ஆனால் பாவம் பெருகுனா கிருபை பெருகும்னு வேதம் அப்படியே தலைகீழா சொல்லுது. கட்டளை வந்தா மீறுதல் குறையும்னு நீ சொல்ற, ஆனா கட்டளை வந்தா மீறுதல் பெருகும்னு வேதம் அப்படியே தலைகீழா சொல்லுது (ரோமர் 5:20).
முதல்ல சிலுவைய காட்டணும், அதுக்கு திருந்தலைன்னா சவுக்கை எடுக்கணுங்கிறது மனுஷனோட பொதுப்புத்தி, அது தெரிஞ்சுதான் பிதா முதல்ல நமக்கு சவுக்கை காட்டிட்டு(பழைய உடன்படிக்கை), அது ஒத்துவராதுன்னு நமக்கு புரிய வச்சிட்டு அதுக்கப்புறம் சிலுவைய (புது உடன்படிக்கை) காட்டிருக்காரு.
கட்டளை வந்தா மீறுதல் பெருகும்ணு சொல்ற அதே வேதம்தான், நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தா பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாதுன்னும் சொல்லுது (ரோமர் 6:14).
இப்ப சொல்லு, பாவம்தானே உன் பிரச்சனை? அந்தப் பாவத்தை ஜெயிக்கணும்னா எந்த ஆயுதத்தை கையில எடுக்கணும், பிரமாணத்தையா கிருபையையா?
(தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி…)