நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்… பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:1,2)
மேலானவைகளென்றால் எவைகள்? வெண்ணங்கி, பொன்முடி, வாத்தியம், மேல்வீடு, ஜெயக்கொடி, ஓயா இன்பம், தங்க வீதிகள், பரலோக மன்னா?
இல்லை இல்லை..இவையெல்லாம் பரலோகத்தில் உள்ளவைதான், ஆனால் நான் சொல்வது இன்னும் மகிமையானது..
என்ன? இன்னும் மேலானவைகளா? அவை எங்கே இருக்கிறது?
அது இடைவிடாமல் ஆராதிக்கும் கோடானகோடி தூதர்களையும், கேரூபின் சேராபீன்களையும் தாண்டி, சேரக்கூடாத ஒளியில், பிரதான தூதர்களால்கூட நினைத்துப் பார்க்க இயலாத தேவனுக்கு அண்மையில்…
அவ்வளவு அண்மையிலா? அத்தனை மகிமையிலா? அந்தப் பேரொளியிலா? அங்கு எனக்கு என்ன இருக்கிறது?
தேவனுடைய சிங்காசனம், அவருடைய வலதுபாரிசம்…
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலோ 3:1)
அங்கேயா? அங்கு எனக்கு என்ன பங்கு இருக்கிறது?
கிறிஸ்துவுடைய அவயத்தின் அங்கங்களானதின் நிமித்தம் திரித்துவ தேவனோடு இணைக்கப்பட்ட நித்திய வாழ்வு, ஆம், அங்கே நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறதாம்(கொலோ 3:3)
என்னது தேவனுடைய சமுகத்தில் அவருடன் நானுமா?
ஆமாம், கிறிஸ்துவுக்கு ஒப்பாக பூரண புருஷனாக மாறியவர்களை வேறு எங்கே வைப்பார்களாம்? வேறு எங்கே வைத்தாலும் அது கிறிஸ்துவின் சாயலுக்கு இழைக்கப்படும் அவமானமல்லவா?
இதைத்தான் தன்னுடைய இறுதி இலக்காக பவுல் தன்னுடைய நிருபங்களில் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதைத்தான் “கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளுதல்” என்று பிலிப்பியர் 3:9-இல் கூறுகிறார். இந்த உன்னத இடத்தை அடைவதற்காகத்தான் தனக்கு லாபமாக இருந்த எல்லாவற்றையும் நஷ்டமாகவும், குப்பையாகவும் எண்ணுவதாகக் கூறுகிறார்.
கர்த்தராகிய இயேசு இரத்தம் சிந்தியது நம்மை இங்கு கொண்டு வந்து சேர்க்கத்தான். சுவிசேஷம் என்னும் விதை விளைவிக்கும் கனி இதுதான். ஒருவேளை, ஒருவேளை, ஒருவேளை அன்று ஏதேனில் சர்ப்பம் சொன்னது உண்மையாய் இருந்து, அந்த விலக்கப்பட்ட கனியை உண்டதனால் மனிதன் தேவர்களைப் போல ஆகியிருந்தால்கூட அந்த மேன்மை இந்த மகிமையின் கால்தூசுக்குக்கூட சமமாகாது.
இதுதான் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரம்(கொலோ 1:12), இந்த சுதந்திரத்தின் மகிமையின் ஐசுவரியத்தை அறிந்துகொள்ள தேவன் நமக்கு பிரகாசமான மனக்கண்களைக் கொடுக்க வேண்டும் என்றுதான் பவுல் எபேசியர் 1:17-19-இல் கருத்தாக ஜெபம் பண்ணுகிறார்.
இதை அறிந்திருக்கிறோமா? இதை அறிவிக்கிறோமா? இதை தியானிக்கிறோமா? இந்த அனுபவத்துக்காக ஜெபிக்கிறோமா?