வெள்ளாடுகளை ஈர்க்கும் பிரசங்கம்

கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான் (தீத்து 1:12)
இங்கு பவுல் குறிப்பிடும் கிரேத்தா தீவின் தீர்க்கதரிசி கிமு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிமெனிடஸ் என்பவராவார். இவர் ஒரு புகழ்பெற்ற தத்துவஞானி, பண்டைய கிரேக்க மதத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர், மற்றும் கவிஞர் ஆவார். ஏதேன்ஸ் நகரத்தில் மிகப்பெரிய மதசீர்திருத்தங்களைச் செய்தவர். அப்போஸ்தலர் 17:23-இல் ஏதேன்ஸில் காணப்பட்ட “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதப்பட்ட பலிபீடத்தை ஸ்தாபித்தவர் இவர்தான் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள் (அப் 17:28)
இங்கு பவுல் குறிப்பிடும் புலவர் அராடஸ் என்னும் ஸ்தோயிக்க கவிஞர் ஆவார். “நாம் அவருடைய சந்ததியார்” என்பது கிரேக்கக் கடவுளாகிய ஜீயஸைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தை ஆகும்.
இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வேதாகமத்தையும் தாண்டி பல புத்தகங்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கிறது. ஒருவேளை கமாலியேலின் இறையியல் கல்லூரியில் பயின்றபோது இவைகளை அவர் கற்றிருக்கலாம். தான் கற்றவைகளை தேவைப்படும்போது தன்னுடைய ஊழியத்தில் ஒரு ஊறுகாய் போல பவுல் ஆங்காங்கே பயன்படுத்திக்கொள்வதை வேதாகமத்தில் பார்க்கிறோம்.
ஆனால் பவுலின் எழுத்துக்களையும் அவரது பிரசங்கங்களையும் கவனித்துப் பாருங்கள். அவர் பிரதானமாக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை மட்டுமே எப்போதும் முன்னிறுத்துவதைக் காணலாம்.
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார் (1 கொரி 22:23)
பவுல் இங்கு கிரேக்கரை ஆதாயப்படுத்த விரும்பினால் ஏன் அவர்களுக்கு பைத்தியமாகத் தோன்றும் ஒரு பிரசங்கத்தை பிரசங்கிக்க வேண்டும்? ஏனெனில் நம்முடைய தேவன் கிரேக்கருக்குள்ளேயே தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூட்டத்தின் கண்களைத் திறக்கவும், வேறொரு கூட்டத்தின் கண்களை மறைக்கவும் விரும்புகிறார்.
அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார் (யோவா 9:39)
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் (யோவா 12:40)
அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று (ரோமர் 11:7,8)
யாரைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக்கூடாது என்பது வீட்டெஜமானின் இறையாண்மை. அவர் எல்லோருடைய பாவத்துக்காகவும் மரித்தாலும், எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருந்தாலும் அவர் யாருக்குள் என்ன வித்து இருக்கிறது, யார் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள், யார் புறக்கணிப்பார்கள் என்பதை முன்னறிந்தவராக இருக்கிறார். அவர்களை அவர் முன்குறித்தும் இருக்கிறார்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோமர் 8:29,30)
ஆக, அன்று பவுல் நினைத்திருந்தால் தனது சாதுரியஞானத்தால் ஒரு அழகான பிரசங்கத்தை தயார் செய்து ஒட்டுமொத்த ஏதேன்சையும் அசைத்திருக்கலாம். ஆனால் கர்த்தர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே என்னை அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார் என்று 1 கொரி 1:17-இல் கூறுகிறார்.
பிரியமானவர்களே, இன்று நாம் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய விரல் நுனியில் இன்று தகவல்கள் நமக்கு கையில் கிடைக்கின்றன. பவுல் “புலவர்” என்று யாரைக் குறிப்பிடுகிறார், கிரேத்தா தீவின் தீர்க்கதரிசி யார் போன்ற தகவல்களை செயற்கை நுண்ணறிவு ஒரு நிமிடத்தில் எனக்குத் தந்துவிட்டது. இது ஒன்றும் பெரிய வித்தையெல்லாம் இல்லை. நம் பிரசங்கங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களின் பிரசங்கத்தைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின்” முக்கியத்துவத்தைக் குறைத்து, உலக அறிவை முக்கியப்படுத்தி பிரசங்கித்துவிடாதீர்கள்! அந்தப் பிரசங்கம் ஒருவேளை ஜனங்களை ஈர்க்கலாம், நம்மை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம் ஆனால் அவை தேவனுக்கு பயன்படாது.
மக்களின் புரிதலுக்காக உலக அறிவையும், தகவல்களையும் ஊறுகாய் போல பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால் நம் பிரசங்கங்கள் “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே” முதன்மைப்படுத்தி, மையப்படுத்தி இருக்க வேண்டும். அது கவர்ச்சியான பிரசங்கமாக இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்த அந்த சாதாரண பிரசங்கத்தைப் பயன்படுத்தித்தான் ஒரே நாளில் தேவன் 3000 ஆத்துமாக்களை இரட்சித்தார் என்பதை நாம் மறக்க வேண்டாம்.
சிலுவைப் பிரசங்கம் மட்டுமே செம்மறியாடுகளை ஈர்க்கும். செம்மறியாடுகளோடு சேர்த்து வெள்ளாடுகளையும் சபைக்குள் கொண்டு வந்து குவிக்க வேண்டுமானால் தேவனுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. தேவன் நினைத்தால் மிகப்பெரிய சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் இரட்சித்து அவர்கள் மூலம் கோடிக்கணக்கானோரை குறுகிய காலத்துக்குள் சபைக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் அது அவருக்கு தேவையில்லை. ஒரு நோக்கத்தோடுதான் தேவன் யூதருக்கு இடறலாகவும், கிரெக்கருக்கு பைத்தியமாகவும் தோன்றும் சிலுவைப் பிரசங்கத்தை வடிவமைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் தேவனைவிட ஸ்மார்ட்டாக செயல்படுவதாகவும், அவருக்கு உதவி செய்வதாகவும் எண்ணிக்கொண்டு “நியூ ஏஜ்” அறிவுகளை சபைக்குள்ளே கொண்டுவராதீர்கள்.