சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 2

அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ‘பரிசுத்தவான்களின் சபையிலே’ அவருடைய துதி விளங்குவதாக. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து…(சங் 149:1,3), அல்லேலூயா, தேவனை அவருடைய ‘பரிசுத்த ஸ்தலத்தில்’ துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் (சங் 150:1,4) மேற்கண்ட வசனங்கள் ஆசரிப்புக் கூடாரம் அல்லது தேவாலயத்தில் நடனத்தோடு கர்த்தரை துதிக்கச் சொல்லி அறிவுறுத்துகின்றன.
புதிய ஏற்பாட்டில் தொழுகைக்கான முறைகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. அது ஆவியோடும், உண்மையோடும்(யோவா 4:23) தேவனைத் தொழுதுகொள்ளச் சொல்லி மட்டுமே வலியுறுத்துகிறது. அதாவது ஆராதனை என்பது மனம் சம்பந்தப்பட்டது. தேவன் ஆராதிக்கிறவனின் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார் என்பது அதன் பொருள். மனந்திருந்திய மைந்தன் கதையில் இளையகுமாரன் மனம் திரும்பி வீட்டுக்கு வந்ததும் அப்பா வீட்டில் நடனக் களிப்பு இருந்ததாக லூக்கா 15:25 கூறுகிறது. இன்றைய நடன எதிர்ப்பாளர்கள் போல அப்பாவும் இருந்திருப்பாரானால் முஷ்டியை மடக்கி, “என் பரிசுத்த வீட்டுல டான்ஸாடா ஆடுறீங்க?..” என்று எல்லோரையும் போட்டு பொளந்திருப்பார். அல்லது அன்று மாலையே எல்லோரையும் கூட்டிவைத்து யாரெல்லாம் தறியோடு ஆடினார்கள், யாரெல்லாம் தறிகெட்டு ஆடினார்கள் என்று ஒரு விசாரணைக் கமிஷன் நடந்தியிருப்பார். ஆனால் அந்த நல்ல அப்பா ஒரு கொழுத்த கன்றை அடித்து எல்லோருக்கும் விருந்து வைத்து மகிழ்ந்ததாக அந்த வேதபகுதி கூறுகிறது.
சரி பிரதர், நாங்க மகிழ்ச்சியின் மிகுதியில் ஆராதனையில் ஒருவர் ஆடும் நடனத்தைக் குறை கூறவில்லை. ஆனால் செயற்கையாக வாத்தியக்கருவிகளை ஒலிக்கச் செய்து, வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து, புகையெல்லாம் போட்டு Pub-இல் ஆடுவது போல ஒரு performance-ஆக ஆடுவதைத்தான் எதிர்க்கிறோம். இது சினிமாவின் தாக்கமேயன்றி வேறு என்ன? என்று சிலர் கூறுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் தேவபயம் மிஸ் ஆவதாக அவர்கள் உணர்கிறார்கள். அவர்களது கரிசனம் நமக்குப் புரியாமல் இல்லை. 70, 80-களில் பிறந்து, அமைதியாக ஆராதித்துப் பழக்கப்பட்ட நமக்கு இந்த புதிய விஷயம் ஒரு cultural shock-ஐ கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இங்கு இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது பரமபிதா நடாத நாற்றாக இருந்தால் சீக்கிரமே வேரோடு பிடுங்கப்பட்டுவிடும். அல்லது தேவன் இதை அனுமதித்தால் அதிலுள்ள தேவையற்ற விஷயங்கள் நீக்கப்பட்டு, பயபக்திக்குரிய விஷயங்கள் சேர்க்கப்பட்டு புதிய வடிவத்தில் சபை ஆராதனையில் இதுவும் ஒர் அங்கமாகிவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. உங்களைப் போல சபையின் நலம் விரும்புபவர்களின் ஆரோக்கியமான விமர்ச்சனங்கள் இந்த புதிய ஆராதனை வடிவத்தைப் பட்டைதீட்ட நிச்சயம் உதவும். எனவே ஆரோக்கியமான விமர்ச்சனங்கள் வரவேற்கத்தக்கவைதான். சபைவரலாற்றில் ஆராதனை வடிவங்கள் காலப்போக்கில் மாறிக்கொண்டேதான் வந்திருக்கின்றன. பழமையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும் திருச்சபைகள்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
சிலர் தங்கள் சபையிலுள்ள வாலிபப் பிள்ளைகள் எல்லோரும் “எப்படா அசுத்த சாக்கடையில் குதிக்கலாம்” என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைப் போலவும், “நீங்கள் எல்லோரும் நடனமாடிக்கொள்ளலாம், ஸ்டார்ட் மியூசிக்…” என்று சொன்னவுடன் 10 Commandments படத்தில் பொன் கன்றுக்குட்டிக்கு முன்னால் இஸ்ரவேலர்கள் நடனமாடுவதைப் போல ஆபாச நடனத்தில் இறங்கிவிடுவார்கள் என்பது போலவும் பயப்படுகிறார்கள். எத்தகைய மனநிலை இது? உங்கள் சொந்த மந்தையின் ஆட்டுக்குட்டிகளைப் பார்க்கும் கோணம் இதுதானா? நீங்கள் போதித்த ஜீவ அப்பமாகிய வசனத்தை உண்டு வளர்ந்த பிள்ளைகள்தானே அவர்கள்? அவர்களை விடுங்கள், நீங்கள் இதுகாறும் ஊட்டி வளர்த்த அந்த வசன உணவின்மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? சத்தியத்தை உண்டு வளர்ந்த பிள்ளைகள் எப்படி சாக்கடையில் இறங்குவார்கள்?
ஆராதனையென்றால் பயத்தோடு சேவிப்பது, நடுக்கத்தோடு களிகூருவது, எனவே ஆராதனையில் நடனமாடுவது என்றால் முழுமனதோடும், பயபக்தியோடும் ஆட வேண்டும் இல்லாவிட்டால் நடனமே ஆடக்கூடாது என்பது சிலர் கருத்து. அமைதியாக நடக்கும் ஆராதனைகளில் எத்தனைபேர் உள்ளம் உருக ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள், எத்தனைபேர் மனதை வெளியே அலைபாய விட்டுவிட்டு உடலை மட்டும் அங்கே வைத்து பவ்யமாக நின்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நாமே அந்தத் தவறை எத்தனைமுறை செய்திருப்போம்? எத்தனை முறை நம்முடைய மனங்கள் ஆராதனையைவிட்டு வெளியே அலைபாய்ந்திருக்கிறது? இதில் எங்கே நடுக்கத்துடன் களிகூறுதல் இருக்கிறது? அதற்காக நாம் ஆராதிப்பதை நிறுத்திவிட்டோமா? நம்முடைய குறைகளையும் ஏற்றுக்கொண்டு ஆவியானவர் நம்மை படிப்படியாக பக்குவப்படுத்தி வருகிறாரல்லா?
நடனம் என்றாலே சினிமா, அருவெறுப்பு, ஆபாசம், பாவம் என்று சிலர் நினைக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கமே நடனம் என்பது மகிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு அதை ஆராதனைக்கும் பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இன்று சபை ஆராதனையில் மைக் பிடித்துப் பாடும் பலரும் அதை ஒரு performance-ஆகத்தான் செய்கிறார்கள். அது விமச்சனத்துக்குள்ளாகவும் செய்கிறது. அதற்காக பாடலே வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லையே! ஏனெனில் நாம் ஆராதனையில் பாடலுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். ஆடலுக்குப் பழக்கபடாததால் நமது மனங்கள் அதை ஏற்க மறுக்கிறது. பாடி ஆராதியுங்கள் என்று சொல்லும் அதே வேதம்தான் ஆடி ஆராதியுங்கள் என்றும் சொல்கிறது. அப்படி பலர் ஆடி ஆராதித்த சம்பவங்களையும் பதிவு செய்து வைத்துள்ளது. அதற்காக எல்லோரும் ஆடியே ஆகவேண்டும் என்று கட்டாயமல்ல. அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தேவசமுகத்தில் நீங்கள் ஆடும் நடனம் கண்ணியமாகவும், பயபக்தி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுகோள்.
மாற்றங்கள் வருவதை தவிர்க்கமுடியாது. தேவன் அனுமதித்து வரும் மாற்றங்களை யாராலும் தடுக்க முடியாது. தேவனுடைய விருப்பமில்லாமல் வரும் எந்த மாற்றமும் சபையில் நிலைக்காது.