மனிதனுக்காக தேவனிடம்…

மனிதனுக்காக தேவனிடம்…

சில ஆண்டுகளுக்கு முன்பு விசுவாசிகள் முறுமுறுப்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது எவ்வளவு முதிர்ச்சியற்ற கட்டுரை என்பது பின்நாட்களில் எனக்கு விளங்கியது. ஏனென்றால் அந்தக் கட்டுரை எழுதிய காலத்துக்குப் பின்பாக என்னைப்போல தேவனுக்கு எதிராக முறுமுறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் முறுமுறுத்த வார்த்தைகளை ரெக்கார்ட் செய்து ஒலிபரப்பினால் “இவனெல்லாம் ஒரு கிறிஸ்தவனா?” என்றுகூட இல்லை “இவனெல்லாம் ஒரு மனிதனா?” என்ற முடிவுக்குக்கூட பலர் வந்துவிடுவார்கள்.

முறுமுறுப்பது தேவனுக்கு எதிரான பாவம் என்பதைச் சொல்லி, அதற்கு தீர்வு தேவனைக் குறித்த அறிவு என்று அழுத்தமாகப் பதிவு செய்த கட்டுரை அது. வேதாகமரீதியில் பார்த்தால் 100-க்கு 100 மார்க்கு வாங்கக்கூடிய கட்டுரை. அதை வாசித்தால் எந்த சபைப்பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவரும் அதை சிறந்த கட்டுரை என ஏற்றுக்கொள்வார்கள். வேத பிரமாணத்தின்படி நூறு சதவிகிதம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கட்டுரை. ஆனால் எந்த நாணயத்துக்கும் இன்னொரு பக்கம் என்று உண்டு. அதை அன்று பார்க்க மறந்ததே அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் நான் செய்த தவறு.

பெலிஸ்தியர்களோ, அமலேக்கியர்களோ, ஏவியரோ, எபூசியரோ தேவனுக்கு எதிராக முறுமுறுத்ததில்லை. இஸ்ரவேலர் மட்டுமே அவருக்கு எதிராக முறுமுறுத்தார்கள். ஏனெனில் இஸ்ரவேலரின் வாழ்க்கையில் மட்டுமே தேவன் அன்று கிரியை செய்தார். தன் இயல்புக்கு எதிரான ஒரு அழுத்தத்தை தன்னில் உணரும்போது உடனடியாக ஏற்படும் எதிர்வினையே முறுமுறுப்பு. அந்த அழுத்தம் தன்னை மேன்மைப்படுத்தும் நோக்கத்தோடு தரப்படும் நல்ல அழுத்தம் என்ற அறிவு ஏற்படும்போது அந்த எதிர்வினை படிப்படியாகக் குறைகிறது. ஆனால் அந்த அறிவு எல்லோருக்கும் உடனே கிடைப்பதில்லை.

அப்படியானால் வனாந்திரத்தில் முறுமுறுத்தவர்களை ஏன் தேவன் அழித்தார் என்ற கேள்வி எழலாம். வனாந்திரத்தில் மட்டுமா தேவஜனங்கள் முறுமுறுத்தார்கள்? அதற்குப் பிறகு கானானிலும். புதிய ஏற்பாட்டு காலத்திலும், இன்று சபையின் காலத்திலும் யாருமே முறுமுறுக்கவில்லையா? இன்றுவரை நாம் எல்லோருமே அதைவிட அதிகமாக முறுமுறுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனால் எல்லோரையும் தேவன் ஏன் அப்படி அழிக்கவில்லை என்ற எதிர்கேள்விதான் அந்தக் கேள்விக்கான பதில். இதைப்பற்றி ஆராய்ந்தால் இது ஒரு இறையியல் கல்வி கட்டுரைபோல ஆகிவிடுமென்பதால் அந்த தியானத்தை உங்களிடமே விட்டு கட்டுரைக்குள் கடந்துபோகிறேன்.

நான் தேவனுக்கு விரோதமான முறுமுறுத்ததைக் குறித்து குற்ற மனசாட்சியின் நிமித்தம் அதிக துக்கமடைந்திருந்த வேளையில் ஆவியானவர் என்னிடம் இடைப்பட்டு சொன்னது இதுதான், “நான் உன்னில் அதிகமாக கிரியை செய்கிறேன் என்பதற்கான அடையாளம்தான் இது, ஆனால் இது மாம்சத்திலிருந்து வெளிப்படும் எதிர்மறையான அடையாளம்”. இங்கு இரண்டு விஷயங்கள் உறுதியாகிறது. ஒன்று என்னில் இன்னும் மாம்சம் கிரியை செய்கிறது, இன்னொன்று அதைவிட வல்லமையாக தேவனும் என்னில் கிரியை செய்கிறார்.

தகப்பன் தான் நேசிக்கும் எந்த புத்திரனையும் சிட்சிக்கிறான், இது அவருடைய இயல்பு. சிட்சிக்கப்படும் எந்த புத்திரனும் முறுமுறுக்கிறான், அது அவனுடைய இயல்பு. ஏனென்றால் இங்கே மாம்சம் ஆவி என்ற இரண்டு எதிரெதிரான விஷயங்கள் உரசுகின்றன. அதனால் ஏற்படும் எதிர்வினைதான் முறுமுறுப்பு. எதிர்வினை இல்லையென்றால் வினையும் நடக்கவில்லை என்று அர்த்தம். அதற்காக தேவன் முறுமுறுப்பை அனுமதிக்கிறார் என்று அர்த்தமல்ல, அவர் நம்மைப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதைத்தான் நாம் இங்கு உணரவேண்டும்.

எல்லா வேதாகம புருஷர்களும் இந்தவழியாகத்தான் கடந்து வந்திருப்பார்கள். எதிர்வினையே ஆற்றாத மகா பக்குவப்பட்ட ஒரு ஆத்துமாவாக அவன் இருந்தால் அவனுக்கு சிட்சையே, அவ்வளவு ஏன் தேவனே கூட தேவையில்லை. எல்லோருமே பரிசுத்த ஆவியானவரின் பள்ளிக்கூடத்தில் முறுமுறுப்புகள், கண்ணீர் வழியாகத்தான் கடந்துவந்திருப்பார்கள். மாம்சத்திலிருந்து நாட்களில் கர்த்தராகிய இயேசுவும்கூட பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, பாடுபட்டு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதாக எபி 5:7,8 வசனங்கள் சொல்லுகின்றன. ஆனால் அந்தப் பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை.

எல்லோரும் முறுமுறுத்து, விட்டு விலகி ஓடிப்போய் திரும்ப வந்து, முரட்டாட்டம் செய்து கொஞ்ச கொஞ்சமாக உடைக்கப்பட்டுத்தான் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எல்லோருடைய முறுமுறுப்புகளையும் பதிவுசெய்து வைக்க வேண்டிய அவசியம் வேதாகமத்துக்கு இல்லை. சாம்பிளுக்காக யோபுவும், எரேமியாவும் எப்படியாக எதிர்வினை செய்து பின்னர் தங்களை தேவனிடம் முற்றிலும் தாழ்த்தி ஒப்படைத்தார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. “கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்” என்பதுதான் எரேமியாவின் கதறலாக இருந்தது (எரேமியா 20:7 )

நான் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தபோது நான் எழுதிய கட்டுரையும், நான் கேட்ட பிரசங்கங்களும் என்னைக் குற்றவாளியாக தீர்த்தது, ஆனால் ஆவியானவரோ “நான் உன்னைப் புரிந்துகொண்டிருக்கிறேன்” என்றார். அப்பொழுதுதான் ஒரு ஊழியக்காரனாக நான் செய்த பெரும் பிழை எனக்கு விளங்கியது.

ஒரு ஊழியக்காரன் என்பவன் தேவன் சார்பாக மனிதனிடம் நிற்பவன், மனிதர் சார்பாக தேவனிடம் நிற்பவன். ஆனால் இன்று நம்மில் பலர் பிரசங்க பீடம் ஏறினவுடனே மகா பரிசுத்தவான்களாகிவிடுகிறோம். நம்முடைய பிரசங்கங்கள் அனைத்தும் தேவன் சார்பாக மனிதரிடம் பேசுவதாக மட்டுமே இருக்கிறது. மனிதர் சார்பாக தேவனிடம் நிற்பது என்பதை வெறும் மனிதர்களின் தேவைகளுக்காக ஜெபிப்பது என்ற அளவோடு நிறுத்திவிடுகிறோம். அப்படிப்பட்ட ஊழியத்தை தேவனே விரும்புவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும் (யோபு 16:21)

பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?(யோபு 9:19)

நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே (யோபு 9:32,33)

நாம் தேவனுக்காக மனிதரிடம் பேச வேண்டும். அதே நேரத்தில் மனிதர்கள் பக்கம் உள்ள வாதத்தை தேவனிடம் பேசவேண்டிய அவசியமில்லை. அவர் அதைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால் தேவன் உன்னைப் புரிந்துகொண்டிருக்கிறார். உன்னுடைய பலவீனங்களை அவர் அறிந்திருக்கிறார், அவர் உன் சார்பாக இருக்கிறார், நீ செய்யும் தவறுகளை அவர் சகித்து உன்னை அன்போடு மன்னிக்கிறார், நீ பூரணப்படுவது ஒரே நாளில் நடக்காது; அதற்கு பல காலம் ஆகும் அதுவரை தேவன் உனது தவறுகளை சகித்து; நீடிய பொறுமையோடு காத்திருந்து உன்னை உருவாக்குகிறார் என்பதை மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களிடம் பட்சமாகப் பேசவேண்டும் அப்பொழுதுதான் நெறிந்த நாணல்கள் முறியாது, மங்கியெரியும் திரிகள் அணையாது.

இங்கு பலர் பிரசங்கபீடத்தில் நின்று மனிதனுடைய குறைகளை அவனுக்கு புரியவைத்து, அவன் தன்னை குற்றவாளியாக தீர்த்துக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதுதான் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை என்றால் அதைச் செய்ய நீங்கள் எதற்கு? அந்த வேலையை தேவன் பிசாசைக் கொண்டு சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஏனெனில் குற்றப்படுத்துவதில் அவன் உங்களைவிடக் கைதேர்ந்தவன்.

வேதத்தில் எழுதியிருப்பதை அப்படியே படித்து பிரசங்கிக்க எல்லோராலும் முடியும். அதைத்தான் அன்றைய பரிசேயர்கள் செய்தார்கள். அப்படிப்பட்ட ஊழியத்தைத்தான் தேவன் நம்மிடத்தில் விரும்புகிறாரா? மனிதனைப் புரிந்துகொள்ளாமல், மனிதத்தை நேசிக்காமலும் வெறும் தேவன் சார்பாகப் பேசுவதாக மட்டும் கருதிக்கொண்டு செய்யப்படும் ஊழியங்கள் வெறும் அரைக்கிணறு தாண்டும் வேலைதான்…

தேவன் பட்சம் நின்று மனிதர்களை எச்சரித்து அவர்களுக்கு “ஐயோ” என்று சொன்ன தீர்க்கதரிசிகள் எத்தனையோ பேர் இருக்க, மனிதர்களுக்காக தேவனிடம் வாதாடி “என் பெயரை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும்” என்று மன்றாடிய மோசேயைத்தான் தேவன் “என் சிநேகிதன்” என்று கொண்டாடுகிறார்.

Leave a Comment