ஞானம்

பெண் என்பவள்…

By Vijaykumar Jayaraj

December 14, 2017

கர்த்தர் சகல உயிரினங்களையும் ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் மனிதனை உருவாக்கும்போது மட்டும் இருவரையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. ஆதாம் சிறிதுகாலம் ஏதேனில் தனியாக இருந்தான். ஆதாம் தனது தேவையை உணர்வதற்கு முன்பாகவே அதை தேவன் நன்கு அறிந்திருந்தார்.

பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார் (ஆதி 2:18)

இந்தச் சூழலில்தான் தனியாக இருந்த ஆதாமிடம் அனைத்து உயிரினங்களுக்கும் பெயரிடும்படி பணிக்கிறார் (ஆதி 2:19,20). ஒருவேளை அனைத்து உயிரினங்களும் ஜோடுஜோடாக இருப்பதைப் பார்த்து ஆதாமும் தனக்கு ஒரு துணையின் தேவையை நிச்சயம் உணர்வான் என்று நினைத்தாரோ என்னவோ!

உயிரினங்களுக்கு பெயரிட்டு முடித்தபின்னர். ஆதாமும் ஒருவேளை தேவன் நினைத்தபடியே ஒரு துணையின் தேவையை உணர்ந்திருக்க வேண்டும். எனவே அடுத்த வசனத்திலேயே தேவன் செயலாற்றுகிறார்.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் (ஆதி 2:21)

தேவனிடம் உள்ள ஒரு அழகான குணம் அவர் முதலாவது விருந்தை ஆயத்தம் பண்ணிவிட்டு விருந்தாளிகளை அழைக்கிறவர். இந்த குணாதிசயத்தை நாம் வேதாகமம் முழுவதிலும் காணலாம். மனிதனுக்குரிய உணவு உறைவிடத் தேவைகள் அனைத்தையும் முதலாவது படைத்த பிறகுதான் கடைசியில் ஆதாமை தேவன் படைத்தார் என்று பார்க்கிறோம். ஒருவேளை பெண்ணை ஆணுக்கு பணிவிடை செய்யும் பாத்திரமாக மட்டும் தேவன் நினைத்திருந்தால் முதலில் ஏவாளைப் படைத்துவிட்டு பின்னரே ஆதாமைப் படைத்திருந்திருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

படைப்பின் வரலாற்றில் தேவன் மனிதனுக்கு தேவையை உணரவைத்து, அதற்காக அவனைக் காத்திருக்க வைத்து கொடுத்த ஒரே ஒரு காரியம் “பெண்ணின் துணை” மட்டுமே! எனவேதான் மற்ற எல்லாவற்றையும் குறித்து “ஆண்டுகொள்” என்று கட்டளையிட்ட தேவன் மனைவியிடம் மட்டும் “அன்புகொள்” என்று கட்டளை விதிக்கிறார்.

எனவே மனைவியை வெறும் அடிமைப் பிண்டமாக மட்டுமே நினைக்கும் கணவன் கிறிஸ்தவனாக மட்டுமல்ல, மனிதனாகக்கூட இருக்கமுடியாது!