3. உலகத்தைக் கலக்கிய எழுப்புதல்

(இது ”தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” தொடரின்  மூன்றாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  இரண்டு அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்

தேவகுமாரனிடம் மண்ணைக் கவ்வியபின் தோல்வியின் வலியோடு மனம் குமுறியபடி  சாத்தான் உட்காந்திருந்தான். தோற்றுப்போகாத ஆயுதம் என அவன் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த ‘மரணம்’ முனை ஒடிக்கப்பட்டு மூலையில் கிடந்தது. (1கொரி 15:55) பாதாளத்தின் சிறைக்கதவுகள் திறந்து கிடந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறை வைக்கப் பட்டிருந்த கைதிகள் இப்பொழுது அங்கில்லை (மத் 27:52,53; சங்68:18)

சாத்தான் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்.

”வந்தார், வென்றார், பரலோகத்துக்கு ஏறிச் சென்றுவிட்டார்! இனி என் கதி??!!

இயேசு தேவனுடைய வித்து என்றால் அவர் பிறப்பிக்கப்போகும் சந்ததி யாராக இருக்கும்? பயந்து மறுதலித்த பேதுருவா? உயிர்தெழுதலை சந்தேகப்பட்ட தோமாவா? ரோமச்சிப்பாய்களிடம் இயேசுவை ‘அம்போ’ என விட்டுவிட்டு நிர்வாணமாக ஓடிய சீஷனா? சிலுவையில் துடித்துக் கொண்டிருந்த அவரை நெருங்கி வந்து பார்க்கக் கூட துணிவு இல்லாமல் தூரத்தில் நின்று அழுது கொண்டிருந்த அவருக்கு நெருக்கமானவர்களா? அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்த அவரது சொந்த ஜனமாகிய யூதர்களா?

வாய்ப்பே இல்லை! இவர்களெல்லாம் அவரது வாரீசாக இருக்க தகுதியற்றவர்கள். பின்னே யார்?

பரிசுத்த ஆவியைத் தரப்போவதாக வாக்களித்துச் சென்றாரே (யோவான் 16:7,8; லூக்கா 24:49), மகாப் பரிசுத்தமான அந்த ஆவியானவர் தோற்றுப்போன ஆதாமின் வாரீசான இவர்களுக்குள் எப்படி வந்து வாசம்பண்ண இயலும்? அவரைக் குறித்து எனக்குத் தெரியுமே, வெண்புறாவை போன்ற தூய்மையான அந்த ஆவியானவர் அசுத்தமான ஒன்றின்மேலும் அமர மாட்டாரே.

இவர்கள் இயேசுவோடிருந்தார்கள் என்பதற்காக இயேசுவாகிவிட முடியுமா? இயேசு பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் உற்பவித்தார், அவர் தேவனுடைய வித்து, அதலால் பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் தங்கியிருந்தது சாத்தியமாகியிருக்கக் கூடும். ஆனால் பிறக்கும்போதே அடிமைத்தனத்தில் பிறந்த இவர்களுக்குள் அது அது எப்படி சாத்தியம்? ஒருவேளை நியாதிபதிகள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் மேல் அமர்ந்து கிரியை செய்தது போல செய்வாராக இருக்கும்.”

பிசாசு இப்படி பலவாறாக சிந்தித்தபடி தனது எதிரிகளின் பாளயமாகிய மேல்வீட்டறையை வேவு பார்க்கக் கிளாம்பினான்.

அது ஒரு பெந்தேகோஸ்தே பண்டிகையின் நாள். மேல்வீட்டறையில் இயேசுவின் அப்பொஸ்தலரும் சீஷருமாக 120 பேர் கூடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். சாத்தான் தூரத்தில் நின்று அலட்சியமாக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது திடீரென இயேசுவின் இரத்தத் துளிகள் ஒவ்வொருவர்மீதும் விழுந்து அவர்களைக் கழுவத் தொடங்கியது. கழுவப்பட்ட மறுவினாடி அவர்கள் உள்ளான மனுஷன் சூரியனைப் போல பிரகாசிப்பதைக் கண்ட சாத்தான் அதிர்ந்தான்.

“இது என்ன விந்தை! பேதுருவும் யோவானும் இதற்க்கு முன்பு பாவமே செய்திராதவர்கள் போல பரிசுத்தராகி விட்டார்களே! இதோ! நான்  நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏதேன் தோட்டத்து மனிதனில் கண்ட அதே களங்கமற்ற இருதயம்!!! இது எப்படி சாத்தியம்????”

“இதோ ஒருகாலத்தில் ஊரை அடித்து உலையில் போட்ட வருமான வரித்துறை அதிகாரி மத்தேயு இவன் எப்ப்……?”

அவன் சிந்தனை முற்றுப் பெறுவதற்க்குள் மத்தேயுவுக்குள் சூரியப் பிரகாசம் வந்ந்து விட்டது.

அடுத்தடுத்து…

யாக்கோபு…

மரியாள்…

மாற்கு…

தோமா…

“இயேசுவுக்கு நெருக்கமான இவர்களெல்லாம் சரி மற்றவர்களெல்லாம் பாவத்திலேயே ஊறியவர்களல்லவா?”

”இவர் ஒருகாலத்தில் கொலைகாரனல்லவா?”

இரத்தம் அவனையும் கழுவியது.

”இவள் விபச்சாரத்தியே தொழிலாகக் கொண்டிருந்தவள் அல்லவா?…”

இரத்தம் அவளையும் கழுவியது.

இவன் லஞ்சம் வாங்கிக் கொழுத்தவனல்லவா?…”

இரத்தம் அவனையும் சுத்திகரிக்க, சில மணித் துளிகளுக்குள் 120 பேரும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பரிசுத்தவான்களானார்கள். பிசாசுக்கு ஒரே நேரத்தில் 120 இயேசுவைப் பார்ப்பதுபோல இருந்தது.

“ அவருடைய இரத்தத்துக்கு இவ்வளவு வல்லமையா? அவருடைய சந்ததியென்றால் அவரது இரத்ததால் கழுவப்பட்ட மக்களா???”

“ஓ! இதனால்தான் நாம் அவரை சிலுவையில் நார்நாராகக் கிழித்து கடைசி சொட்டு இரத்ததை எடுக்கும் வரையில் அமைதியாக இருந்தாரோ???”

புலிவாலைப் பிடித்த கதையாக தான் மோசம் போய்விட்டதை உணர்ந்தான்.

அடுத்த சில நொடிகளில் பலத்த காற்றடிக்கும் முழக்கம்போல வானத்திலிருந்து இறங்கி வந்த தேவாதி தேவனுடைய ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரவேசித்தார். ஒவ்வொருவரும் பல்வேறு பாஷைகளில் துதிக்கத் தொடங்கினார்கள்.(அப் 2:1-11)

சாத்தான் அதிர்ச்சியில் உறைந்துபோனான், ஆவியானவர் மண்ணான மனிதனுக்குள் பிரவேசித்ததை அவர் முதன்முறையாகக் கண்டான். இதுவரை மனிதருக்கு மேல் வந்துபோன ஆவியானவரைத்தான் கண்டிருந்தான் (நியா14:6, 1சாமு10:10). உள்வசிக்கும் ஆவியானவரைக் கண்டதில்லை.

இந்த 120 பேரையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என பிசாசு கணக்குப் போடுவதற்குள் 120 என்ற எண்ணிக்கை 3000 ஆனது (அப்2:41). வேடிக்கை பார்க்க வந்த கர்த்தரை அறியாத மக்கள் கூட பேதுருவின் செய்தி கேட்டு இரட்சிக்கப்பட்ட போதுதான் பிசாசுக்கு சிலுவையைக் குறித்த நற்செய்தியின் வல்லமை புரிந்தது.

எனக்கு அருமையனவர்களே!

சிலர் மீட்பைப் பெறுவதற்காக தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு துறவிகளாக அலைகிறார்கள். சிலர் வழிபாட்டுத் தலங்களுக்கும் புண்ணிய நதிகளுக்குமாக சுற்றுவதிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். சிலர் புனித வெள்ளியன்று தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து கொள்ளுகிறார்கள்.

ஆனால் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமோ மகா எளிதானது. ஆண் பெண் வேறுபாடின்றி தேச, இன, மத, மொழிப்பாகுபாடின்றி யாவருக்கும் பொருந்தக் கூடியது. ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமானால் அவன் செய்ய வேண்டியது என்ன?.

இரட்சிக்கப்படும் நிகழ்வு எங்கே ஆரம்பிக்கிறது?

ஒருவன் (ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்) இரட்சிக்கப்படும் நிகழ்வானது அவன் தான் பாவியாகவே பிறந்து இந்த பூமியில் பாவியாகவே வாழ்ந்து மரிக்கக் கூடிய நிர்பந்ததிலிருக்கும் ஒரு மனிதன் என்பதையும் (ரோமர் 3:10-23). தேவனோ நீதியுள்ள நியாயாதிபதியாக இருந்து பாவிகள்மீது நாள்தோறும் சினம்கொள்ளுகிறவர் (சங் 7:11) என்பதையும் அவர் பாவிகளுக்கென்று என்றன்றைக்கும் உள்ள நித்திய ஆக்கினையை வைத்து வைத்திருக்கிறார்(யோவா 5:29) என்பதையும் உணர்ந்து.

தானாகவே தன்னைப் பாவம் நீங்க சுத்திகரிக்க முடியாது என்பதையும், தனது நற்செயல்களோ மதமோ தேவனை திருப்திப்படுத்தாது எனவும் அவை யாவும் அவர் பார்வையில் அழுக்கான துர்நாற்றமடிக்கும் கந்தைகள் (ஏசா 64:6) என்பதையும் மனதார ஒப்புக்கொண்டு, தேவனிடத்தில் இரக்கத்துக்காக கதறுவதில் ஆரம்பிக்கிறது.

அது எத்திசை நோக்கிச் செல்ல வேண்டும்?

இரட்சிப்பை நோக்கிய பயணமானது இரக்கத்துக்காகக் கெஞ்சுவதோடு நின்றுவிட்டால் அந்த மனிதன் நிலை அந்தோ பரிதாபம்! ஆனால் அதற்கு அவசியமில்லை. நம்முடைய தேவன் எவ்வளவாக நீதியுளவரோ அவ்வளவாக அன்புள்ளவரும் கூட. அதற்காக தனது நீதியையோ செலுத்த வேண்டிய தண்டனையையோ சிறிதும் விட்டுக் கொடுக்காதவர். அவர் தனது ஒரே மகனை நம்மைப் போல பாவ மாம்சத்தின் சாயலாக பூமிக்கு அனுப்பி (ரோமர் 8:3) அவரையே சிலுவையில் பாவமாக்கி (2கொரி 5:21) தனது மொத்த கோபத்தையும் (wrath) கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அவர் மீது கொட்டித் தீர்த்தார். தனது பாவத்துக்காக ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய அத்தனை தண்டனைகளையும் மொத்தமாக இயேசு தாமே சுமந்து தீர்த்தார்(ஏசா 53:5).

இந்தச் சத்தியத்தை தனது பாவங்களுக்காக மனம் வருந்தும் அந்த மனிதன் தனது இருதயத்தில் ஆழமாக விசுவாசித்து தனது வாயால் தான் விசுவாசிப்பதை தைரியமாகவும் உறுதியாகவும் அறிக்கையிட வேண்டும் (ரோமர்10:9,10).

இப்படி நொறுங்கிய இருதயத்தோடும் இயேசுவின்பால் நம்பிக்கையோடும் கல்வாரிச் சிலுவையண்டை வந்து சாஷ்டாங்கமாய் விழும் எந்த ஒரு தாழ்மையுள்ள ஆத்துமாவையும் தேவன் புறம்பே தள்ளுவதில்லை (யோவா6:37). அந்த மனிதனின் சகல பாவங்களையும் அவர் தமது இரத்ததினால் கழுவி அவனை தமக்கே சொந்தமாக்கிக் கொள்ளுகிறார் (1கொரி 6:20, 7:23). ஆக இரட்சிப்பு ஒருவன் தன்னைத் தாழ்த்துவதில் ஆரம்பிக்கிறது.

மாறாக ”இயேசுவே என் உள்ளத்தில் வாரும்” என்ற மந்திர(!) ஜெபத்தை யாரோ சொல்ல அதைக் கிளிப்பிள்ளை போல சொல்லி இருந்திருப்பீர்கள் என்றாலோ அல்லது ஏதேனும் ஒரு தீர்மான அட்டையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பீர்கள் என்றாலோ நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம் அல்லவே அல்ல. தயவு செய்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். தேவ சமூகத்தில் உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அவர் பாதத்தில் உங்களை முழுவதுமாக ஊற்றி விடுங்கள்.

அது எங்கு முடிய வேண்டும்?

பாவமன்னிப்புப் பெற்ற மனிதனுக்குள் தான் விடுதலை பெற்றதின் பூரண நிச்சயம் பரிசுத்த ஆவியானவர் மூலமாகக் கிடைக்கிறது, தான் ஒரு புதிய படைப்பு என்று உணர்கிறான்(2கொரி 5:17). உலகத்தின் எந்த சந்தோஷத்தையும் விட இயேசுவே மேலானவராகவும், நிலையானவராகவும் அவனுக்கு இப்பொழுது காட்சியளிக்கிறார். அவன் முழு விருப்பத்தோடு தனக்காக வாழும் சாபக்கேடான வாழ்க்கையை விட்டுவிட்டு இயேசுவுக்காக வாழத் தொடங்குகிறான் (2கொரி5:15).

இயேசுவின் இரத்தத்தால் ஒருவன் கழுவப்பட்டவுடன் அவனைப் பரிசுத்த ஆவியானவர் நிரப்புகிறார். இரத்தத்தால் சுத்திகரிக்கப்படாமல் ஒருவனுக்குள் ஆவியானவர் வந்து வாசம் பண்ணுவது சாத்தியம் அல்ல. எனவேதான் பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்களை இயேசுவின் இரத்தம் கழுவியதாக எழுதியிருக்கிறேன், இது வேதத்தில் பதிவு செய்யப் படாவிட்டாலும் அவர்கள் ஆவியின் நிறைவைப் பெறுமுன்னர் நிச்சயம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும்.

கர்த்தரே அந்த ஆவியானவராக இருக்கிறபடியால் ஆவியின் நிறைவைப் பெற்ற ஒரு மனிதனுக்குள் கர்த்தரே வந்து விடுகிறார். ஆவியானவரால் அவன் உலகம் முழுவதையும் கலக்குவதற்கான ஆவிக்குரிய பெலனை தன்னுள் பெறுகிறான் (அப் 1:8, 17:6) இந்த பெலத்தினால்தான் ஒருகாலத்தில் பூனையைப் போல பயந்து கொண்டு இயேசுவை மறுதலித்த பேதுரு “ஜீவாதிபதியை நீங்களே கொலை செய்தீர்கள்” என்று புலியைப் போல சீறினான்.

ஆவியின் நிறைவைப் பெற்ற ஒருவனுக்கு ஆவியின் வரங்களும் கனிகளும் அள்ளி வழங்கப் படுகின்றன. ஆவிக்குரிய யுத்தத்துக்கென்று தேவனுடைய சர்வாயுத வர்க்கம் தரிப்பிக்கப்படுகிறது (எபே 6:11-17)

எல்லாவற்றிற்கும் மேல் அவன் “கர்த்தருடைய மகன்” என்னும் கிடைத்தற்கரிய உன்னதமான சிலாக்கியத்தைப் பெறுகிறான்(யோவான் 1:12,13, ரோமர் 8:15, கலா 4:6)

இவனுக்குள் இப்பொழுது தேவனுடைய வித்து தரித்திருக்கிறபடியால் முன்பு போல உலகத்தின் பாவங்களால் தோற்கடிக்கப் படாமல் இப்பொழுது அவைகளைத் தோற்கடிக்கும் வெற்றி வீரனாக மாறுகிறான் (1யோவா 3:9). இவன் இப்பொழுது கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் இனி எந்தப் பாவமும் இவனை மேற்கொள்ள மாட்டாது (ரோமர் 6:14) ஏனனில் இனி அவன் மாம்சத்தின்படி பிழைக்க மாம்சத்துக்குக் கடனாளி அல்ல.(ரோமர்8:12)

ஆதாம் இழந்த ஆளுகையும், அதிகாரமும் இயேசுவின் மூலம் அவனுக்கு திரும்பக் கிடைக்கிறது.

எப்படி தேவன் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்குமோ, அப்படியே அவரது மகனான இவனும் கிறிஸ்துவின் சிந்தையோடு (அதாவது சுயநலமில்லாமல்) இயேசுவின் நாமத்தைக் கொண்டு சொல்ல ஆகும், கட்டளையிட நின்றே தீரும். இவன் கட்டினது கட்டினதுதான், விடுவித்தத்து விடுவித்ததுதான். (மத் 18:18)

தேவதூதர்கள் இவனுக்கு பணிவிடைக்காரர்கள் (எபி 1:14).

இவனது நிரந்தர முகவரி (permenant Address) பரலோகம் (பிலி 3:20).

துதி, கனம், மகிமை தவிர தேவனுக்குரியதெல்லாம் இவனுக்குரியது (லூக்கா 15:31).

இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுவுக்கு இவன் செல்லத் தம்பி (ரோமர் 8:29).

இவன் சரீரம் நேற்றுவரை வெறும் மண்பாண்டம். இன்று மகிமையின் இராஜாவுடைய ஆலயம். (1கொரி 6:19).

தமது சித்தப்படி இவன் எதைக் கேட்டாலும் தேவன் இல்லையென்று மறுக்க மாட்டார் (ரோமர் 8:32, யோவா 14:14).

இவனுக்காக வக்காலத்து வாங்கும் வக்கீல் இயேசு கிறிஸ்து (1 யோவா 2:1)

ஆபிரகாமின் ஆசீர்வாதங்களுக்கெல்லாம் இவன் சட்டபூர்வமான வாரீசு (கலா 3:29).

இவன் மீது ஒரு துரும்பு பட்டால்கூட பரலோகமே பஞ்சாயத்துக்கு வந்துவிடும். (சகரியா 2:8).

இவன் கையைத் தூக்கி “இயேசுவின் நாமத்தில்….” என்று ஆரம்பித்தால் நடுநடுங்கிப் பணியவேண்டியது பிசாசின் தலையெழுத்து (லூக்கா 10:19)

பிரியமானவர்களே! இரட்சிக்கப்பட்ட இவன்தான் தேவனுடைய வித்து, இயேசுவின் வாரீசு, உலகத்தை ஜெயிப்பவன் உலகத்துக்கு உப்பானவன், வெளிச்சமானவன் இன்னும் இவனது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்தகார இருளின் பாவச்சேற்றில் பன்றி போல உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு இப்படிப்பட்ட ஆச்சரியமான ராஜ வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் அவன் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் இயேசு என்னும் வாசல் வழியாகப் பிரவேசிக்க வேண்டியது மாத்திரமே (யோவான்10:9)

இது தேவதூதர்களில் பிரதானமானவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம், தேவனொடு சஞ்சரித்த ஏனோக்குக்கு, தேவனுடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுக்கு, கர்த்தரோடு முகமுகமாகப் பேசிய மோசேக்கு, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரனுமாகிய எலியாவுக்கு, தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற தாவீதுக்கு, பிரியமான புருஷனான தானியேலுக்கு, ஸ்திரீகளின் வயிற்றில் பிறந்தவர்களிலேயே சிறந்தவனான யோவான் ஸ்நானகனுக்கு……..etc,etc,….

இவர்களுக்கெல்லாம் கூட கிடைக்காத மாபெரும் பாக்கியம் (1பேதுரு 1:10-12)

கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டுஜனமே பாக்கியமுள்ளது என்றால் (சங் 144:15) அந்தக் கர்த்தரைத் தனது தகப்பனாகக் கொண்டிருக்கிற புதிய ஏற்பாட்டு ஜனம் எவ்வளவு மேன்மையுள்ளது!!!

தேவனுடைய வித்து தன் அதிகாரத்தைச் செலுத்தத் துவங்கியவுடன் எருசலேம் நகர் முழுவதும் அனல் பறந்தது. நகரில் இரண்டு பேர் கூடினால் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டார்கள் (அப் 2:43). அற்புதங்களும், அதிசயங்களும் சரமாரியாக நடக்கத் துவங்க அப்போஸ்தலரும், சீஷரும் எருசலேம் நகரின் VVIP அந்தஸ்து பெற்றார்கள். கொர்நெலியு போன்ற பல முக்கியப் பிரமுகர்கள்கூட இவர்களது appointment-க்காக ஆவலோடு காத்திருக்க வேண்டியதிருந்தது.

தேவனுடைய வித்து என்கிற மேன்மையான அந்தஸ்தை எத்தனை கோடி கொடுத்தேனும் குறுக்கு வழியிலாவது பெற்றுவிட வேண்டும் என்றுகூட சிலர் முன்வந்தார்கள். பேதுரு அவர்களைக் கண்டித்து ‘இது கடைச்சரக்கு அல்ல’ என்று எச்சரித்து அனுப்பி வைத்தான் (அப் 8:18-24).

இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு தேவன் “சபை” என் பெயரிட்டார். இது மூல மொழியில் “எக்ளீஷியா” என்று வழங்கப் படுகிறது. இதற்கு “சிறப்பான நோக்கத்திற்காகப் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் அல்லது வேறுபிரிக்கப் பட்டவர்கள் என்று பொருளாகும்.

பாரம்பரியத்தில் ஊறிப்போன பரிசேயர்களும், வேதபாரகர்களும் சபையின் அசுரவளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் பல தூங்கா இரவுகளைக் கழிக்க வேண்டியிருந்தது.

நரகத்திலோ அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது போல ஏக டென்ஷன்!

சபையால் துரத்திவிடப்பட்ட அசுத்த ஆவிகள் பாதாளத்துக்கு சாரிசாரியாகத் திரும்பிய வண்ணம் இருந்தன. லூசிபர் கோபத்தோடு அவை ஒவ்வொன்றையும் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“நீ எங்கிருந்து வந்தாய்?”

“சமாரியாவிலிருந்து”

”உன்னைத் துரத்தியது யார்?”

”பிலிப்பு என்பவன்”. (அப் 8:7)

இன்னொரு அசுத்த ஆவியை நோக்கி “நீ எங்கிருந்து வந்தாய்?”

“எருசலேமிலிருந்து”

உன்னைத் துரத்தியது யார்?”

அந்த அசுத்த ஆவியின் பதிலைக் கேட்டு சாத்தான் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டான். அந்த அசுத்த ஆவி சொன்ன பதில்:

”பேதுருவின் நிழல்” (அப் 5:15)

பூமியில் இரட்சிக்கப்பட்டவர்கள் சென்ற இடமெல்லாம் எழுப்புதல் தீ பற்றிக் கொண்டது. தேவனுடைய வித்து இவ்வளவு விரைவாகப் பலுகிப் பெருகும் என்று நரகம் எதிர் பார்க்கவே இல்லை. அப்பொஸ்தலர்கள் ஆளுகையைத் தொடங்கி விட்டார்கள். பேதுரு சூப்பர்ஸ்டாராகி விட்டான். நேற்றுவரை சபையைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுல் இன்று பவுலாக மாறி சுவிசேஷப் பட்டயம் ஏந்தி இயேசுவின் போர்வீரனாகி விட்டான். நரகம் போட்ட அடக்குமுறைச் சட்டங்களையெல்லாம் சபை தனது ”வீட்டோ” அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்து விட்டது. ரோம அரசாங்கத்தையும், யூதத் தலைவர்களையும் பயன்படுத்தி சபையை அழிக்க பிசாசு செய்த முயற்சிகள் யாவும் தவிடுபொடியானது. வெறும் சரீரத்தை மாத்திரமே கொல்ல வல்லவனைக் கண்டு கிஞ்சித்தேனும் அஞ்சிடாமல் சபை முன்னேறி “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” என்று நிரூபித்தது.

தெசலோனிக்கே நகரில் விசுவாசிகளைப் பார்த்து “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள்” (அப் 17:6) என்று மக்கள் கூக்குரலிட்டனர்.

அன்பனவர்களே! எண்ணிக்கையில் வெறும் ஆயிரங்களாய் இருந்தபோதே அகிலத்தையும் ஆட்டி வைத்த சபை, இன்று பில்லியன்களாய்ப் பெருகிவிட்டபின் மில்லியன் மடங்கு கலக்க வேண்டுமல்லவா?

ஏன் இல்லை????????

களங்கமில்லாத பாலாக இருந்த பிள்ளைகளின் ஐக்கியத்தில் அணுஅணுவாக ஆலகால விஷம் கலந்த வரலாற்றை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

(தொடரும்)

0 thoughts on “3. உலகத்தைக் கலக்கிய எழுப்புதல்”

 1. Dear Bro. praise the Lord. Really a Nice Explanation Lord our God Bless you.

  I have some doubt about the below word.

  “சபையால் துரத்திவிடப்பட்ட அசுத்த ஆவிகள் பாதாளத்துக்கு சாரிசாரியாகத் திரும்பிய வண்ணம் இருந்தன.”

  Because Jesus said in Mathew 12: 43-45. As per the Word the Evil Spirit can not go to Hell.

  Reason as per Rev 1:18 I am he that liveth, and was dead; and, behold, I am alive for evermore, Amen; and have the keys of hell and of death.

  As per this word JESUS has the Keys of Hell and Death.

  And as per Luke 8:31. Jesus has not sent a Evil Spirit to Hell. Because Evil has few more years to do their work in Earth. Once Lord our God comes form Heaven then he will judge all and sent to hell.

  As per Rev 19 & 20 Lord our God the Judge will give the Judgement to all Evils.

  Please explain if i am wrong.

  Praise the Lord.
  Note: If any grammatical errors in English; my apologies.

  1. அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் கமெண்டுக்கு நன்றி! இது எனது ஆரம்ப காலக் கட்டுரைகளில் ஒன்று (சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது) இது சாத்தானின் தோல்வியை சுட்டிக்காட்டும் ஒரு வருணனை அவ்வளவே! பாதாளம், நரகம், ஹடீஸ், ஷியோல் என்று பல பெயர்களில் இவற்றை வேறுபடுத்தி இறையிலாளர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இதை ஒரு வருணனையாக மட்டும் பாருங்கள். இயேசு வந்தார், வென்றார், சாத்தானும் அவன் சேனைகளும் மண்ணைக் கவ்வினார்கள், சபையின் கை ஓங்கியது இது மாத்திரமே நான் சொல்ல விழைந்தது. ஆழமான இறையியல் விளக்கங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

   1. Dear Bro. Thanks for replying. I came to know about your site just 10 days back. So started reading few articles.

    “இயேசு வந்தார், வென்றார், சாத்தானும் அவன் சேனைகளும் மண்ணைக் கவ்வினார்கள், சபையின் கை ஓங்கியது இது மாத்திரமே நான் சொல்ல விழைந்தது. ”

    I really like this Quote.

    Praise the Lord. I am requesting you to explain the topics little deep. So that the people will learn more about our father. and they will come to cross closer. Because your understanding of scripture is nice.

    Thanks.

    Praise the Lord.

 2. Dear Brother,

  I’ve just started to follow your articles for the past 1month. I really thank God that he working through you. I could feel the fire in your heart which burns for the Lord. Though you are humbling yourself telling that it is equvilant to a candlestick’s flame, my prayer and desire is that it should just lit many wood that it should turn into wildfire. Let all the unwanted things be burnt in that fire..

  My sincere prayer is that, as how the Lord kept all those who didn’t bow their heads to Baal so should he keep u under his wings and pinions and keep u safe from all the schemes of our enemy. God bless you!

  Eagerly waiting for the next part…

Leave a Reply