1.ஒரு ஃப்ளாஷ்பேக்

மீட்கப்பட்டவர்களே! இந்தத் தொடரின் ஆரம்பமாக நமது பெருமைக்குரிய குடும்பத்தின் கடந்த கால வரலாற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று உணர்கிறேன். நான் குடும்பம் என்று குறிப்பிட்டது உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் பெயரெழுதப்பட்ட குடும்பத்தை அல்ல. பரலோகப் புத்தகத்தில் பெயரெழுதப்பட்ட (எபி 12:23) சர்வசங்கமாகிய சபை என்னும் பெரிய்ய்ய்ய்ய….. குடும்பத்தைப் பற்றியே இங்கே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏன் நமது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கவேண்டும்? நாம் நமது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொண்டுள்ள அறிவும், நிகழ்காலத்தில் கற்றுக் கொள்ளும் பாடங்களுமே நமது எதிர்காலத்தை வென்றெடுக்க நமக்கு உதவும். இந்த வரலாற்றில் பல நாம் ஏற்கனவே அறிந்தவைதான். ஏற்கனவே தெரிந்த கதைதானே என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டுப் போய்விடாதீர்கள். நீங்கள் தொலைத்துவிட்டு பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் சாவியை ஒருவேளை நீங்கள் இங்கு கண்டெடுக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா? நமக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த சங்கீதம் 23 ஐ இப்போது தியானித்தாலும் அதில் மறைந்துள்ள புதுப்புது புதையல்களைக் கண்டுபிடிக்கலாம். எனவே,  இத்தொடரின் கடைசி வரை என்னோடு பொறுமையாக நடந்து வரும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நமது குடும்ப வரலாற்றைப் புரட்டிப் பார்க்க உங்களை சில ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன் வாருங்கள்….

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதி 1:1,2)

மேலே தரப்பட்டுள்ள இரண்டு வசனங்களுக்கும் இடையே இருந்த காலம் சில அல்லது பல மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டு உள்ளனர்.

கடவுள் அழகாகவும் ஒழுங்காகவும் படைத்த பூமிக்கு ஒழுங்கின்மையும் வெறுமையும் எப்படி வந்தது?

பரலோகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட துரோகக் கூட்டமொன்று பூமியில் வந்து விழுந்தது, அந்தக் கூட்டத்தின் தலைவன் ”சாத்தான்” (ஏசாயா 14: 12-17) இவன் ஒரு காலத்தில் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு அல்லும் பகலும் அவரது சமூகத்தில் நின்று அவரை ஆராதிக்கும் பாக்கியம் பெற்றவன். தனது அழகின் மினுக்கினால் அகங்காரம் கொண்டு (அழகாய் இருப்பவர்களே! எச்சரிக்கை!!) ஒரு கூட்ட தேவதூதர்களை தன்னோடு சேர்த்துக் கொண்டு தேவனுக்கு எதிராக ஒரு கலகத்தை எழுப்புகிறான். அவனது இலக்கு உன்னதமானவரின் சிங்காசனம்.

சிங்காசனத்துக்கு உரியவர் உதைத்துத் தள்ள தனது அடிப்பொடிகளோடு பூமியில் வந்து விழுந்தான் (எசே28:12-19). இதன் விளைவே ஆதியாகமம் முதல் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் நாம் காணும் ஒழுங்கின்மையும் வெறுமையும் ஆகும்.

முந்தின நித்தியத்தின் ஒழுங்கின்மையையும் வெறுமையையும் எதனோடு ஒப்பிட்டு தங்களுக்கு விளக்குவது என எனக்கு புரியவில்லை. ஆ!…. கிடைத்து விட்டது ஒரு அற்புதமான உதாரணம். இயேசுவை ஏற்றுக்கொள்ளும் முன் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படியே அந்நாளின் பூமி இருந்தது.

இருளும், வெறுமையும், நிசப்தமும் பூமியின்மேல் கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருக்க பூமியின் பரிதாப நிலை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

எதுவரை ஆண்டவரே?…

பூமிக்கு வாயிருந்தால் தனது சிருஷ்டிகரை நோக்கி கதறியிருக்கும்.

சர்வவல்லவர் கவனியாரோ? பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்கக் கூடுமோ?

ஆனால் பூமிக்கு ஒரு நம்பிக்கையுண்டு தேவ ஆவியானவர் இன்னும் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருக்கிறார் அல்லவா? (ஆதி 1:2)

ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு சமயமுண்டு (பிரசங்கி 3:1)

திடீரென ஒரு நாள்……

அண்டத்தின் அமைதியைக் கிழிக்கும் பேரிடி முழக்கமொன்று…

வெளிச்சம் உண்டாகக் கடவது…

பிரபஞ்சத்தின் முடிவில்லா திசைகளெங்கும் எதிரொலித்த அந்தப் பேரொலி அடங்குவதற்க்குள் வெளிச்சக் கதிர்கள் வெள்ளமென பூமியில் வந்து விழுந்தன. தண்ணீரால் சூழப்பட்டிருந்த பூமிக்கோளம் அவ்வெளிச்சம் பட்டு வெள்ளிப் பந்தென மின்னியது.

யுகா யுகங்களாக ஜெகத்தைக் கவ்விக் கொண்டிருந்த இருள் ஒரே ஒரு சிம்ம கர்ஜனைக்கு நடுங்கி விடை பெற்று விலக, இருளின் அதிபதியோ சருவலோக எஜமானரின் எதிர்பாராத அதிரடி நடவடிக்கையால் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்தான். நடுக்கத்தில் அவனது முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

”அவர் ஆரம்பித்து விட்டார்; ஏதோ ஒன்றை புதிதாகச் செய்ய ஆரம்பித்து விட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம்…”

பூமியில் விழுந்த வெளிச்ச மின்னல் அவன் தலையில் இடியாக இறங்க உறைந்து போய் நின்றான்.

பூமிக்குக் கிடைத்த அதே அனுபவம் இரட்சிக்கப்படும் நாளில் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. வார்த்தையாகிய இயேசு நம்முள் பிரவேசித்ததும், அந்தகார இருள் விலகி ஆச்சரியமான ஒளி பிரகாசிக்கிறதல்லவா?

வெளிச்சத்தை பூமிக்கு அனுப்பியதோடு தேவன் நின்று விடவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு புதுமைகளைப் படைக்க ஆரம்பிக்கிறார். முழுப் பரலோகத்தின் கவனமும் இப்போது பூமி மீது திரும்பியிருக்கிறது.

கர்த்தர் முறையே ஐந்தாம், ஆறாம் நாட்களில் கடல்வாழ் பிராணிகளையும், சகல நீர்வாழ் பிராணிகளையும், பறவையினங்களையும், ஊர்வனவற்றையும், மிருகங்களையும் படைத்தார்.

பரமனின் கரத்தின் பிரமாண்டப் படைப்புகளை ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சத்துருவின் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது ஒரே ஒரு கேள்விதான்.

இவைகளெல்லாம் யாருக்காக?…

ஆயிரமாயிர ஆண்டுகால வெற்றிடம் ஆறே நாட்களில் நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் இவையெல்லாம் எதற்காக அல்லது யாருக்காக? என்பதுதான் கேள்வி.

இன்று மாலை உங்கள் ஊருக்கு உங்கள் நாட்டின் ஜனாதிபதி வருகிறார் என்றால் இன்று காலை உங்கள் ஊர் எப்படி இருக்குமோ அப்படித்தான் அந்த ஆறாம் நாளின் பூமி இருந்தது.

யாவும் தயாராக…

ஆனால் வரப்போகும் V.V.V.V.V.V.V.V.V.I.P யார்?

அதிர்ச்சி, கோபம், பொறாமை, ஆர்வம் இவையாவும் கலந்த ஒரு உணர்வினால் உந்தப் பட்டவனாக சாத்தான்:

“வழக்கம் போல இன்றும் ஒரு வார்த்தையை அனுப்புவார்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க…

அவரது கரங்களோ பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை அள்ளியது. கண்ணிமைப்பதற்குள் அவரது மடியில் ஒரு அழகான மணற்சிற்பம் தயார்.

அந்த மணற்சிற்பத்தை சாத்தான் உற்று நோக்கினான். அது தனது பழைய எஜமானரின் சாயலைப் போலவே இருந்தது. தன்னையே வார்த்து வைத்தது போல இந்த சிற்பத்தை ஏன் உருவாக்கினார்? அவன் மனதைக் கேள்விக் கணைகள் குடைந்து கொண்டிருக்க…

தனது செல்லக் குழந்தையின் இதழோடு இதழ் சேர்த்து தாய் முத்தமிடுவதுபோல தனது பரிசுத்த உதடுகளை மணற்சிற்பத்தின் நாசியருகே கர்த்தர் கொண்டு சென்றார். சிற்பத்தின் நாசியில் தனது ஜீவனை இதமாக ஊத மறுவினாடியே மணற்சிற்பம் கண்ணைத் திறந்தது (ஆதி 2:7)

பிரசவத்தில் முதற்குழந்தையைப் பெற்ற அன்னை முதன் முதலாக தன் சிசுவின் முகம் காணும் போது ஆனந்தக் கண்ணீர் சொரிவது போல ஆண்டவரின் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

அவனை வாரி அணைத்து முத்தமிட்டு வாய் நிறைய அழைத்தார்.

ஆதாம்…

என் செல்லமே…

என் உயிரே…

ஆசைதீர அவனோடு அளவளாவினார். ஏதேன் என்னும் ஒரு சிங்கார வனத்துக்குக் கூட்டிச் சென்று அதை அவனுக்குப் பரிசளித்தார்.

கர்த்தர் ஆதாமைக் கொஞ்சியதாகவும் முத்தமிட்டதாகவும் எழுதியிருப்பதெல்லாம் உங்களுக்கு சற்று மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றுகிறதோ?

நீங்கள் உங்களை பக்தகோடிகளாகவும், அவரை சாமியாகவும் மாத்திரமே பார்த்துப் பழகியிருப்பீர்களென்றால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

ஆனால் வேதம் சொல்லுகிறது.

”திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று (ஆசையோடு) கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” (ரோமர் 8:15)

ஆதாமுக்கு இருப்பிடத்தைத் தொடர்ந்து பதவி பரிசாக வந்தது.

அரச பதவி…

பூமியைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியில் நடமாடுகிற சகல ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளச் சொல்லி தேவன் அவனை ஆசீர்வதித்தார்.

முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து அரசனுக்கு அணிவகுப்பு மரியாதை வேண்டுமல்லவா?

இதோ! பூமியின் சகல ஜீவராசிகளும் ஆதாமுக்கு முன் அணிவகுத்து நின்றன. தேவன் முன்னிலையில் அவைகள் மத்தியில் ஆதாம் கம்பீரமாக நடந்து வந்தான். ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிட்டானோ அதுவே அவைகளின் பெயராயிற்று(ஆதி 2:19)

தேவன் தந்த பரிசுமழையில் ஆதாம் லயித்திருக்கும்போது தேவனோ ஆதாமுக்கு இன்னும் எதைப் பரிசளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

”என் ஆதாம் தனியாக இருக்கிறானல்லவா? நான் அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்குவேன்” என்று சொல்லி அழகிய ஏவாளை அவனிலிருந்தே எடுத்துக் கொடுத்தார்(ஆதி2:21-25). முப்புரி நூலாய் ஏதேனில் ஒரு அழகான உறவு.

இதோ! தேவன் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஏழாம் நாள் ஆயிற்று. ஆறு நாட்களும் ஆதாம் ஏவாளுக்கு உரியவைகளைப் படைத்தார், ஆறாம் நாளிலோ ஆதாம் ஏவாளைப் படைத்தார். தம் நேசப்பிள்ளைகளோடு கொஞ்சி மகிழ, ஐக்கியம் கொள்ள அவர்களோடு மட்டுமே தம் நேரத்தைச் செலவிட ஏழாம் நாளைப் படைத்தார்.

ஏழாம் நாளில் தேவன் களைத்துப் போய் ஓய்வெடுக்கவில்லை, தம் பிள்ளைகளோடு களித்திருக்கும்படி ஓய்வெடுத்தார். அந்நாளில் அவர்கள் மூவரும் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இருந்திருக்காது என நினைக்கிறேன். நாம் பரலோகத்துக்குச் சென்றபின் தேவன் தாம் ஆதாம் ஏவாளோடு செலவிட்ட அந்த முதல் ஓய்வு நாளின் இனிமையான நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.

இதுவரை ஆதி நிகழ்வுகளை ஆனந்தமாய் எழுதிக்கொண்டு வந்த எனக்கு ஏதேனில் இனி நடந்தவற்றை எழுத இதயம் வலிக்கிறது. ஆதாமும் ஏவளும் சாத்தானின் தந்திர வலையில் வீழ்ந்து மகிமையையும் மணிமுடியையும் இழந்ததை அறிவீர்கள். (ஆதியாகமம் 3ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள்)

பூமியின் ஆளுகையும் அதிகாரமும் மனிதனிடமிருந்து சாத்தானுக்குக் கைமாறியது,(லூக்கா 4:5,6). ஆதியாகமம் முதல் அதிகாரம் இரண்டாம் வசனம் திரும்பியது. பூமியானது மீண்டும் ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் ஆனது. மனிதனின் இருதயத்தில் இருள் இருந்தது. ஆவியானவரோ பழைய ஏற்பாட்டு பக்தர்கள் மேலும், தீர்க்கதரிசிகள் மேலும் அசைவாடிக் கொண்டிருந்தார். இப்பரிதாப நிலை ஏறத்தாழ 40 நூற்றாண்டுகள் நீடித்தது. 4000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூமியின்மேல் தேவனுடைய வார்த்தை வந்தது.

வெளிச்சம் உண்டாகக் கடவது…

கடந்த முறைபோல ஆர்ப்பாட்டமான ஒளிவெள்ளம் பூமியின்மேல் பாயவில்லை மாறாக பெத்தலகேமின் எளிமையான மாட்டுத்தொழுவமொன்றில் ஒரு ஆண் மகவின் அழுகுரல். ஒரு வித்தியாசம், கடந்தமுறை வெளிச்சம் வந்தது இந்தமுறையோ வெளிச்சமானவரே வந்து விட்டார் (யோவான்8:12).

மீண்டும் ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்துக்குத் திரும்புவோம் வாருங்கள். தேவனுக்கு முன்பாக ஆதாமும் ஏவாளும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். பிரதானக் குற்றவாளியாக சாத்தான் நின்று கொண்டிருக்கிறான். அவன் இருதயம் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. பூமியின் சாவிக்கொத்து கைக்கு வந்துவிட்டதல்லவா? மட்டுமல்லாது பூமியின் அரசனும் அரசியும் இனி அவன் அடிமைகள்.

”இனி தேவன் என்ன செய்வார் பார்ப்போம்”

தேவனுக்கு சவால் விடுவது போல நின்று கொண்டிருந்த சாத்தானுக்கு தேவன் ஒரு புது எதிரியை அறிமுகம் செய்கிறார். அந்த அறிமுக வார்த்தையிலேயே சாத்தானுக்கு தீர்ப்பும் எழுதுகிறார் (ஆதி 3:15)

”அவர் உன் தலையை நசுக்குவார்.”

யார் அவர்…???!!

“ஸ்திரீயின் வித்து”

(தொடரும்…)

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

0 thoughts on “1.ஒரு ஃப்ளாஷ்பேக்”

Leave a Reply