2.ஒரு சதுரங்கப் போட்டி

(இது ”தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” தொடரின் இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

 

சாத்தானுக்குத் தூக்கி வாரிப் போட்டது “ஸ்திரீயின் வித்தா? அது யாராக இருக்கும்???”

வித்து என்பது ஒருவர் மாத்திரமல்ல, அந்த ஒருவரிலிருந்து பிறக்கப் போகும் ஒரு கூட்ட ஜனம். அந்த ஒருவர் என் தலையை நசுக்கக் கூடுமானால் அவர் தன்னைப் போலவே பிறப்பிக்கும் அவருடைய சந்ததியுமல்லவா என் தலையை நசுக்கும்? அந்த சந்ததி பூமியில் பலுகிப் பெருகினால்??”

தேவன் பூமியை சீர்படுத்தும்போது கவனித்துக் கொண்டிருந்தபடியால் வித்து என்பது தன்னைப் போலவே பலவற்றைப் பிறப்பிக்கும், பலுகிப் பெருகும் (ஆதி 1:11,12) என்பது சாத்தானுக்கு தெரியும்.

கர்த்தர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் தனது மகிழ்ச்சியெல்லாம் பறந்து போக மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தயாரானான்…அவனது சிற்றறிவுக்கு அந்த வித்து இயேசு கிறிஸ்து என்பதும் அவரது சந்ததி என்பது அவர் தமது இரத்தத்தின் கிரயத்தினாலே சம்பாதித்த பிள்ளைகளின் ஐக்கியமாகிய சபையும்தான் (யோவான் 1:12,13) என்பது அப்பொழுது தெரியாது. அவன் மாம்சக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான், ஆனால் தேவன் போட்டதோ ஆவிக்குரிய கணக்கு.

அப்பொழுது பூமியிலிருந்த ஒரே பெண் ஏவாள்தான். அவள் மூலமாகவே அந்த வித்து பிறக்க முடியும் என்பதால் சாத்தானின் கவனம் ஏவாள் மீது திரும்பியது.

”ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. (ஆதி 4:1-5)

ஸ்திரீயின் வித்தை விழுங்க வெறிகொண்டு சுற்றித் திரிந்த சாத்தானின் கழுகுக் கண்களில் ஆபேல் சிக்கினான். இவன் தேவனுக்குப் பிரியமாய் இருக்கிறபடியால் இவனே அந்த ‘வித்தாக’ இருக்கக்கூடும் என தீர்மானித்து அவனை அழிக்கத் தீர்மானித்தான். அதற்கு அவன் கையில் எடுத்த ஆயுதம் அவன் சகோதரனாகிய காயீன்.

காயீன் தேவனது இருதயத்துக்கு தூரமானவனாக வாழ்ந்தபடியால் சாத்தான் அவனை நேசித்து அவனது வீட்டு வாசற்படியிலேயே படுத்திருந்தான் (ஆதி 4:7). காயீனுக்கு கொலை செய்வது எப்படி என்று கற்றுத்தந்தான். அவனது திட்டம் மீண்டும் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. விரைவிலேயே ஆபேல் காயீனின் கரங்களில் பலியானான்.

ஸ்திரீயின் வித்து அழிந்தான் என்று சாத்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

”பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.”

சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள். (ஆதி 4:25)

இப்போது சாத்தானுக்கு ”சேத்” என்னும் புதிய தலைவலி வந்துவிட்டான். ஆனால் சேத்தின் மகனாகிய ஏனோசின் காலத்தில். மனிதர்கள் தன்னைத் தானே சீரழித்துக் கொண்டார்கள்.

ஏனோஸ் என்பதற்கு “குணமாக்கப்பட முடியாத நோயாளி” என்பது பொருளாகும். அவனது காலத்தில் முழு மனுவர்க்கமும் அப்படியே இருந்தது. அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள் என்று எழுதப்பட்டிருப்பது மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறு என்றும் ”அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தூஷிக்க ஆரம்பித்தார்கள்” என்பதே சரியான மொழிபெயர்ப்பு என்றும் கருதப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் சாத்தானுக்கு சாதகமாக இன்னொரு சம்பவம் நடக்கிறது.

”மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” (ஆதி 5:1,2,4)

இங்கு தேவகுமாரர்கள் என்பது பரலோகத்திலிருந்து வந்த இன்னொரு கூட்ட தேவதூதர்களைக் குறிக்கும். இவர்கள் சாத்தானோடு வந்தவர்கள் அல்ல. சாத்தானோடு வந்த தூதர்கள் இப்பொழுது கட்டிவைக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால் தீர்ப்பு நாள் வரை இவர்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக யூதா 6,7 வசனங்கள் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் இவர்கள் பிசாசின் கூட்டமல்ல என்பது விளங்குகிறது. எனினும் இதில் பல மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப் பட்டு வருவதால் இதற்குள் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படிப்பட்ட கள்ள உறவின் காரணமாக பூமியில் ராட்சதர்கள்(Nephilims) பிறந்தார்கள் என்று வேதம் கூறுகிறது.

இந்த அக்கிரமங்களையெல்லாம் கண்டு பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக தேவன் மனஸ்தாபப் பட்டார் (ஆதி 6:6) மனுக்குலத்தை அழிக்கும் முடிவுக்கு தேவன் வருகிறார். அதே நேரத்தில் ஏதேன் தோட்டத்தில்” ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்குவார்” என்று சாத்தானுக்கு விட்ட தனது சவாலை வாபஸ் வாங்குவதற்க்கு தேவன் கையாலாகாதவர் அல்ல, தனது சவாலைக் காக்க பூமியில் ஒரு குடும்பத்தைத் தேடினார்.

ஆதியாகமம் 6:8 “ நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”

கர்த்தர் நோவாவையும் அவன் குடும்பத்தை மாத்திரம் காப்பாற்றி ஏனைய மனிதர்களையும் மிருகங்களையும் ஜலப் பிரளயத்தால் நிக்கிரகம் செய்தபின், பேழைக்குள்ளிருக்கும் நோவாவையும் அவன் குடும்பத்தையும் வெளியே அழைத்து கொடுத்த முதல் ஆசீர்வாதம் “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்”(ஆதி 9:1) என்பதுதான்.

பூமியில் நோவாவின் குடும்பத்தின் மூலம் மனிதர்கள் மீண்டும் பெருகத் துவங்குகிறார்கள். சாத்தானோ அவர்களுக்குள்ளே பெண்ணின் வித்தைத் தேடும் வேலையில் பிஸி ஆகிறான்.

பூமியில் தேவனோடு ஐக்கியம் கொள்ளும் மனிதன் யார் என்று உளவு பார்க்கிறான்.

இதோ ஆபிரகாம்!…

ஆதியாகமம் 12:1-3 இல்… பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்  என்று கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்க சாத்தானுடைய மூளையில் பொறி தட்டுகிறது.

”நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ” என்ற ஆண்டவருடைய குரலுக்குக் கீழ்ப்படிந்து பரிவாரங்களோடு புறப்பட்ட ஆபிரகாமை பிசாசு பின்தொடருகிறான்.

பின்பு ஈசாக்கு, யாக்கோபு… என்று ஆபிரகாமின் சந்ததியோடு சாத்தானின் பயணமும் தொடர்கிறது. பிசாசு ஸ்திரீயின் வித்தைக் கண்டுபிடித்து அழிக்க முயல்வதும் தேவன் அதை அவன் கண்களுக்கு மறைத்து காப்பாற்றிக் கொண்டே வருவதுமான இந்த சதுரங்கப் போட்டி நாலாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டு வந்தது. சாத்தான் ஒரு காயை நகர்த்த தேவனும் சாமர்த்தியமாக ஒரு காயை நகர்த்துவார். தேவனுடைய அனந்த ஞானத்துக்கு முன்பாக சத்தானின் நரித்தந்திரம் ஒவ்வொரு முறையும் படுதோல்வி அடைந்தது.

சாத்தான் ஒன்று ஸ்திரீயின் வித்தைக் கண்டுபிடித்து அழிக்க முயலுவான். அல்லது அந்த பரிசுத்த வித்துடன் அசுத்தமானதைக் கலப்படம் செய்து அதைக் தீட்டுப்படுத்த முயற்சிப்பான். அழிக்கும் முயற்சியில் அவன் எப்போதும் தோல்வி அடைவது வாடிக்கை ஏனனில் இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை. தேவன் நியமித்த நாள்வரை சாத்தானால் ஸ்திரீயின் வித்தை நெருங்கக் கூட முடியவில்லை.

சாத்தான் நசுக்க நசுக்க தேவனுடைய வித்து பெருகிக் கொண்டே தானிருக்கும். அதனால்தான் நமது பழைய தமிழக முதல்வர் இராஜாஜி கூட கிறிஸ்தவன் மூட்டைப் பூச்சி ஜாதி அவன் நசுக்க நசுக்க பெருகுவான் என்று சொன்னார்.

ஆனால் அவனது கலப்படத் தந்திரம் அவனுக்கு எப்போதும் ஒரு நல்ல பலனையே கொடுத்து வந்திருக்கிறது. அவனால் ஸ்திரீயின் வித்தை அழிக்க முடியாவிட்டாலும் இந்தத் தந்திரத்தின் மூலம் தேவ ஜனத்துக்கு பெருமளவு சேதத்தை வரலாற்றில் விளைவித்து இருக்கிறான். அதற்க்கு முழு முதற்காரணம். தேவ ஜனம் அந்தக் கலப்பட மாயத்தில் வீழ்ந்து போனதே.

 பின்வரும்  பகுதிகளை வேதத்தில் வாசித்துப் பாருங்கள்:

யாத்திராகமம்1: இஸ்ரவேலின் ஆண் குழந்தைகளை ஒட்டு மொத்தமாக அழிக்க முயற்சி

எண்ணாகமம்25: இஸ்ரவேலரின் வித்துடன் சபிக்கப்பட்ட மோவாபியரின் வித்தைக் கலந்து    தீட்டுப்படுத்தும் முயற்சி.

இடைப்பட்ட காலத்தில் ஸ்திரீயின் வித்து யூதா குலத்தில் தோன்றுவார் என்று தீர்க்கதரிசிகள் மூலமாக அறிந்து கொண்ட பின், பிசாசு இஸ்ரவேலரை விட்டு விட்டு யூதா வம்சத்தை Zoom பண்ணுகிறான்.

எஸ்தர் புத்தகம்: யூத குலத்தை பூண்டோடு அழிக்க முயற்சி

மத்தேயு2: இயேசு பிறந்ததைக் கேள்விப்பட்டதும் பெத்தலகேமிலுள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்குழந்தைகள் அனைத்தையும் அழித்தல்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஸ்திரீயின் வித்தைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு ஏசாயா, மீகா போன்ற தீர்க்கர்களின் வாக்குகள் மூலம் சில ’க்ளூ’க்கள் கிடைக்கின்றன.

  1. அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் அவர் நாமம் இம்மானுவேல் (ஏசாயா 7:14)
  2. யூதா குலத்தில் பிறப்பார் (மீகா 5:2)
  3. தாவீதின் பரம்பரையில் பிறப்பார் (ஏசாயா 11:1)
  4. அவர் தேவனுடைய குமாரன் (ஏசாயா 9:6)

ஸ்திரீயின் வித்து என்பவர் தேவனுடைய வித்து என்ற இரகசியம் அவனுக்கு விளங்குகிறது. மேலும் அவர் யூத குலத்தில் தாவீதின் வம்சத்திலிருந்துதான் பிறப்பார் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுகிறார்.

இதனால் தாவீதின் குடும்பம் அனைத்தையும் மோசம் போக்கி சிங்காசனத்தையும் அவன் குடும்பத்தை விட்டுப் பிடுங்கிய பிசாசு அரசாண்ட பரம்பரையை ஆசாரி வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டான்.

ஆனால் இன்னும் ஜீவனோடிருந்த ஈசாயின் அடிமரத்தையோ அவன் கவனிக்கவில்லை. அதை ஏற்ற காலத்தில் தேவன் துளிர்க்கச் செய்தார்.

தேவனின் ஞானம் சத்துருவின் தந்திரக் கண்களைக் குருடாக்குகிறது. மரவேலை பார்க்கும் தச்சன் குடும்பந்தானே என்று வாளாவிருந்துவிட்டான் போலும், ஆனால் அந்தத் தச்சன் வீட்டுப் பிள்ளைதான் மரச்சிலுவையில் தனது அரசாங்கத்துக்கே ஆணி அடிக்கப் போகிறார் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலம் முழுவதும் தேவனுடைய வித்தைத் தேடித் தேடி ஓய்ந்து போன சாத்தானுக்கு ஒரு நானூறு ஆண்டுகால ஓய்வு கிடைக்கிறது.

நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு…

ஒரு குளுமையான இரவுப் பொழுதில் “உன்னதத்தில் மகிமை” என்ற தேவதூதர்களின் தேமதுரகானம் கேட்டு நரகத்தின் அபாயச்சங்கு ஓங்கி ஒலிக்க, நானூறு ஆண்டுகால நிம்மதி கலைந்து எழுந்தான் நரகவேந்தன், கண்கள் சிவக்கக் கேட்டான்…

“எங்கே அவர்???”…

இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஏரோது ராஜாவின் அரண்மனைக் கதவைத் தட்ட முழு பாதாள சேனையும் ஏரோதின் மாளிகையைச் சுற்றி பாளயமிறங்கியது. ஞானிகளை வழிநடத்திக் கொண்டு வந்த நட்சத்திரமோ பெத்தலகேமின் ஒரு மாட்டுத் தொழுவத்தின் மேல் நின்றது.

தொழுவத்தின் மேல் வழிகாட்டும் நட்சத்திரம், தொழுவத்தினுள் தாவீதின் நட்சத்திரம்.

இதற்குள் சாத்தான் ஏரோதுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு  ஆண் குழந்தைகளையெல்லாம்  துவம்சம் செய்யத் துவங்க, தேவனோ தன் மகவை தமது செட்டைகளின் மறைவிலே வைத்துப் பாதுகாத்தார்.

இயேசுவுக்கு 30 வயதானதும் தேவன் தனது வித்தாகிய தன் மகனை பூமிக்கு அறிமுகம் செய்து வைக்கும் விழாவை யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானகன் தலைமையில் நடத்துகிறார். இயேசுவை யோவான் ஸ்நானகன் முன்மொழிய (மத்தேயு 3:11,12) தேவன் வானத்தைத் திறந்து வழிமொழிந்தார் (மத்தேயு 3:16,17)

சாத்தான் ஸ்திரீயின் வித்து என்று ஏற்கனவே பலரை எண்ணி எண்ணி ஏமாந்த படியால் இயேசுவை ஸ்திரீயின் வித்து என்று முழுமையாக அவனால் நம்ப முடியவில்லை. எனவே இயேசுவை தானே சோதித்துப் பார்க்க தேவனிடம் அனுமதி கோருகிறான்.

சாத்தான் இயேசுவுக்கு வைத்த சோதனைகளில் மூன்றில் இரண்டு அவர் தேவனுடைய வித்துதானா? என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவன் கேட்டதாகவே இருந்தது.

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால்(தேவனுடைய வித்தேயானால்), இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். (மத்தேயு 4:3)

நீர் தேவனுடைய குமாரனேயானால் (தேவனுடைய வித்தேயானால்) தாழக்குதியும்; (மத்தேயு 4:6)

இயேசுதான் தேவனுடைய வித்து என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் அவரைக் கொல்லும்படி அவன் அவரைச் சுற்றிச் சுற்றி வந்ததை நான்கு நற்செய்தி நூல்களிலும் காணலாம்.

தனது நேரம் வந்ததும் இயேசு தானே முன்வந்து தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். இதுதான் தருணம் என்று முழு பாதாள சேனையும் ஒண்டியாய் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த தேவனுடைய வித்தின் மேல் பாய்ந்தது. ஆனால் யூத ராஜ சிங்கம் திருப்பிக் கொண்டு பாய்ந்து “அவனது துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, அவன் விஷப்பல்லைப் பிடுங்கி அவனை நிராயுத பாணியாகவும் நிர்வாணியாகவும் ஓடவிட்ட பொழுதுதான் (கொலொ2:15) தான் தோற்றுப் போனதையும் ஆதியாகமம் 3:15 நிறைவேறி விட்டதையும் உணர்ந்தான்.

பரலோகத்தில் எக்காளம் தொனிக்க ஜெயக்கொடி ஏற்றப்பட்டது. நரகத்துக்கோ சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

தான் தோற்றுப் போனது தோற்றுப் போனதுதான். ஸ்திரீயின் வித்து தன் தலையை நசுக்கினது நசுக்கினதுதான்.

ஆனால்…

“இனி அவர் பிறப்பிக்கப் போகும் ஜனம்???…”

(தொடரும்…)

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Leave a Reply