3.ஆட்டுத்தோல் வெளியே! ஓநாய் உள்ளே!

(இது ”எழுப்புதல் தொடரின்” மூன்றாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  இரண்டு அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும்.

இந்த அத்தியாயத்தை எழுதும் எனது நம்பிக்கை பற்றி ஒரு காரியத்தை ஆணித்தரமாக சொல்லிவிட்டு தொடரலாம் என்று வாஞ்சிக்கிறேன். வேதம் சொல்லுகிறபடி “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் கர்த்தர் ஆவியை ஊற்றுவார் என்று விசுவாசிக்கிறேன். தரிசனங்களையும் சொப்பனங்களையும், அற்புத அடையாளங்களையும், தெய்வீக சுகமளித்தலையும், பிசாசுகளைத் துரத்துவதையும், அந்நிய பாஷைகளையும் முழுமையாக நம்புகிறேன். அவைகள் நமக்கு இன்றும் உண்டு எனவும் விசுவாசிக்கிறேன். 

ஆனால் இந்த அனுபவங்களுக்கு தரவேண்டிய இடத்துக்கும் அதிகமான இடத்தைத் தரும்போதும் இத்தகைய அனுபவங்களை தேவனுடைய வார்த்தைக்கும் மேலாக உயர்த்திப் பிடிக்கும் போதும்தான் ஓநாய்க்கூட்டம் ஆவிக்குரிய அனுபவங்கள் என்னும் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு வேட்டையாட சபைக்குள் வருகிறது. தேவன் தனது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார் என்ற சங்கீதக்காரனின்(138:2) கூற்றை நாமும் ஆமோதிப்போமானால் கள்ள உபதேசிகளும், கள்ள உபதேசங்களும் சபை எல்லைக்குள்ளேயே நுழைய முடியாது. ஆனால் என்ன செய்ய? ஏவாளின் பிள்ளைகளாகிய நம்மை தேவனுடைய வார்த்தையை விட பார்வைக்கு புதுமையானதாகவும், அனுபவிக்கப் பரவசமானதுமாய்த் தோன்றுகிற எத்தனையோ காரியங்கள் சுண்டி இழுக்கிறபடியால் வஞ்சகம் நம் வாசற்படியிலேயே படுத்திருக்கிறது. 

கடந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியாக போலி எழுப்புதல்களைக் குறித்து தொடர்ந்து ஆராய்வோம். 

போலி எழுப்புதல்களின் நோக்கங்கள்: 

சாத்தானின் நோக்கம்:

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் (யோவான் 10:10) என ஆண்டவர் சொன்னது போல எழுப்புதல் போல தோற்றமளிக்கும் போலிகளை சாத்தான் உருவாக்கித் தரக்காரணம் சபைகளைச் சீரழிப்பதே!

 புகழ் மயக்கம்:

எழுப்புதல் வீரர்களது புகழும் அவர்கள் அடைந்த வெற்றியும் மந்திரவாதி சீமோன் போல பலரை இச்சிக்க வைக்கிறது (அப்8: 5-24). ஆனால் அந்த எழுப்புதல் வீரர்கள் கடந்து சென்ற பாதையைப் பின்பற்றவோ மனதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சாத்தான் காட்டும் மாற்றுதான் போலிகள்.

’எழுப்புதல், எழுப்புதல்’ என்று ஒரு ஊழியக்காரர் மேடையில் முழங்குகிறார் என்பதற்காகவும், எழுப்புதலைக் குறித்து அதிகம் பாடுகிறார் என்பதற்காகவும் அவர் ஒரு ”எழுப்புதல்வீரர்” என்று நம்பிவிடக்கூடாது. மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்று ஆண்டவர் சொன்னதை மறவாதிருங்கள். அந்த ஊழியர் எழுப்புதல் என்று எதைச் சொல்லுகிறார், எழுப்புதல் வீரர்கள் என்று யாரை அடையாளம் காட்டுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

சில வேளைகளில் சார்லஸ் பின்னி, இவான் ராபர்ட்ஸ் மாதிரியான சரியான எழுப்புதல் வீரர்களை அடையாளம் காட்டிவிட்டு Soaking Prayer மாதிரி சில தவறான அனுபவங்களையும் கூட  முன் வைக்கக்கூடும். ஒவ்வொரு எழுப்புதலிலும் தேவன் ஒரு புதுமையைச் செய்கிறார்.  இந்த கடைசி கால எழுப்புதலில் “இந்த” அனுபவம் புதுமை என்பார்கள். ஒவ்வொரு எழுப்புதலிலும் தேவன் ஒரு புதுமை செய்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புதுமை நம்மை மீண்டும் ஆதித்திருச்சபை அனுபவத்துக்கு அழைத்துச் செல்வதாய் இருக்கும்.  ஆனால் இவர்கள் முன்வைக்கும் குண்டலினியை ஒத்த அனுபவங்களுக்கும் ஆதித்திருச்சபைக்கும் சம்பந்தமில்லை. 

பொறுமையின்மை:

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. (எபிரெயர் 10:36)

எழுப்புதலுக்காகக் ஜெபிக்கும் அநேகர் வாக்குப்பண்ணப்பட்ட எழுப்புதல் வரும்வரை பொறுமையாய்க் காத்திருப்பதில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆபிரகாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கு வரும்வரைக் காத்திருக்காமல் தேவனுக்கு உதவி செய்வதாக நினைத்து அவசரப்பட்டு “இஸ்மவேலைப்” பெற்றெடுத்தார். மாம்சத்துக்கு அடையாளமாக உள்ள இந்த இஸ்மவேல் “போலி எழுப்புதலுக்கு” நிழலாட்டமாய் இருக்கிறான். அநேக சபைகளும், விசுவாசிகளும் வாக்குப் பண்ணப்பட்ட எழுப்புதல் வரும் முன்னரே அவசரப்பட்டு மாம்சீகமாக முயற்சி செய்து சில மேற்கத்திய ஊழியக்காரர்கள் செய்யும் வித்தைகளைக் காப்பி அடித்து அந்நிய அக்கினியை உருவாக்கி தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாயிருங்கள்:

இன்றைய சபைகளை ஊடுருவியுள்ள குண்டலினி அனுபவங்கள்:

1990 களுக்குப் பின்னால் உருவாகி இன்று அமெரிக்கா, கனடா முதலான மேற்கத்திய நாடுகளில் வேகமாகப் பரவிவரும்  இந்த போலி எழுப்புதலானது. முழுக்க முழுக்க மனோத்துவ முறையில் தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிப் பரவசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த எழுப்புதலை நடத்திச் செல்லும் தலைவர்கள் “இதை தேவனிடத்திலிருந்து வந்த புதிய அசைவாடுதல் (A new move from God)” என்று வர்ணிக்கிறார்கள். வேதத்தின் அடிப்படையைக் காட்டி இவர்களது செயலை ஏற்றுக் கொள்ளாதவர்களை ”ஆவியானவருடைய அசைவாடுதலுக்கு குறுக்கே நிற்கும் பழம்பரிசேயர்கள்” என்று சாடுகிறார்கள்.

இதை விடக் கொடுமை அந்தத் தலைவர்கள் ”இதுவே கடைசி கால எழுப்புதல்” என்றும், இந்த எழுப்புதலின் விளைவாக இவர்களது சபை ஆதித் திருச்சபையை விட சிறந்ததாக மிளிரும் என்றும் தாங்கள் ஆதி அப்போஸ்தலரைவிட அதிகமாக சாதிக்கப் போவதாகவும் ஏராளத்துக்கு அள்ளி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சாதித்ததோ விசுவாசிகளைப் பாம்பு போல நெளிய வைத்ததும், பைத்தியம் போல சிரிக்க வைத்ததும், தவளைபோல கத்த வைத்ததும்தான். இவர்களுக்கு பரலோகத்திலிருந்து தூய ஆவி ஊற்றப்படுவதை விட தங்கத் துகள்கள் ஊற்றப்படுவதே முக்கியமானதாக மாறிவிட்டது. இன்று மேலை நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் சில ஆங்கில கிறிஸ்தவத் தொலைக்காட்சிகளை இங்கு தடை செய்தால் கூட நல்லது என்று தோன்றுமளவுக்கு இவர்கள் தங்கள் கேவலமான சரக்குகளையெல்லாம் அந்தத் தொலைக்காட்சிகள் வழியாக இந்தியாவுக்குள்ளும் இறக்கிவிடுகிறார்கள்.

உண்மை எழுப்புதலிலும் கூட பரவச அனுபவங்கள் காணப்படுவது உண்டுதான் ஆனால் உண்மை எழுப்புதலானது ஆழமான மனந்திரும்புதலை ஏற்படுத்தும். அன்பும் பரிசுத்தமும் அளவில்லாமல் பெருகும். உண்மை எழுப்புதல் அந்தந்த நகரங்களையும் சுற்றியுள்ள பகுதிகளையும் கூட பாதிக்கும். ஆனால் இவர்கள் சொல்லும் எழுப்புதலில் ஆழமான மனந்திரும்புதல் அனுபவங்கள் இல்லை. அன்பும் பரிசுத்தமும் பெருகவில்லை. இவர்கள் எழுப்புதல், எழுப்புதல் என்று பிரகடனப்படுத்தியும் பற்பல இடங்களில் இருந்து விசுவாசிகள்தான் அந்த சபைக்கு சென்று குவிகிறார்களே தவிர, அந்த நகரங்களிலோ ஒரு பாதிப்பும் இல்லை.  இவர்கள் எழுப்புதலைப் பிரகடனப்படுத்தி பல ஆண்டுகள் ஆகியும் அந்தந்த நகரங்களில் பாவக்கட்டுகள் இன்னும் உடைக்கப்படவில்லை. இந்தத் தொடரில் கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எழுப்புதல்களைப் பற்றி ஆராய்ந்துவிட்டு சில நிகழ்கால எழுப்புதல்கள்  மற்றும் போலி எழுப்புதல்கள் பற்றி ஒவ்வொன்றாக கடைசியில் ஆராய்வோம்.

பொதுவாக மேற்கத்தியர்கள் இந்தியா, சீனா முதலிய கிழக்கத்திய நாடுகளின் மதங்களில் சொல்லப்படும் சில ஆழமான காரியங்களால் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால் இங்கு காணப்படும் நூதனமான விஷயங்களைக் கற்றுக் கொண்டு அதைத் தங்கள் நாட்டில் போய்ப் பரப்பி விளம்பரம் தேடிக்கொள்ளும் போங்கு அவர்களிடையே காணப்படுகிறது. எல்லாரும் ஒன்றைச் சொன்னால் தான் மட்டும் வித்தியாசமான ஒன்றைச் சொல்லி தனித்து நின்று அனைவர் கவனத்தையும் கவரவேண்டுமென்பது படித்த அறிவு ஜீவிகளுக்கே உள்ள மோசமான ஒரு வியாதி. நமக்கோ “MADE IN USA” என்று எழுதி குப்பையைக் கொடுத்தால் கூட அதை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் போட்டு வாங்கி வீட்டு ஷோகேசில் கொட்டி வைக்கும் அளவுக்கு ஆட்டிப் படைக்கும் அந்நியமோகம். இப்படியாக கிழக்கு மேற்கையும், மேற்கு கிழக்கையும் வஞ்சிக்கிறது. மேற்கத்தியர்கள் நமது நாட்டிலுள்ள குண்டலினி யோகம், சாமியாடுதல், போன்ற காரியங்களை உள்வாங்கி அதை கிறிஸ்தவமயமாக்கி நமக்கே திருப்பித் தருகிறார்கள்.

மனோதத்துவமும் போலி எழுப்புதலும்

தனியாக இருக்கும் ஒரு மனிதனிடம் ஒரு கருத்தைத் திணிப்பதைவிட கூட்டத்தோடு இருக்கும் மக்களிடம் திணிப்பது எளிது என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இதுதான் Crowd Psychology எனப்படுகிறது. இந்த உண்மையைத்தான் மேடை மந்திரவாதிகளும், அரசியல்வாதிகளும், பேச்சாளர்களும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுகிறார்கள். பற்பல கலகங்களும் புரட்சிகளும் வெடித்து சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டது இப்படித்தான்.

 Suggestion எனப்படுவது ஹிப்னோட்டிசத்தில் ஒருவகை. உங்களுக்குள் ஒரு எண்ணத்தை விதைத்து அதை நம்ப வைப்பதுதான் ”சஜஷன்”. இந்த “சஜஷன் டெக்னிக்” தனியாக உள்ள ஒரு மனிதனிடம் ஏற்படுத்தும் விளைவை விட கூட்டமாக உள்ள மக்களிடையே ஏற்படுத்தும் விளைவு பல மடங்கு அதிகம். சஜஷன் மூலம் ஒருவருடைய மனதை எளிதாக வளைக்க முடியும். இதற்கு ஒரு ஆபத்தில்லாத எளிய உதாரணம், கீழ்க்கண்ட படத்திளுள்ள கரும் புள்ளியை உற்றுப் பாருங்கள், ஆழமாக, இன்னும் ஆழமாக கண் சிமிட்டாமல் பாருங்கள். சுற்றியுள்ள வண்ணங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போய் கரும் புள்ளி மட்டுமே இருப்பதாகக் காண்பீர்கள்.

 

ஆச்சரியமாக உள்ளதா? உண்மையில் சுற்றியுள்ள வண்ணங்கள் மறைந்தனவா, இல்லை.  பார்த்தீர்களா! உங்கள் மனம் எவ்வளவு எளிதாக வளைக்கப்படக் கூடியது!!

சார்லஸ் பாடோயின் என்ற உளவியலாளர் சொல்லுகிறார் Suggestion எனப்படும் கருத்துத் திணிப்பை சரியாகப் பயன்படுத்தினால் ஜனங்களை மிருகங்களைப் போல, முட்டாள்களைப் போல செயல்படவைத்து அப்படி செயல்பட்டதனிமித்தம் அவர்களைப் பெருமைகொள்ளவும் வைக்க முடியும் என்கிறார். இந்த Suggesion மூலம் கூட்டத்திலுள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் காரணமின்றி சிரிக்க வைக்கவும் முடியும் ஒருவர் மாற்றி ஒருவராக எல்லோரையும் கொட்டாவி விடவும் வைக்க முடியும் என்கிறார்.

Lawrence of Arabia என்று ஒரு ஆங்கிலப் படம். வறண்ட அரேபியப் பாலைவனத்தையும் அதன் மணற்புயலையும் வேனல் தகிப்பையும் அற்புதமாக எடுத்துக் காட்டிய ஒரு படம். அதன் இடைவேளைப் பொழுதில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளிர்பானங்கள் வாங்கிப் பருகி தங்கள் தாகங்களைத் தீர்த்துக் கொண்டார்களாம். அதுவும் ஏசி தியேட்டரில், அதை விட்டுத்தள்ளுங்கள், நம்ஊரில் தியேட்டரில் “ஆத்தா” படம் பார்க்கும் சில பெண்கள் படத்தில் உடுக்கை அடிக்க ஆரம்பித்தவுடன் “ஆத்தா” வந்து ஆட ஆரம்பிப்பது இல்லையா? இப்படித்தான் பிரசங்கியார் கையில் தேவனுடைய வல்லமை இறங்கியிருப்பதாக நம்பும் ஒருவரும் அவர் கையை நீட்டும் முன்னே ’பொத்’ என்று விழுகிறார். பிரசங்கியார் மைக்கில் ஊதியவுடன் அல்லது கோட்டைக் கழற்றி வீசியவுடன் முன் வரிசையில் இருப்பவர் விழுவதைப்பார்த்து தானும் விழுகிறார். இது கருத்துத் திணிப்புதானே (Suggesion) அன்றி கர்த்தரின் அசைவாடுதல் அல்ல. இப்படித்தான் சுகமளிக்கும் கூட்டங்களில் அநேகர் சுகம் பெற்றதாக மேடையேறி சாட்சி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவதற்குள் தங்களுக்கு இன்னும் அந்த வியாதியின் அடையாளங்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து குழம்பிப் போகிறார்கள் (பின்பு தனக்கு போதுமான விசுவாசம் இல்லையோ என்று  தங்களைத் தாங்களே  (ஏமா)ஆற்றுப்படுத்திக் கொள்வது தனிக்கதை).

முகத்திலும் தலையிலும் உள்ள சில நரம்புகளை தொடுவது அல்லது தட்டுவதன் மூலமாக ஒருவிதமான மின்சாரம் தாக்குவது போன்ற அனுபவத்தை உண்டாக்க முடியும். கீழ்கண்ட வீடியோ இதை தெளிவாக விளக்குகிறது. வேதத்தில் ஆதி அப்போஸ்தலர்கள் தலையில் கைவைத்தார்கள் ஆவியானவர் இறங்கினார் என்று வாசிக்கிறோம், ஆனால் இன்றைய ஊழியர்கள் சிலர்  தலையில் தட்டியும், இரண்டு காதுகளிலும் கைவைத்து கீழே தள்ளுவதையும், கன்னத்துக்கு மேலே உள்ள எலும்புப் பகுதியில்  கைவைத்து கீழே தள்ளுவதையும் கவனித்திருக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பாருங்கள்:

திரும்பத் திரும்பப் பாடப்படும் ஒரு பாடலின் வரியும், ஒவ்வொரு முறை அந்த வரி பாடப்படும் போதும் ”டெம்போ” அதிகரிக்கப் படும் டிரம் சப்தமும் உரக்கப் பேசப்படும் அந்நிய பாஷைகளும் ஆவியானவர் நம் மத்தியிலே பொங்கிப் பொங்கி வந்து விட்டார் என்ற “மாஸ் சஜஷனை (Mass suggestion)” உங்களுக்குள் தோற்றுவிக்கக் கூடும். பாடப்படும் பாடல்களை நான் குறைகூறவில்லை. அது அற்புதமான அருமையான பாடல்கள்தான். ஆனால் அது ஒரு தவறான நோக்கத்துகாக பயன்படுத்தப் படுவதைத்தான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தேவன் என்னை அளவில்லாமல் ஆவியால் நிறைத்து அந்த ஆவியானவர் தரும் உன்னத பெலத்தினால் கிறிஸ்துவுக்காக ஜெயங்கொண்டவனாக ஜீவிக்க வேண்டும் என்ற தணியாத வாஞ்சையும், மான்கள் நீரோடை வாஞ்சித்துக் கதறுவது போல என் தேவனுடைய சமூகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தாகமும் நமக்குள் இருந்தால் ஆவியானவர் தண்ணீரூற்றாக அல்ல காட்டாற்று வெள்ளமாகவே நம் மத்தியில் பாய்ந்து வந்து நம்மை மூழ்கடித்து நீச்சல் ஆழம் நடத்திச் செல்லமாட்டாரா என்ன? அந்த அனுபவத்துக்குள் நம்மை நடத்திச் செல்ல தாழ்மையும் தாகமுமே அவசியம் தாரை தப்பட்டை அல்ல. இவர் உடுக்கை அடித்தால் இறங்கும் ஆவி அல்ல, உடைந்த உள்ளங்களுக்குள் இறங்கும் ஆவி.

மீண்டும் சொல்லுகிறேன் நான் ஆவியின் அபிஷேகத்தையும், அந்நிய பாஷையையும் நம்புகிறேன். அற்புத அடையாளங்களையும், தெய்வீக சுகத்தையும் நம்புகிறேன். அதை ஆண்டவர் இன்றும் செய்கிறார் என்றும் நம்புகிறேன். ஆனால் நிஜத்தையும் போலியையும் இனங்காணுதல் அவசியம். நாம் சரியாகப் பகுத்தறியத் தக்கவர்களாயிருந்தால் தேவன் மகிழுவார்.

 நீ… அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்… அறிந்திருக்கிறேன். (வெளி 2:2) என்று எபேசு சபையாரை அவர் பாராட்டுவதை மறந்துவிடக்கூடாது.

சில நல்ல சபைகளும் ஊழியக்காரர்களும் கூட இத்தகைய அனுபவங்களை தழுவிக்கொள்ளுவதைப் பார்க்கும் போது துக்கமாக இருக்கிறது. பெரும்பாலான நல்ல ஊழியர்கள் கூட வேதத்தை சரிவர ஆராயாமல் பிரபல ஊழியக்காரர்கள் செய்கிறார்கள் அதனால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதற்காகவும், தாங்கள் விட்டுவந்த சபைகளின் வழக்கத்தின் படியேயும் இத்தகைய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். விசுவாசிகளும் மேய்ப்பன் எவ்வழியோ மந்தை அவ்வழி என கண்ணை மூடிக்கொண்டு அதை பின்பற்றுகிறார்கள்.

புறாக்களைப் போல கபடற்றவர்களாயும் இருங்கள்:

கடைசியாக என் எழுத்துக்கள் நான் எதிர்பார்ப்பதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற பயத்தோடு கீழ்கண்டவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.   இத்தகைய அனுபவங்களை விட்டு விலகி இருக்கும்படியும், இந்த அனுபவங்களை பிரதானமாக்கி கடைவிரிக்கும் ஊழியக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் இந்தக் கட்டுரை உங்களை வலியுறுத்துகிறதே தவிர இந்த அனுபவங்களைக் கொண்டுள்ள சபைகளையும் விசுவாசிகளையும் விரோதிக்கவோ, நியாயந்தீர்க்கவோ அல்ல. நம்மை விட ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்த விசுவாசிகள், சபைகளில் கூட இத்தகைய அனுபவங்களைக் காணலாம். இப்படிப்பட்ட நம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்காக கண்ணீரோடு தேவ சந்நிதியில் முறையிட்டு அவர்கள் கண்கள் தெளியவும் மீண்டும் வார்த்தைக்குத் திரும்பவும், ஆதிநிலை ஏகவும் கருத்தோடு மன்றாடுவதைத்தவிர நாம் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலிருந்தால் அவர்களோடு இந்தக் காரியங்கள் பற்றி எடுத்துக் கூறலாம். மற்றபடி நமது சக விசுவாசியை வெறுக்கவோ அருவருக்கவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆவியானவர் பெயரில் இப்படிச் செய்யப்படும் கூத்துக்களையெல்லாம் நம்பாதவர்கள், பின்பற்றாதவர்கள் என்பதற்காக நானும் நீங்களும் சிறந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒருவர் சரியான உபதேசத்தை அறிந்து வைத்திருக்கிறார் என்பதற்காக அவர் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார் என்று பொருள் அல்ல. “கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (Iசாமு 16:7) என்ற நடுக்கமூட்டும் ஆணித்தரமான உண்மையை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. நாம் உலகத்திலேயே சிறந்த உபதேசத்தைக் கொண்டுள்ள சபையிலேயே அங்கத்தினராக இருந்தாலும். அப்போஸ்தலனாகிய பவுல் எனது சபைப் பாஸ்டராகவும், ஜான் வெஸ்லியும், ஜோனத்தான் எட்வர்ட்சும் எனது Home cell leaders ஆகவும் இருந்தால் கூட என் உள்ளத்தில் அன்பில்லையானால் நான் தேவ அங்கீகாரத்தை ஒருக்காலும் பெற இயலாது.

ஒரு சக விசுவாசி தவறான உபதேசத்தைப் பின்பற்றுகிறார் என்ற ஒருகாரணத்துக்காக அவரை நாம் நேசிக்க முடியவில்லை என்போமானால் நாம்தான் வஞ்சகத்திலெல்லாம் பெரிய வஞ்சகத்தில் சிக்குண்டிருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை அவரோடு இணைந்து நம்மால் ஊழியம் செய்ய இயலாமல் போகலாம் ஆனால் ”இவர் கிறிஸ்துவுக்குள் என் சகோதரன்/சகோதரி” என்று அவரை, நேசிக்க அவருக்காக ஜெபிக்க எந்தத் தடையும் இல்லை.

சத்தியம் அறியாத நம் சகோதர சகோதரிகளுக்காய் சபைகளுக்காய் அப்பாவிடம் பரிந்து பேசுவோம். சபைக்குள் ஊடுருவப் பார்க்கும் அந்நிய அக்கினியை நோக்கி சாட்டையை வீசுவோம்.

அடுத்த அத்தியாயத்தில் பதினாறாம் நூற்றாண்டு கண்ட மாபெரும் வரலாற்று நாயகன். சத்தியத்தின் நிமித்தம்  ஒட்டுமொத்த ரோமச்சபையையும், ரோம சாம்ராஜ்ஜியத்தையும் எதிர்த்து ஆவியானவர் துணையோடு தனி ஆளாகக் களம்கண்ட மாவீரன், மார்ட்டின் லூத்தர் என்னும் புரட்சிக்காரனைச் சந்திப்போம்.

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

0 thoughts on “3.ஆட்டுத்தோல் வெளியே! ஓநாய் உள்ளே!”

  1. மிகவும் அருமையான தலைப்பு அதற்கேற்றால் போல் ஆணித்தரமான உங்கள் வார்த்தைகள் சகோ மிக்க நன்றி, இவை பலருக்கு ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தம் என நம்புகிறேன். சீக்கிரமே நாம் இவற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கவேண்டும் என யாசிக்கிறேன்.

  2. Dear br,
    i praise god our lord jesus christ for u and ur ministry.this is martin from chennai.am going to chennai christian fellowship church anna nagar chennai.every article is nice .ur site is in tamil it will bless and edify tamil speaking people.very rare to see the website like this.

    Zac poonen speaks on may 7,8,9 2010 AT Tanjore cfc conference,Tanjore.I believe u can c and hear the message lively through ustream.surely i sent u the web link.

    R.Stanley Speaks….BIBLE REVIVAL MEETINGS FOR MALAYALEES,VENUE:MCC AUDITORIUM,CHETPET CHENNAI ON JULY -4-2010
    CONTACT:JEBARAJ-9884112610

  3. Live Webcast : Holiness and Fellowship,

    Thanjavur Meetings – May 7,8 & 9, 2010

    Link:http://www.cfcindia.com/web/mainpages/live_webcast.php

    Schedule: Day 1 – May 7th, Friday

    Session 1 : 10:30 am to 11:30 Indian Time
    Session 2 : 11:45 am to 12:45 pm
    Session 3 : Childrens Meet – 3:30 pm to 4:30
    Session 4 : 7:15 pm to 8:15

    Schedule: Day 2 – May 8th, Saturday

    Session 1 : 10:15 am to 11:15 Indian Time
    Session 2 : 11:30 am to 12:30 pm
    Session 3 : How to build family fellowship – 3:30 pm to 4:30
    Session 4 : 7:15 pm to 8:15 Indian Time

    Schedule: Day 3 – May 9th, Sunday

    Session 1 : 10:00 am to 11:00 Indian Time
    Session 2 : 10:15 am to 12:15 pm

Leave a Reply