அவருக்கு இடங்கொடுங்கள்

ஒரு ஊரில் ஒரு அருமையான தம்பதிகள் இருந்தார்கள். கணவருக்கு தனது மனைவியை ஒரு இராஜாத்தி போல வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. தான் மனைவியை பாதுகாத்து பராமரிக்கும் விதத்தைப் பார்த்து ஊரே தன்னை மெச்ச வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் நடந்ததோ வேறு, பல்வெறு சூழ்நிலைகளால் அவர் நினைத்த எதையுமே அவரால் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த மனைவியோ அந்த சூழலிலும் அவர்மீது அளவற்ற அன்புகூர்ந்து அவருக்கு பணிவிடை செய்கிறாள். அவளது சாட்சியைக் கண்டு அந்த ஊரே அவளைப் பாராட்டுகிறது. இருவரும் தங்கள் வாழ்க்கையின் அந்திமக் காலத்தை அடைகிறார்கள். மனைவி திருப்தியாகக் கண்ணை மூடுகிறாள். ஆனால் அந்தக் கணவரின் மனநிலை எப்படியிருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்!

நம்மில் பலர் தேவனை அந்தக் கணவரின் மனநிலையில்தான் வைக்க விரும்புகிறோம். இன்று கிறிஸ்தவம் ஆசீர்வாதம், அற்புத அடையாளங்களின் பின்னால் போகிறது என்பதைக் காரணம் காட்டி அநேகர் அதன் எதிர் முனைக்கு (opposite extreme) ஓடுகிறார்கள். நீ இந்த உலகத்துக்குரியவன் அல்ல, நீ நித்தியத்தை மட்டுமே நோக்க வேண்டும். தேவனிடமிருந்து எந்த உலக நன்மையையும் எதிர்ப்பார்க்காதே, அவரிடம் எந்த ஆசீர்வாதத்தையும் கேட்காதே. அவர் உனது அன்பை அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு முறையும் நீ உனது அன்பையும், தியாகத்தையும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் உனக்கு தருவதெல்லாம் எதிர்மறையாகத்தான் இருக்கும். ஆனால் நீதான் நேர்மறையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற போதனைகள் நிறைய வலம் வர ஆரம்பித்துவிட்டது.

வெறும் இம்மைக்குரிய நன்மைகளுக்காக மட்டும் தேவனை பின்பற்றுவது பரிதாபகரமானது (1 கொரி 15:19) என்று வேதம் ஆணித்தரமாகக் கூறுகிறது. அதே நேரத்தில் உங்களைப் பசியில் கிடத்தி தேவன் ஆன்மீக திருப்தியைப் பற்றி போதிக்கமாட்டார். கந்தலாடையை உடுத்துவித்து நீதியின் வஸ்திரம் பற்றி பேசமாட்டார் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். அவர் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு போதுமானவராக இருக்க விரும்புகிறார். ஒரு நல்ல கணவன் எப்படி தனது மனைவியைப் பராமரிப்பானோ அப்படி அவர் உங்களைப் பாராமரிக்க விரும்புகிறார். அதைச் செய்வதற்கு அவருக்கு இடங்கொடுங்கள்.

“அவர்களுடைய தேவன் வயிறு (பிலி 3:19)” என்று பவுலால் எச்சரிக்கப்படும் பிரசங்கிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதே அளவுக்கு “தொடாதே, ருசிபாராதே.. (கொலோ 2:19-23)” என்று அதே பவுலால் எச்சரிக்கப்படும் உபதேசத்தைச் செய்கிற பிரசங்கிகளும் ஆபத்தானவர்களே! தேவன் பிரியமாய் தரும் ஆசீர்வாதங்களைக் கூட அவரது கைகளைத் தட்டிவிட்டு புறக்கணிப்பதில் ஒரு ஆவிக்குரிய(!) திருப்தியடையும் அளவுக்கு உங்களை மிஞ்சின நீதிமான்களாக்கும் போதனைகளுக்கு விலகியிருங்கள்.

அவர் நம்மையல்ல, நித்தியத்தில் நாம்தான் அவரைத் துதிக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை அல்லவா? ஆனால் சில மிஞ்சின நீதிமான்களின் பேச்சையும், கிரியைகளையும் பார்த்தால் நான் கதையில் சொன்ன அந்தக் கணவரின் சூழலுக்கு தேவனைத் தள்ளிக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவர் இந்த பூமியின் வாழ்நாளில் நமக்கு எப்படியெல்லாம் நல்லவராக இருந்தார் என்பதை நினைத்து நினைத்து நாம் அவரை பரலோகத்தில் துதிக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்க தேவன் விரும்புகிறார். அதில் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே பிரதானமாக இருந்தாலும் அதற்குள் இம்மைக்குரிய நன்மைகளும் அடக்கம். அதை மாத்திரம் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பூமிக்குரிய வாழ்க்கை நாம் அவர்மீது வைத்த அன்பை நிரூபிக்க மட்டுமல்ல, அவர் நம்மீது வைத்த அன்பையும் நிரூபிக்கத்தான் என்பதை உணர்ந்து அவர் உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் உங்களை ஆசீர்வதிக்க அவருக்கு இடங்கொடுங்கள். அவர் நம்மை ஆசீர்வதிப்பது நம்மை பரிசோதிக்க அல்ல, அது அவர் நம்மீது வைத்த அன்பின் அடையாளங்களுள் ஒன்று.

Leave a Reply