நீங்கள் திமுகவா, அதிமுகவா என்று கேட்டால், “எங்கள் அரசியல் இந்த பூமிக்குரியது அல்ல” என்று சொல்லும் பலர் இஸ்ரேலா ஈரானா என்று கேட்டால் “இஸ்ரேல்” என்கிறார்கள். அதுமட்டும் ஆவிக்குரிய அரசியல் போல! புரிந்து கொள்ளுங்கள் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பகையானது ஆதியில் இருந்து ஆரம்பித்தது என்பதற்காக அது ஆவிக்குரியதாகிவிடாது.
சாலோமோன் தேவாலயத்தை மையமாக வைத்து கடைசிகால நிகழ்வுகள் இருக்கும் என்பதை அறியாமல் நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. ஆனால் இதில் இயேசுவின் சீஷராகிய நாம் என்ன செய்யவேண்டுமென்று வேதாகமம் சொல்லியிருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. நீங்கள் எருசலேம் சென்று, அல்-அக்சா மசூதியை இடித்துவிட்டு, யூதருடைய மூன்றாம் தேவாலயம் கட்டப்பட “கரசேவை” புரியுங்கள் என்று சொல்லியிருக்கிறதா? சீயோனிஸ்ட்டுகளின் அரசியலுக்கு துணை நில்லுங்கள் என்று சொல்லியிருக்கிறதா? இஸ்ரேல் போரில் வெற்றிபெற ஜெபியுங்கள் என்று சொல்லியிருக்கிறதா? எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவைகளைக் குறித்த முன்னறிவிப்பு பெற்ற ஆதி அப்போஸ்தலர்கள்கூட இதுபற்றி சபைக்கு எந்த கட்டளையும் கொடுத்துவிட்டுச் செல்லவில்லை. புறவினத்தாராகிய நம்மை விட்டுத்தள்ளுங்கள். யூதராயிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்குக்கூட அப்படிப்பட்ட கட்டளைகள் எதுவும் புதிய ஏற்பாட்டில் தரப்படவில்லை.
இரட்சிக்கப்பட்ட யூதராக இருந்தாலும், புறவினத்தாராக இருந்தாலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை ஆவியானவரோடு இணைந்து தேவராஜ்ஜியத்தைக் கட்டுவதும், கிறிஸ்துவின் மணவாட்டியாக அவருடைய வருகைக்கு ஆயத்தமாவதும் மட்டுமே. சீயோனிச அரசியலை இதற்குள் கொண்டு வந்து வலிந்து திணிப்பது மணவாட்டிக்கு ஆவிக்குரிய ஒவ்வாமையைத்தான் ஏற்படுத்தும். கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் யூதர்கள் மீது ஒரு பிரியம் இருக்கத்தான் செய்யும், அது எனக்கும்கூட இருக்கிறது. ஆனால் அதை மற்ற மனிதர்கள் மீதான வெறுப்பாகவும், போருக்கு ஆதரவாகவும் மாற்றுவது பெருங்குற்றம். அந்த வேலையத்தான் சில பிரசங்கியார்கள் இங்கு துணிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பிரசங்கியாருடைய காணொளியைப் பார்க்க நேரிட்டது. அவர் என்ன சொல்லுகிறாரென்றால், இந்த உலகிலேயே சாத்தானால் வெறுக்கப்படுவது இரண்டே இரண்டு இனங்கள்தானாம், ஒன்று யூதர்கள், மற்றொன்று கிறிஸ்தவர்கள். நீங்கள் கிறிஸ்தவர்களாய் இருந்துகொண்டு யூதர்களை வெறுத்தால் உங்களுக்குள்ளும் சாத்தானின் ஆவி இருக்கிறது என்கிறார். சரி, அது உண்மையாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், அப்படியானால் அதில் இன்னொரு பக்கமும் இருக்கிறதல்லவா? யூதர்களாய் இருந்துகொண்டு கிறிஸ்துவையும், கிறிஸ்தவர்களையும் வெறுப்பவர்களுக்குள்ளும் அதே சாத்தானின் ஆவிதான் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அந்தப் பக்கத்தைக் குறித்து அவர் வாயே திறக்கவில்லை. எப்படி இருக்கிறது பாருங்கள்! யூதர்களை வெறுத்தால் உங்களுக்குள் சாத்தானின் ஆவி இருக்கிறது என்பதை கிறிஸ்தவர்களிடம் வந்து தைரியமாகச் சொல்லும் இவர், யூதர்களிடம் போய் கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் உங்களுக்குள் சாத்தானின் ஆவி இருக்கிறது என்று தைரியமாக சொல்லுவாரா? சொல்லியிருக்கிறாரா?
உண்மையில் கிறிஸ்தவர்கள் யாருக்கும் யூதர்கள்மீது வெறுப்பு இல்லை. அவர் பேச வேண்டியது யூதர்களிடம்தான். அவர்கள்தான் கிறிஸ்துவை இன்னும் மேசியாவாக ஏற்றுக்கொள்ளாமலும், அவரைத் தொழுதுகொள்ளாமலும் இருக்கிறார்கள். சாத்தான் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மட்டும் வெறுக்கவில்லை. அவன் மொத்த மனித குலத்தையே வெறுக்கிறான். சக மனிதன்மீது வெறுப்பை கொண்டிருக்கிறவன் எவனும் சாத்தானின் ஆவியால் பாதிக்கப்பட்டவன்தான். நீங்கள் இஸ்ரேலை ஆதரித்தாலும், எதிர்த்தாலும், ஜெபித்தாலும், ஜெபிக்காவிட்டாலும் கடைசி கால நிகழ்வுகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. அப்படி சபையால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால் கர்த்தர் அதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் பேசியிருப்பார். தேவபிள்ளையாக நீங்கள் தலையிட்டு ஒரு காரியத்தை செய்து அந்திகிறிஸ்து எழும்புவதைத் தடுக்க முடியுமானால் தாராளமாகச் செய்யுங்கள்.
உண்மையில் நீங்கள் இஸ்ரவேலருக்கு ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லுங்கள். அதைத்தவிர வேறெதையும் செய்யச்சொல்லி வேதம் நமக்கு அறிவுறுத்தவில்லை. இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது(ரோமர் 10:1). சீயோனிச பிரசங்கியார்களிடம் நான் கேட்டுகொள்வது என்னவென்றால் நீங்கள் இங்கு வந்து யூதர்களுக்காக கிறிஸ்தவர்களிடம் பேசுவதால் என்ன ஆகப்போகிறது? அங்கே போய் யூதர்களிடம் அவர்கள் “நசரேயன்” என்று அழைக்கும் இயேசுவுக்காக பேசுங்கள். ஆத்தும ஆதாயம் செய்த புண்ணியமாவது கிடைக்கும்.
பிரியமானவர்களே! மத்தியக் கிழக்கில் நடந்து கொண்டிருப்பதாக நாம் பார்த்துக்கொண்டிருப்பது வீடியோ கேம் அல்ல. இரத்தமும் சதையுமான மனிதர்கள் அங்கே மீளாத் துயரத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வரலாறு காணாத கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சிந்தப்படுவது யூத இரத்தமாக இருந்தாலும், பாலஸ்தீனிய இரத்தமாக இருந்தாலும், ஈரானிய இரத்தமாக இருந்தாலும், லெபனானிய இரத்தமாக இருந்தாலும் அது தேவசாயலாகப் படைக்கப்பட்ட மனிதனுடைய இரத்தம். அப்பாவி பொதுமக்களின் இரத்தம், பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தம். நம்முடைய ஜெபங்கள் இஸ்ரேலின் வெற்றிக்காக அல்ல, மத்தியக் கிழக்கின் சமாதானத்துக்காக இருக்கட்டும். யுத்தத்தை விரும்புகிறவனும், ஆதரிக்கிறவனும் கிறிஸ்தவனாக மட்டுமல்ல மனிதனாகவே இருக்க முடியாது.