இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையானபின் அவர்களை முதன்முதலாக எதிர்த்து வந்தது ஏசாவின் சந்ததியராகிய அமலேக்கியர்கள்தான். ரெவிதீம் எனுமிடத்தில் மோசே ஒரு மலையுச்சியில் நின்று கையை உயர்த்தியிருக்க யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் அமலேக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டார்கள். அமலேக்கியருக்கும் இஸ்ரவேலருக்குமான இனப்பகை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் (யாத் 17:16). அமலேக்கியரின் மேல் தேவகோபம் பற்றி எரிந்துகொண்டே இருந்தது. அமலேக்கியரும் இஸ்ரவேலரை அழித்தே தீருவது என்று உறுதிபூண்டிருந்தார்கள். அது அவர்கள் மரபணுவிலேயே பதிந்து போயிற்று. எஸ்தர் புத்தகத்தின் அரமேய விளக்க நூலான “இரண்டாம் தார்கம்” இஸ்ரவேலரை இன அழிப்பு செய்ய வகைதேடிய ஆமான் அமலேக்கிய வம்சாவழியினன் என்று வம்ச அட்டவணை ஆதாரங்களுடன் கூறுகிறது.
கர்த்தரின் கட்டளைப்படி தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலை நோக்கி, “இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் (1 சாமு 15:2-3) .
அமலேக்கியரை கொல்வது சரி ஆனால் மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும்கூட ஏன் கொன்றுபோட வேண்டும்?
யூதரின் பாரம்பரிய நூலான மித்ராஷ் அதற்கு விளக்கம் தருகிறது. அமலேக்கின் தாயான திம்னா, இஸ்ரவேல் குடும்பத்துடன் இணைய விரும்பியதாகவும் அதை இஸ்ரவேலின் முற்பிதாக்கள் ஏற்காததால் அவள் ஏசாவின் குமாரனாகிய எலிப்பாஸின் மறுமனையாட்டியாகி அமலேக்கைப் பெற்றெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரவேலை பழிவாங்க வேண்டும் என்ற வெறி திம்னாவின் கர்ப்பதிலிருந்தே துவங்கிவிட்டது.
அமலேக்கியர்கள் மிகவும் கைதேர்ந்த மந்திரவாதிகள் என்றும் அவர்களுக்கு shape-shifting என்று சொல்லப்படக்கூடிய விலங்குகளாக தங்களை உருமாற்றிக்கொள்ளும் சக்தி இருந்தது என்றும் மித்ராஷ் கூறுகிறது. எனவேதான் யுத்ததின்போது அவர்கள் தங்களை விலங்குகளாக உருமாற்றிக்கொண்டு தப்பித்து விடாதிருக்க தேவன் மனிதர்களோடுகூட சேர்த்து விலங்குகளையும் அழிக்கும்படி கட்டளை கொடுத்திருக்கிறார்.
இது வேதத்தில் எழுதப்படாத யூதப் பாரம்பரியமெனினும் இதில் உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இவ்விதமான மந்திர மாய வித்தைகள் அக்காலத்தில் மிகப் பரவலாக காணப்பட்டதுதான். கர்த்தர் எதையும் காரணமின்றி செய்யமாட்டார் என்ற கருத்து மேலும் இங்கு உறுதியாகிறது.
பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கர்த்தர் மிகவும் பயங்கரமானவராகக் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால் நமக்குத் தெரியாத ஒரு நியாயமான காரணம் உண்டு. பல பிரசங்கியார்கள் அந்த பழைய ஏற்பாட்டு தேவனைக் காண்பித்துத்தான் “பார்த்தாயா! கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அதே பழைய ஏற்பாட்டு தேவன்தான் புதிய ஏற்பாட்டிலும் இருக்கிறார். அவர் மாறாதவர்” என்று மிரட்டுகிறார்கள்.
ஆம், அவர் மாறாதவர்தான்! புதிய ஏற்பாட்டு அன்புள்ளம் கொண்ட அதே அப்பாதான் பழைய ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறார். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2 நாளா 7:3 ) என்று பழைய ஏற்பாடுதான் சொல்லுகிறது. அவர் அப்போதும், இப்போதும், இனிமேலும் சத்துருக்களுக்கு பட்சிக்கிற அக்கினிதான். ஆனால் அவர் தம் பிள்ளைகளுக்கு எப்போதும் நல்லவராகவே இருக்கிறார்.