ஒரு ஊழியக்காரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட மதிப்பீடுகள் இன்று கிறிஸ்தவத்தில் காணப்படுகின்றன. ஒரு ஊழியக்காரரின் வாழ்க்கைத்தரம்(life style) இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு ஊழியக்காரர் இப்படித்தான் உடையணிய வேண்டும், ஒரு ஊழியக்காரரின் புறத்தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
பிரசங்கபீடத்தில் நிற்பவர்கள் விசுவாசிகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்பது உண்மையே! அப்போஸ்தலனாகிய பவுலும் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்லும்போது “நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு” என்று எழுதுகிறார்(1 தீமோ 4:12). ஆனால் பவுல் இங்கு குறிப்பிடும் யாவும் உள்ளான சுவாவங்களைக் குறித்ததேயன்றி, புறம்பான தோற்றத்தைக் குறித்தோ, வாழ்க்கைத் தரத்தைக் குறித்தோ அல்ல. இதில் இன்னொரு விஷயம், “முன்மாதிரி” என்பதன் பொருள் என்னவென்றால் ஊழியக்காரர் காட்டும் அதே மாதிரியை விசுவாசிகளும் பின்பற்ற வேண்டும் என்பதே.
ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் விசுவாசிகள் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் உடையணியலாம், எந்த விதமான life style-ஐயும் பின்பற்றலாம், ஆனால் ஊழியக்காரர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யும் பொதுப்புத்தி காணப்படுகிறது.
பிரியமானவர்களே, தேவன் நம்மை விசுவாசிகள் என்றும் ஊழியக்காரர்கள் என்றும் வேறுபிரிக்கவில்லை. நம் அனைவருக்கும் பொதுப்படையாக உள்ள ஒரே அடையாளம் “சீஷன்” என்பதே! சீஷர்களில் சிலருக்கு சில பிரத்யேக ஊழியம் செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர(எபே 4:13) நாம் அனைவருமே சீஷர்கள் என்கிற ஒரே அடையாளத்துக்குள்தான் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் அனைவருக்கும் ஒரே ஆவி, ஒரே வேதம், ஒரே கட்டளைதான். ஆக, நீங்கள் ஒரு ஊழியக்காரர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு மதிப்பீட்டை வரையறை செய்வீர்களென்றால் அது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் அவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்(மத் 7:2).
உண்மையில் இதுபோன்ற மனநிலை கிறிஸ்தவத்துக்குள் உருவாகக் காரணமே ஊழியக்காரர்கள்தான். ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு என்று சொல்லப்படுவதுபோல, சில ஊழியர்கள் ஏதோ தாங்கள் பரலோகத்தில் இருந்து குதித்து வந்தவர்கள்போல விசுவாசிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்தியும், மேன்மைப்படுத்தியும் காட்டிக்கொள்ள முயன்றதன் எதிர்விளைவுதான் இது! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல விசுவாசிகளிடம் தங்களை வேறுபடுத்தியும் காட்டிக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களிடம் ஏதோ குறை கண்டுபிடித்து யாரும் விமர்ச்சிக்கவும் கூடாது என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? நீங்கள் உங்களை Super Spiritual-ஆகக் காடட்டிக்கொள்ள விரும்பினால், விசுவாசிகள் உங்களிடம் இயல்பான மனுஷீக சுபாவங்களைக் காணும்போது உங்களை விமர்ச்சிக்கவும், உங்களைவிட்டு விலகவும்தான் செய்வார்கள்.
விசுவாசிகளாகட்டும், அல்லது பிரசங்கபீடத்தில் நிற்கும் ஊழியக்காரராகட்டும் எல்லோருமே கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண புருஷனாக மாறும் பயணத்தில் இருக்கிறோம், இன்னும் மாம்சத்தோடு போராடிக்கொண்டிருக்கிறோம், சில நேரங்களில் தோற்றும் போய்விடுகிறோம். பின்பு தேவனிடம் ஒப்புரவாகி ஆவியானவரின் தயவால் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பிக்கிறோம். நாம் யாவரும் ஒன்று, நாம் யாவரும் சமம்! இங்கு யாரும் “ஸ்பெஷல்” இல்லை.
ஊழியக்காரர்கள் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். ஒரு பரலோக தூதன்போல தன்னைக் காட்டிக்கொள்ளும் மாய்மாலத்தை விட்டுவிட்டு, தங்களின் பலவீன நேரங்களிலும், தாங்கள் தவறுகள் புரிந்தபோதும் ஆவியானவர் எப்படி இடைப்பட்டு தங்களை மாற்றினார், யெகோவா ஓசேனுவாகிய கர்த்தர் தங்களை எப்படி உடைத்து உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை மறைக்காமல் விசுவாசிகளுக்குக் கற்றுத்தர வேண்டும். அதுதான் விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இப்படியெல்லாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டால் விசுவாசிகள் நம்மை மதிக்கமாட்டார்கள், நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று கருதுவது தவறு. உங்கள் அழைப்பும், உங்கள் மீதுள்ள அபிஷேகமும் உங்களுக்கான மதிப்பை, உங்களுக்குச் சேரவேண்டிய கனத்தை உங்களுக்குப் பெற்றுத்தரும்.