இது கடைசி காலம்தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடைசி காலம் என்றவுடன் பல விசுவாசிகள் மனதில் தோன்றும் படம் என்னவென்றால் அது சாத்தான் மிகுந்த பலத்துடன் கிரியை செய்யும் காலம், தேவபிள்ளைகள் உபத்திரவங்களால் நசுக்கப்படுகிற காலம், எங்கு பார்த்தாலும் வஞ்சகங்கள் தலைவிரித்தாடுகிற காலம், பாவங்கள் பெருகும் காலம் என்பதுதான்.
இது பாதி உண்மைதான், ஒரு திரைப்படத்தில் ஹீரோ சம்பந்தப்பட்ட காட்சிகளை எடிட் செய்து நீக்கிவிட்டு, வில்லன் வரும் காட்சிகளை மட்டும் காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இன்று கடைசிகாலத்தைப் பற்றி பேசும் பல பிரசங்கியார்களின் பிரசங்கம் இருக்கிறது. கிளைமாக்ஸில் வந்து வில்லனை கைது செய்யும் டம்மி போலீஸ் போலத்தான் ஆண்டவரின் வருகையைக் காட்டுகிறார்கள். முழுப்படத்தையும் உட்காந்து பாருங்கள் அப்போதுதான் நடக்கப்போவது என்ன என்பது தெரியும்.
கடைசி காலத்தில் பாவம் பெருகுமே என்று நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள். பாவம் பெருகும்போது கிருபையும் பெருகுமே (ரோமர் 5:20) என்று ஆழிப்பேரலை போல வந்து பூமியை மூடப்போகும் கிருபையை நினைத்து பிசாசு நடுங்கிக் கொண்டிருக்கிறான்.
இதுவரை இல்லாத அளவுக்கு பரிசுத்தமும் நீதியும் பெருகக்கூடிய காலம் இந்தக் கடைசி காலந்தான்.
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்…(வெளி 22:11,12)
நீங்கள் பரிசுத்தத்தின் மீதும், நீதியின் மீதும் பசிதாகமுள்ளவராக இருந்தால், இது உங்களுக்கான காலம்தான். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்றவர் அதற்கான வழிவகைகளை நமக்கு செய்து தராமல் இருப்பாரா? நாம் பாதகமென்று நினைத்திருந்த அத்தனை கருவிகளும் இனி நமக்கு சாதகமாகப் போகிறது.
இது தேவபுத்திரர் வெளிப்படும் காலம், சபையின் ஆளுகைச் செங்கோல் உயரும் காலம், தேவ மகிமை வெளிப்படப்போகும் காலம். சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறியும் அறிவினால் நிறையப்போகும் காலம்.
இது கடைசி காலம்தான்… யாருக்கு? நாம்தான் நித்திய நித்தியமாக வாழப்போகிறோமே! முடிவில்லாதவர்களுக்கு ‘கடைசி’ என்ற வார்த்தை பொருந்துமா? இது பிசாசுக்குத்தான் கடைசி காலம். அவனுக்குக் குறிக்கப்பட்ட காலம்தான் முடியப்போகிறது. கடைசி காலம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பதற வேண்டியது அவன்தான், நாம் அல்ல…
நாம் காலத்தை பிரயோஜனப்படுத்தி ஊழியங்களை இன்னும் அதிக உற்சாகத்தோடு(பதட்டத்தோடு அல்ல) செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடைசிகாலம் என்றவுடன் ஏதோ பயங்கரங்களெல்லாம் இனி அரங்கேறப் போகிறது என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை.
இனி யாராவது இது கடைசி காலம் என்று சொன்னால் உற்சாகமடையுங்கள், சோர்ந்து போகாதிருங்கள்.