Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

இலங்கையில் தேவாலயங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் ஆராதித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கொடூர குண்டு வெடிப்பும், அதில் சண்டே ஸ்கூல் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியானதும் நமது மனதில் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேவாலயங்களில் மட்டுமல்ல 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கிறது. அவரவர் நமக்கு தெரிந்த வழிகளில் துக்கத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம். எங்கு பார்த்தாலும் Pray for Sri Lanka என்ற வார்த்தைகளே கண்முன் வந்து நிற்கின்றன.

நேற்று முகநூலில் ஒரு நாத்திக அன்பர் பகிர்ந்திருந்த மீம்ஸ் எனது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அவரது பதிவின் பொருள் இதுதான்: “உங்கள் கடவுளின் சந்நிதியில்தான் குண்டு வெடித்தது. அவருக்கு தெரிந்துதான் அத்தனை மக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர் தடுக்க சித்தமாயிருந்தால் தடுத்திருக்கலாம், ஆனால் தடுக்கவில்லை அப்படியிருக்க அவரிடம் என்ன பிராத்திப்பீர்கள்?” என்று Pray for Sri Lanka என்ற பதிவை பகர்வோரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாத்திகர்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததே இதுதான். கேள்வி சரியோ, தவறோ அதை பொட்டில் அடித்ததைப் போல நேரடியாக தயக்கமின்றி கேட்டுவிடுவது. கேள்விகள் கேட்பதால்தான் நாத்திகம் வளர்கிறது. குண்டு வெடிப்புகளும், இயற்கை சீற்றங்களும் நிகழும்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக இறக்கும்போதும் நாம் தனியாகவும் சபையாகவும் அவர்களுக்காக கதறி அழுது ஜெபித்திருக்கிறோம். ஆனால் சபைக்குள்ளேயே குண்டு வெடித்து நம் மக்களே கோரமாக இறப்பது நமது தலைமுறைக்கு புதியது. துக்கத்தோடுகூட பல கேள்விகளும் நம் மனதுக்குள் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளை என்ன செய்யப் போகிறோம்?

பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டபடி தேவனுடைய இறையாண்மையைக் கேள்வி எழுப்பக்கூடாது என்று அந்தக் கேள்வியை மனதோடு புதைத்து பின்னர் மறந்தும் விடுகிறோம். அந்தக் கேள்விகள் பதில் இன்றியே தொக்கி நிற்கின்றன. அந்த சம்பவங்கள் அடுத்தவருக்கு நடக்கும்போதும் அவர்கள் “ஏன் எனக்கு இது நடந்தது?” என்று புலம்பும்போது சற்றும் தயவு தாட்சிணியமின்றி “தேவனுடைய இறையாண்மையைக் கேள்வி எழுப்பக்கூடாது, அவர் தமது சித்தத்தின்படி செய்கிறார்” என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தி விடுகிறோம். பின்னர் எதிர்பாராதவிதமாக அதே போன்ற சம்பவங்கள் நமது குடும்பத்துக்குள்ளேயே நமக்கு அன்பானவர்களுக்கு நடக்கும்போது குழப்பமும், துக்கமும், கோபமும் மேலோங்க தேவனை விட்டே பின்வாங்கி விடுகிறோம்.

இலங்கையில் ஏன் இதை தேவன் அனுமதித்தார் என்பதற்கு விடைகாணுவதல்ல, மாறாக அந்தக் கேள்வியை மனதுக்குள் வைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கும் விசுவாசிகளுடன் இடைபடுவதே இப்பதிவின் நோக்கம். தேவனுடைய இறையாண்மையை கேள்வி எழுப்பக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக தேவனிடம் கேள்வியே கேட்கக்கூடாது என்று மக்களுக்கு போதிப்பது தவறு. கேட்பவரின் நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் தேவனும் அந்தக் கேள்விக்கு பதில் அளித்து தெளிவுபடுத்துவதையே விரும்புகிறார். சீஷன் குருவிடம் கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்று தெளிவுறுவதுதான் நடைமுறையும்கூட. நீ என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று எந்த குருவும் சீஷனிடம் சொல்ல மாட்டார்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (மத் 7:7).

இயேசுவிடம் சீஷர்கள் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் என்று சுவிசேஷங்களில் பார்க்கலாம். அவர் அதற்காக ஒருபோதும் கோபப்பட்டதோ சீஷர்களைக் கடிந்துகொண்டதோ இல்லை. அவர் தனது சீஷர்களோடு தனித்திருக்கும்போது அவர்களது கேள்விகளுக்கு அவர் நிதானமாக பதில் அளித்தார் என்பதை வேதத்தில்(மாற்கு 4:10,34) வாசிக்கிறோம். தனித்திருத்தல் என்பது நெருக்கமான அன்புடன் கூடிய உறவைக் குறிக்கிறது. அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் எந்த இரகசியத்தையும் மறைப்பதில்லை. எனவே பதில்களைப் பெற்றுக்கொள்ள ஆராய்வது மட்டும் போதாது, அவரோடு தனித்திருக்கும் பழக்கமும் வேண்டும்.

கேள்விகள் கேட்டு தெளிவுறத் தெளிவுற மார்க்கம் ஆழத்தில் வளரும். ஆழத்தில் வளர்ந்தால்தான் அகலத்திலும் கிளை விரித்துப் பரவ முடியும். விரைவில் கிறிஸ்தவம் Universal Religion என்ற மிகப் பெரிய எதிரியை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த எதிரி தான் எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக அணுகுவதாக மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தும். உலகின் அத்தனை மதங்களின் Esoterism என்னப்படும் ஞானமார்க்கத்தின் கலவைதான் அந்த உலகலாவிய மதம். அந்த எதிரியோடு நமக்கு கர்மேல் பர்வதத்தில்(1 இராஜா 18) மட்டுமல்ல, மார்ஸ் மேடையிலும்(அப் 17:19-34) யுத்தம் இருக்கிறது. எனவே நம்மிடையே ஆராதிக்கிறவர்கள் மட்டுமல்ல, ஆராய்கிறவர்களும் பெருக வேண்டும்.

என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து (நீதி 27:11).

Leave a Comment