ஊழியம்

வசனம் பிறந்த கதை

By Vijaykumar Jayaraj

September 06, 2024

உங்களை ஒருவர் திடீரென்று அழைத்து “தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டதென்று சொல்லுங்கள்” என்று வினவினால் நீங்கள் உடனடியாக அவருக்குச் சொல்லும் பதில் என்னவாக இருக்கும்? தொடர்ந்து வாசிப்பதை சற்று நிறுத்திவிட்டு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்பதை சில வினாடிகள் யோசித்துப் பாருங்களேன்!

பரலோகராஜ்ஜியம் பற்றி பைபிளில் படித்த வசனங்களை நினைவுக்குக் கொண்டுவந்து ஏதாவது பதில் சொல்ல முயற்சிப்பீர்கள் அல்லவா? நீங்கள் ஓரளவுக்கு வேதத்தை அறிந்தவராக இருந்தால் “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது (ரோமர் 14:17)” என்ற வசனத்தைச் சொல்லி கேள்விகேட்டவரிடம் பாராட்டு வாங்கிவிடுவீர்கள்.

நீங்கள் பவுல் எழுதி வைத்ததைப் படித்ததால் தேவனுடைய ராஜ்யம் என்பது புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இது பவுலுக்கு எப்படி தெரிந்திருக்கும்?

வேதாகமத்தை எழுதியவர் ஆவியானவர்தான் எனவே பவுல் ஆவியானவரிடம் கேட்டு எழுதியதால் அவருக்கு அது தெரிந்திருக்கலாம் என்று நம்மில் சிலர் பதிலளிக்கக்கூடும். ஆனால் ஆவியானவர் பவுலிடம், “பவுல் வா இன்னிக்கு ரோமர் 14 முதல் 16-ஆம் அதிகாரம் வரைக்கும் எழுதலாம்” என்று அழைத்துப் போய் அவர் சொல்லச் சொல்ல அதைக் கேட்டு பவுல் எழுதியது அல்ல.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று 2 தீமோத்தேயு 3:16 கூறுவதில், “அருளப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தையின் பொருள் God breathed அல்லது inspired by God என்பதாகும். தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே “ஏவப்பட்டுப்” பேசினார்கள் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார்(2 பேதுரு 1:21). ஆக வேதவசனங்களை அதிலும் குறிப்பாக சுவிசேஷங்களையும், நிருபங்களையும் தேவதாசர்கள் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டும், தூண்டப்பட்டும் எழுதியிருக்கிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவ டிவிக்களில் “பாடல் பிறந்த கதை” என்ற நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவப் பாடல் எப்படி தன்னுடைய மனதில் கருவாகி உருவானது என்று அந்தப் பாடலாசிரியர் நேர்காணலில் பகிர்ந்துகொள்வதுதான் அந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு பாடல் உருவானதற்கும் பின்னாலும் அற்புதமான தேவ நடத்துதலும், அதிசயமான நிகழ்வுகளும் இருந்திருக்கும். புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களை அழைத்து அவர்கள் எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு அதிகாரத்திலும் இருக்கும் ஒவ்வொரு வசனங்களும் பிறந்த கதையைக் கேட்டால் அது அற்புத அனுபவங்களின் சுரங்கமாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு நாம் ரோமர் 14:17-ஐ எடுத்துக்கொள்ளலாம். தேவனுடைய ராஜ்யம் என்பது புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்ற வசனம் பவுலுக்கு எப்படி வெளிப்பட்டிருக்கும்? தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, அது அன்பு, வல்லமையும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் மகிமையுமாய் இருக்கிறது என்று ஏன் எழுதியிருக்கக்கூடாது? அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்று ஏன் எழுதினார்?

பவுல் தமது நிருபங்களில் எழுதிய ஒவ்வொரு வசனத்துக்கும் பின்னால் பல பழைய ஏற்பாட்டு வசனங்களும், சீஷர்களிடத்தில் அவர் கேள்விப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளும் இருக்கின்றன. இதையெல்லாம் ஆவியானவர் கோர்த்து ஒரு மாலையாக பவுலிடம் கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால் ஆவியானவரும், பவுலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.

இது என்னுடைய கற்பனைதான், தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்கிற கேள்விக்கான பதிலை பவுல் எங்கிருந்து பெற்றிருப்பார்? கர்த்தராகிய இயேசு அடிக்கடி தேவனுடைய ராஜ்ஜியத்துடன் நீதியை இணைத்துப் பேசியதை அவர் சீஷர்கள் வழியாக கேள்விப்பட்டிருந்திருக்கலாம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் (மத் 6:33), வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்(மத் 5:20), நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்(சங் 89:14) இப்படி ராஜ்ஜியம் நீதியுடன் இரண்டற பிணைக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருக்கிறார்.

பரலோகராஜ்ஜியம் நீதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. சரி, அந்த நீதியின் பலன் என்ன?

நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம் என்று ஏசாயா 32:17 கூறுகிறது. ஆக, பரலோகராஜ்ஜியம் நீதியை உடையதாக இருப்பதால் அதன் பலன் சமாதானமாக இருக்கிறது. சமாதானம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்கும் என்பதற்கு நீதி 12:20 சான்றாக இருக்கிறது. ஒருவேளை இப்படித்தான் பவுல் பரலோக ராஜ்ஜியத்தை நீதியுடனும், சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் இணைத்து புரிந்து கொண்டிருப்பார். அவரது புரிதலை ஆவியானவர் அங்கீகரித்து, ஆமோதித்தவுடன் அது வசனமாக உருவாகியிருந்திருக்கும்.

இந்த ஒரு வசன உருவாக்கத்துக்குப் பின்னால் ஏராளமான வேத வாசிப்பும், வசன தியானங்களும் இருந்திருப்பது இதிலிருந்து புலனாகிறது. வசனங்களை உருவாக்குவதற்காக அவர் தியானம் பண்ணியிருந்திருக்க மாட்டார், ஆனால் அவருக்கு ஏற்கனவே பழக்கமாயிருந்த வசன தியானத்தின் விளைவாக ஆவியானவர் உந்துதலோடு அநேக வசனங்கள் உருவாகியிருந்திருக்கிறது.

இன்று வேதாகமம் தொகுக்கப்பட்டு நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது. வேதாகமத்தை நம் கைகளில் தேவன் கொடுத்தது நம்மை சோம்பேறிகளாக்க அல்ல. இருக்கும் வசனங்களை ரெடிமேடாக எடுத்துப் பயன்படுதிக்கொள்ளுங்கள் இனி வசன தியானம் தேவையில்லை என்பதற்காக தேவன் வேதாகமத்தைத் தரவில்லை. இன்றும் இதேபோன்ற வேத வாசிப்பும், வசன தியானப்பழக்கமும் நமக்கு தேவையாக இருக்கிறது. மீண்டும் ஒரு புதிய வேதாகமத்தை தேவன் எழுதப்போவதில்லை. ஆனால் ஏற்கனவே எழுதப்பட்ட வேதத்தின் புதிய பரிமாணங்களையும், ஆழங்களையும் புரிந்துகொள்ள நமக்கு அதேவிதமான வேததியானம் தேவையாக இருக்கிறது.

அன்று ஆக்கியோனாகிய ஆவியானவரும், மாணவனாகிய பவுலும் இணைந்து ஒரு வசனத்தை உருவாக்க எப்படி பணிபுரிந்தார்களோ அப்படியே இன்று நாம் பிரசங்கிக்கும் பிரசங்கங்களையும், எழுதும் கட்டுரைகளையும் உருவாக்க நாம் ஆவியானவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பிரசங்கியும் தனது ஒவ்வொரு பிரசங்கத்துக்காகவும் ஆவியானவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது ஒவ்வொரு கட்டுரைகளுக்காகவும் ஆவியானவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அடுத்தவர் பிரசங்கத்தை பார்த்து காப்பியடித்து பிரசங்கிப்பது கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்வதாகும்.

அடுத்த ஊழியக்காரர்களின் சிந்தனைகளை அப்படியே உங்களுக்குள் டவுன்லோடு செய்துகொள்ளாதிருங்கள். நீங்கள் ஆவியானவரைச் சார்ந்துகொண்டு அவர் உங்களுக்குக் கொடுத்த அறிவை வைத்து சொந்தமாக சிந்தியுங்கள். தேவைப்பட்டால் பெரிய ஊழியக்காரர்களோடு சிந்தனையில் முரண்படுங்கள், தவறில்லை. உங்களுக்கு பிடித்த ஊழியர்களோடும் முரண்படுங்கள், தவறில்லை. அதன் விளைவாக மேம்பட்ட சிந்தனைகள் சபைக்கு கிடைக்கட்டும். அதுவே அவசியம்!