காற்றில் மிதக்கும் இறகு

காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன.

விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து இந்த பூமியில் அசைவாடிக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் அவருடன் இணைந்து உன்னத அனுபவங்களில் மிதப்பவர் வெகுசிலர். ஆவிக்குரிய வாழ்வில் அங்குலம் கூட முன்னோக்கி நகராமல் கிடந்த இடத்திலேயே கிடப்போர் பலர். காரணம் என்ன?

ஆண்டவர் எளிமையானதாகவும், இனிமையானதாகவும் படைத்து வைத்திருந்த ஏதேன் வாழ்வு, மனிதனின் மீறுதலால் இவ்வுலகத்தின் சிஸ்டத்துக்குள் சிக்கி இடியாப்பச் சிக்கலாகிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் நம்மை அழுத்தும் பாரங்கள் அநேகம். அந்த பாரங்கள்தான் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற விடாமல் அழுத்தி கிடந்த இடத்திலேயே கிடக்க வைக்கிறது. இது சந்தேகமே இல்லாமல் சாத்தானின் கண்ணிதான்.

ஆனால் அதிலிருந்து மீளவும் அவர் நமக்கு நமக்கு ஒரு வழியை வைத்திருக்கிறார்.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் (இயேசு) வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

அவர் (இயேசு) உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (I பேதுரு 5:7)

உலகத்தின் பாரங்களிலிருந்து தேவன் நமக்கு விடுதலையை தருவது மீண்டும் புதுபெலத்துடன்  உலகத்தை நோக்கி ஓடுவதற்காக அல்ல, நமது பார்வையை உன்னதங்களை நோக்கி திருப்ப… கர்த்தர்வசம் பாரங்களை ஒப்புவித்தால் எல்லாம் இலகுவாகிவிடும். பின்னர் உன்னதக் காற்றாகிய ஆவியானவருடன் இணைந்து ஆவிக்குரிய வாழ்வின் உயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகிவிடும்.

கர்த்தர் நல்லவர்! அல்லேலூயா!!

Leave a Reply