பரிசேயன் – ஆயக்காரன் உவமை

பரிசேயன் – ஆயக்காரன் உவமை

முன்னுரை:

வேதத்தில் ஆண்டவர் கூறியிருக்கும் உவமைகளை ஆராய்வது ஒரு இனிமையான அனுபவம். தோண்டத் தோண்ட ஞானப் புதையல்களுக்கு பஞ்சமே இருக்காது. எல்லா உவமைகளுமே ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது வெளிப்பாடுகளைத் தரும். எனவே வேதத்தில் இந்த உவமையின் மறைபொருளை நான் வெளிப்படுத்திவிட்டேன் என்று எந்தக் கொம்பனும் மேன்மை பாராட்ட முடியாது. பலமுனைகளும் மின்னும் வைரமொன்றின் ஒரு சில பகுதிகளிலிருந்து ஒளிக்கீற்று தெறிப்பதுபோல ஒரே உவமையை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அதிலிருந்து ஒரு புதிய கோணத்தை விளங்கிக்கொள்ள இயலும். இந்த முறை பரிசேயனும் ஆயக்காரனும் ஜெபிக்கும் நிகழ்வை வைத்து ஆண்டவர் மொழிந்த உவமையை சற்று ஆராய்வோம்.

உவமை:

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார் (லூக்கா 18: 9-14)

இந்த உவமையின் நேரடிப்பொருள் யாவருக்கும் எளிதாக விளங்கும் வண்ணமே ஆண்டவர் உவமையைக் கட்டமைத்துக் கூறியிருக்கிறார். “மனிதன் சுயநீதியினாலோ, கிரியைகளினாலோ அல்ல, தேவனுடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறான். எந்த மனிதனும் தனது இழிநிலையை உணர்ந்து, தன்னைத் தாழ்த்தி இரக்கத்துக்காக கெஞ்சும்போது அந்த இரட்சிப்பானது அவனுக்கு இலவசமாகக் கிடைக்கிறது” என்பதே இவ்வுவமையின் வழியாக ஆண்டவர் கூறவரும் நேரடிச் செய்தியாகும். ஆனால் அந்த செய்தியைப் பகிர ஆண்டவர் பயன்படுத்தும் இரண்டு பாத்திரங்களும் சுவாரஸ்யமானவை. ஒருவன் பரிசேயன், இன்னொருவன் ஆயக்காரன். இந்த இருவரும் யார் என்பதைச் சற்று ஆராய்வோம்.

பரிசேயர்கள்:

பழைய ஏற்பாட்டில் நீங்கள் பரிசேயன் என்ற பதத்தை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. பழைய ஏற்பாட்டின் கடைசி நூலான மல்கியா புத்தகத்திற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் நூலான மத்தேயு புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மக்கபேயப் புரட்சியின்போது முளைத்தவர்கள்தான் இந்தப் பரிசேயர்கள். “பரிசேயன்” என்ற பதத்திற்கு “தன்னை வேறுபடுத்திக் கொண்டவன்” என்று பொருள். ஏரோது கட்டின இரண்டாம் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 6,000 பரிசேயர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்ததாக ஜோசிபஸ் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

இந்தப் பரிசேயர்கள் யூத மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களாயும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பொது இடங்களிலும், விருந்து வீடுகளிலும் இவர்களுக்கே முதல் மரியாதை என்னுமளவுக்கு இவர்கள் ஜனங்களின் மனங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். பரிசேயர்கள் அனைவரும் மோசேயின் ஆகமங்களை எழுத்தளவில் கசடறக் கற்ற அறிஞர்கள். தாங்கள் கற்றவைகளை பின்பற்றுவதில் கண்மூடித்தனமான வைராக்கியம் பாராட்டியவர்கள். தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டி, சமூகத்தில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அந்த முரட்டு வைராக்கியம் அவர்களுக்கு அவசியமாகவும் இருந்தது.

இவர்கள் எந்த அளவுக்கு நியாயப்பிரமாணத்தை எழுத்தளவில் கண்முடித்தனமாக பின்பற்றுவார்கள் என்றால் Gnat என்னப்படும் கொசுவை ஒத்த சிறிய பூச்சி ஒன்று கூட தாங்கள் குடிக்கும் திராட்சைரசத்தில் விழுந்துவிடாதபடி பார்த்துப் பார்த்து ஜாக்கிரதையாக வடிக்கட்டி குடிப்பார்களாம். நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்ணக்கூடாது என்று விலக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறியது இந்தப் பூச்சிதானாம். இதைத்தான் ஆண்டவர் கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் (மத் 23:24) என்று இடித்துரைக்கிறார். நியாயப்பிரமாணத்தில் உண்ணக்கூடாது என்று விலக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகப்பெரியது ஒட்டகமாகும். அதுமட்டுமன்றி வெந்தயம், சீரகம் முதலான சின்னஞ்சிறு தானியங்களைக் கூட ஒவ்வொன்றாக சரியான அளவு எண்ணி தசமபாகம் செலுத்துவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பழைய ஏற்பாட்டில் அடிக்கடி இஸ்ரவேல் மக்கள் விக்கிரக ஆராதனையில் விழுந்து சோரம் போய் ஆண்டவரால் கைவிடப்படுவதையும் தண்டனைக்கு ஆளாவதையும் நாம் வேதத்தில் வாசிக்கமுடியும். ஆனால் அந்த நிலை பரிசேயர்கள் தலையெடுத்த பின்னர்தான் அறவே மாறியது. பரிசேயர்கள் யூத சமயத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி மக்களை மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அதனால்தான் மிக மோசமான விக்கிரக ஆராதனையைப் பின்பற்றும் ரோம பேரரசின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலத்திலும் கூட இஸ்ரவேலர்கள் விக்கிரக ஆராதனையின் பக்கம் சாயவில்லை.

ஒரு விதத்தில் இது ஆரோக்கியமான விஷயமாகத் தோன்றினாலும் அதனால் தேவன் மனம் மகிழவில்லை என்பதற்கு பரிசேயர்களிடம் ஆண்டவர் இயேசு இடைப்பட்ட விதமே சாட்சியாக இருக்கிறது. ஜனங்களை விக்கிரக ஆராதனைக்குள் சாயவிடாமல் பார்த்துக் கொள்வதில் பரிசேயர்களின் சுயலாபமும் அடங்கியிருக்கிறது என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். பரிசேயர்கள் மதத்தளவில் யூத சமயத்தை உயர்த்திப் பிடித்து கொண்டிருந்தார்களேயன்றி தேசத்தின் ஆவிக்குரிய வாழ்க்கையோ காரிருளைப் போல இருண்டேதான் இருந்தது.

பரிசேயர்களின் முழு கவனமும் அவர்களது இறைப்பணியும் முழுக்க முழுக்க சடங்குகளைச் சுற்றியே இருந்ததே தவிர அவர்கள் பிதாவின் இருதய விருப்பத்தை அறிந்து அதற்கு இணங்கி அதை நிறைவேற்றுவது குறித்து துளியளவும் அக்கறை செலுத்தவில்லை. இவர்கள் வெளியே தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டிக்கொண்டு மனதளவில் கேடான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எனவேதான் ஆண்டவர் இவர்களை “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்று விமர்சித்தார். பரிசேயரைக் குறித்த ஆண்டவரின் பகிரங்க விமர்சனம் மத்தேயு 23-ஆம் அதிகாரத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயக்காரர்கள்:

ஆயக்காரரும் யூதர்களே! ஆனாலும் இவர்கள் சமாரியருக்கு நிகராக யூதர்களால் வெறுக்கப்படக் காரணம் என்ன? இவர்கள் வரிவசூல் செய்பவர்களாக இருந்ததுதான். வரிவசூல் செய்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. இன்றும்கூட வருமான வரித்துறையில் பணிபுரியும் நண்பர்கள் நம்மிடையே வசிக்கிறார்களே! அந்தக் காரணத்துக்காக யாரேனும் அவர்களை வெறுப்பார்களா என்ன? என்று கேட்கத் தோன்றலாம்.

அந்தக் காலச் சூழலில் வரி வசூல் செய்யும் வழக்கம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால் ஆயக்காரர்கள் வெறுக்கப்பட்டதன் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலும். ரோமர்கள் வரிவசூல் செய்து அரசுக்கு செலுத்தும் பொறுப்பை யூதர்களிடமே ஒப்படைத்திருந்தனர். அந்த வேலையை செய்த யூதர்களுக்குத்தான் ஆயக்காரர்கள் என்று பெயர். அவர்கள் அரசு நியமித்திருந்த வரித் தொகையை மக்களிடமிருந்து வசூல் செய்து அதை அரசுக்கு செலுத்த வேண்டும், அரசு நியமித்த தொகை போக அதிகமாக வசூலிக்கப்பட்டதெல்லாம் ஆயக்காரர்களையே சேரும். எனவேதான் தாங்கள் கொழுக்கும்படி தங்கள் சொந்த இனமக்களையே இந்த ஆயக்காரர்கள் ஈவு இரக்கமின்றி சுரண்டினர். பிரச்சனைகள் ஏற்படும்போது தங்கள் சொந்த இனமக்களையே ரோமர்களிடம் காட்டிக்கொடுத்தனர். எதிரியைக் கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கக்கூடாது என்று இன்று ஒரு பேச்சு வழக்கு இருக்கிறதல்லவா? அந்த அடிப்படையில்தான் ஆயக்காரர்கள் அந்தச் சமுதாயத்தில் மிக மோசமானவர்களாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் கருதப்பட்டனர்.

அப்படிப்பட்ட ஆயக்காரர்களில் ஒருவராகத்தான் ஆண்டவராகிய இயேசுவின் சீஷனான மத்தேயு (மத்தேயு சுவிசேஷத்தின் ஆசிரியர்), ஆண்டவரால் தொடப்பட்டு மனந்திரும்பிய சகேயு ஆகியோர் இருந்தனர். சமுதாயத்தில் ஏனைய மக்கள் மதித்தது போல இயேசு பரிசேயர்களை மதிக்கவுமில்லை, மக்கள் வெறுத்தது போல இயேசு ஆயக்காரர்களை வெறுக்கவுமில்லை. மனுஷர் பார்க்கிறவிதமாக அவர் பார்க்கவில்லை. அவர் நடுநிலையாக இருந்தார். அவர் ஆயக்கார்களோடு பந்தியிருந்ததை அநேகர் பார்த்து முகம் சுளித்ததை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கக்கூடும்.

உவமை காட்டும் காட்சி:

இந்த உவமையில் சுயநீதி, தனது சுய கிரியைகளில் திருப்தி மற்றும் பெருமை, ஆணவம், வறட்டு வைராக்கியம் இவற்றின் உருவகமாக பரிசேயன் நிறுத்தப்படுகிறான், இங்கே பாவ உணர்வடைதல், மனசாட்சியால் வாதிக்கப்பட்ட நிலை, தாழ்மை, உடைந்த இருதயம், இரக்கத்துக்காக கெஞ்சும் பரிதாப நிலை ஆகியவற்றின் வடிவமாக ஆயக்காரன் காட்டப்படுகிறான். இந்த உவமையில் மட்டுமல்ல உண்மையிலேயே அன்றைய சமுதாயத்தில் மதத்தலைவர்களும், ஆயக்காரர்களில் பலரும் இந்த நிலையில்தான் இருந்திருப்பார்கள் என்பதற்கு நாம் புதிய ஏற்பாட்டில் காணும் பரிசேயர்களும், சகேயுவும் ஒரு சாட்சி!

பரிசேயன் தனது சுய நீதியில் திருப்தியுற்றவனாக துணிகரமாக தேவாலயத்தின் முக்கியமான இடத்தில் “நின்று” நெஞ்சை நிமிர்த்தி ஜெபிக்கிறான். ஆயக்காரனோ தனது மனசாட்சியில் குத்தப்பட்ட மனிதனாக தூரத்தில் நின்று “தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல்” தலை கவிழ்ந்தவாறே மார்பில் அடித்துக்கொண்டு “தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று அபயமிடுகிறான். பரலோகம் பரிசேயனைப் புறக்கணித்து பாவியாகிய ஆயக்காரனைப் பட்சமாக நோக்குகிறது. அவன் நீதிமானாக்கப்பட்டவனாக தன் வீட்டுக்குத் திரும்பிப் போகிறான்.

நமது புரிதல்:

நமது சுயநீதிகளெல்லாம் அழுக்கான கந்தைகள் (ஏசா 64:6) என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மனிதனின் சுயநீதியையே அழுக்கான கந்தையாகக் கருதும் தேவன் ஒரு மனிதனின் பாவத்தை எப்படி ஏற்றுக்கொள்ளுவார்? சுயநீதியில் வாழும் பரிசேயனைப் புறக்கணித்த தேவன், பாவியாகிய ஆயக்காரனை ஏற்றுக்கொண்டது எதன் அடிப்படையில்? இங்குதான் காட்சியில் “கிருபை” வந்து நிற்கிறது. தகுதியற்ற ஒருவன் தனது தகுதியின்மையை உணர்ந்து இரக்கத்துக்காக கெஞ்சும்போது அங்கே தேவ கிருபை வந்து நின்று அவனை தூக்கியெடுக்கிறது. ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவை மரணமே அந்தக் கிருபையை நமக்குப் பெற்றுத் தந்ததாகும். சிலுவையின்றி இரட்சிப்பில்லை!

“தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்ற அழகானதொரு நீதியைக் கூறி கர்த்தர் அந்த உவமையை முடிக்கிறார். இங்கே உயர்த்தப்படுதல் என்ற பதம் ஒருவனது பொருளாதார நிலையையோ அல்லது சமூகநிலையையோ உயர்த்துவதைக் குறிக்காமல் அவர்களது ஆன்மீக நிலையை உயர்த்துவதைக் குறிப்பதாகும். ஆயக்காரன் நீதிமானாக ஆக்கப்பட்டவனாக திரும்பிப் போனான் என்று ஆண்டவர் கூறுவதிலிருந்து இங்கு உயர்த்தப்படுதல் என்ற பதம் நீதிமானாக்கப்படுதல் என்ற அர்த்ததைக் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

சகோ.விஜய்

4 Comments
    • Jey jey
    • February 28, 2020
    • Reply

    Amen

    • Priya
    • June 4, 2022
    • Reply

    Really wonderful and meaningful thought Brother. Most of the christian leads their life without following the teachings of CHRIST. Self righteousness is the top most character reign the Christians. So, we have to the follow the Verse,
    Matthew 23 : 3. ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

    Thank you
    By the Admirable Grace of God
    Priya

      • Jayaraj Vijaykumar
      • June 22, 2022
      • Reply

      Thank you for your valuable comment sister

    • Balachandraboopathy
    • November 14, 2022
    • Reply

    Dear Sir,

    kindly arrange to send us Jesus’ massage.

Leave a Comment