கவிதைகள்

நம்மை நாமே சோதித்தறிந்தால்…

By சகோ.விஜய்

March 26, 2017

இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா?

கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா?

எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா?

வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா?

கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா?

சபை சொத்துக்கள் பெருகுகின்றன அதில் அநாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் பங்குண்டா?

விதவிதமாய் சிலுவைகள் விற்கப்படுகின்றன, சிலுவை சுமக்கப்படுகிறதா?

இறைப்பணியாளர் பெருகுகிறார்கள், இறையரசு வளருகிறதா?

நற்செய்திக் கூட்டங்களுக்கு பஞ்சமில்லை மெய்யான மனந்திரும்புதல் இருக்கிறதா?

ஆவியானவர் ஆவியானவர் என்கிறார்கள் அவர் தரும் வெற்றி வாழ்க்கை இருக்கிறதா?

எழுப்புதல் எழுப்புதல் என்கிறார்கள் சர்ச்சுக்குள் தூங்குபவர்களையாகிலும் எழுப்பியிருக்கிறார்களா?

விசுவாசம் அதிகம் பிரசங்கிக்கப்படுகிறது பயப்படுகிறவர்கள் குறைந்துவிட்டார்களா?

பரலோக ராஜ்ஜியம் பேச்சிலல்ல பெலத்தில் இருக்கிறது (1கொரி 4:20)