நியாயப்பிரமாணம் நம்மை கிருபைக்கு நேராக வழிநடத்திச் செல்லும் ஆசிரியராக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது(கலா 3:24). நியாயப்பிரமாணம் அருளப்படாத புறவினத்தாருக்கு மனசாட்சியானது நன்மை தீமைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராக இருக்கிறது (ரோமர் 2:14,15).
பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தால் தேவ பிரியத்துக்கும், மீறினால் தேவகோபத்துக்கும் ஆளாக நேரிடும் என்பது உண்மை! ஆனால் முன்பு ஒரு காலத்தில் மனசாட்சியால் வழிநடத்தப்பட்டு இப்போது தேவ குடும்பத்துக்குள் நுழைந்த நாம் நம்மையுமறியாமல் அதே இடத்தை மனசாட்சிக்குக் கொடுத்து மனசாட்சியை சாந்திப்படுத்தினால் தேவனை சாந்திப்படுத்தி விடலாம், அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக மனசாட்சி நம்மை வாதித்தால் தேவன் நம்மேல் கோபமாய் இருக்கிறார் என்று எண்ணிக் கொள்கிறோம். சுவிசேஷத்தை சரியாக அறியாததினால் வந்த விளைவு இது!
உண்மையில் இந்த மாயபிம்பத்தை சுவிசேஷம் சுக்குநூறாகத் தகர்த்தெறிகிறது. தேவன் நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தின் வழியாகப் பார்த்து “நீதிமான்கள்” என்று தீர்ப்பளித்திருக்கிறார்(ரோமர் 3:22). கிறிஸ்துவின் நீதி நம்மீது நிரந்தரமாகப் போர்த்தப்பட்டு இருக்கிறது. நமது மனசாட்சி நம்மை நீதிமான் என்று சொல்லும்போது தேவனும் நம்மை நீதிமான் என்று சொல்லுகிறார், நமது மனசாட்சி நம்மை குற்றவாளி என்று சொல்லும்போது தேவனும் நம்மைக் குற்றவாளி என்று எண்ணுகிறார் என்பது முற்றிலும் தவறான புரிதல். இப்புரிதல் சுயநீதியை அடிப்படையாகக் கொண்டது.
நமது வழக்கு ஏற்கனவே முடிக்கப்பட்டு நிரந்தரமாக தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. கர்த்தருடைய பார்வையில் நாம் இனி எப்போதும் நீதிமான்களே! இனி மனசாட்சி அல்ல, நமக்குள்ளிருக்கும் தேவ ஆவியானவரே வேதவசனங்களின்படி நம்மை நடத்துகிறவர்.