காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் ஆமென்

நாம் ஒவ்வொரு நாளும் உணர்வற்ற பல “ஆமென்”களைச் சொல்ல மதம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வாலிபப் பெண் தாழ்மையோடும், கீழ்படிதலோடும், விசுவாசத்தோடும் ஒரு “ஆமென்” சொன்னாள்.

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள் (லூக்கா 1:38)

மரியாளின் அனுமதியின்றி அவள் சரீரத்துக்குள் ஆவியானவர் பிரவேசிக்க மாட்டார், ஏனென்றால் அவர் அவ்வளவு நேர்மையும், கண்ணியமும் மிக்கவர். மரியாள் சொன்ன அந்த ஆமென் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது, ஏதேனுக்குள் சென்று ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும் என்று சொல்லிய தீர்க்கதரிசனத்தோடு இணைந்துகொள்ள இப்பிரபஞ்சத்தின் வர்ணமே மாறியது. அவள் சொன்ன அந்த ஆமெனின் பலனாக, சிருஷ்ட்டிக்கு ஆதியாயிருக்கிற “ஆமென்” என்பவர்(வெளி 3:14) வெளிப்பட்டார். ஆம், ஆமென் என்பது வெறும் வார்த்தையல்ல, அது ஒரு நபர்!

அவர் தமது மரணத்தின் விளைவாக பழைய ஏற்பாட்டில் மரித்த பல பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களை உயிர்ப்பித்து, சிறைப்பட்டவர்களை சிறையாக்கிக் கொண்டுபோனார். “கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள் (மத் 27:52,53).

நாம் தேவனுடைய வார்த்தைக்கு இசைந்து விசுவாசத்தோடும், தாழ்மையோடும் சொல்லும் ஒரு “ஆமென்” உங்கள் எதிர்காலத்துக்காக மட்டுமல்ல, அது காலத்தில் பின்னோக்கிப் பயணித்து உங்கள் இறந்தகால வாழ்வில் மரித்துக் கிடந்தவைகளை உயிர்ப்பிக்க முடியும். ஏனென்றால் காலம் என்பதற்கு மனிதன்தான் கட்டுப்பட்டவன். தேவனுடைய வார்த்தை காலத்துக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது.

இறந்த காலத்துக்கு பின்னோக்கிப் பயணம் செய்ய இன்னும் எந்த இயந்திரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் உங்கள் கரங்களிலும், நாவிலும் உள்ள வேதவார்த்தை பின்னோக்கிப் பயணம் செய்யும் வல்லமையும், அதிகாரமுமுடையது. எனவே உங்கள் “ஆமென்”-களை வசனத்தை முழுமையாக விசுவாசித்து “உணர்வோடு” சொல்லுங்கள்.

நீ சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் (1 சாமு 30:8)

“ஆமென்”

Leave a Reply